கேள்வி : நமஸ்காரம். எனக்குப் பெரிய கனவுகள் இருக்கின்றன. அவை நனவாகும் என   நம்புகிறேன். ஆனால் நான் மற்றவர்களுடன் எளிதில் பழகும் ஒரு நபர் இல்லை,   அத்துடன் உலகத்தை எதிர்கொள்ளவும் நான் அச்சப்படுகிறேன். நான்   கல்லூரிப்படிப்பை முடித்தவுடன், என் கனவுகள் பொய்த்துவிடுமோ என்று அச்சப்படாமல், எனது கனவுகளை எப்படி நான் நனவாக்குவது?

சத்குரு:

உங்கள் கனவுகளை சிலகாலம் தூங்கச்செய்யுங்கள்.

மக்கள் தூங்கச் செல்லும்போது, அவர்கள் கனவு காண்கிறார்கள். நான் கூறுகிறேன், உங்கள் கனவுகளை சிலகாலம் தூங்கச்செய்யுங்கள். இப்போதே எதையாவது கனவுகண்டு, உலகத்தில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்று முடிவு செய்யாதீர்கள். ஏனென்றால் அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது, அவசரம் தேவையில்லை.

மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுக் காலங்களில், நீங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு நபராக இருப்பீர்கள். யதார்த்தத்தில், இன்றிலிருந்து நாளை வரை உள்ள காலத்தில் கூட, அது கவனிக்கத்தக்க மாற்றமாக இல்லாமல் இருந்தாலும், ஏதோ ஒன்று மாறியிருக்கலாம். ஆகவே, “உலகத்தில் நான் என்ன செய்யப்போகிறேன்?“, என்று நீங்கள் இன்றைக்கு சிந்திக்கவேண்டியது இல்லை. ஏனென்றால் மிகச்சிறிய, திறனற்ற ஒரு கனவைத்தான் நீங்கள் கொண்டிருப்பீர்கள். இப்போது உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ள வேண்டும். முழுமையான அளவில் – உடல் நிலையில், மன நிலையில், உணர்ச்சி நிலையில் மற்றும் புத்திசாலித்தனத்தில் – திறன் வாய்ந்த ஒரு மனிதராக வளர்ச்சியடையுங்கள். எல்லா நிலைகளிலும், உங்களால் முடிந்த அளவுக்கு வளர்ச்சி பெறவேண்டும்.

பந்தயத்திற்கு தயாரா?

மரத்தில் முதன்முதலாக மலரும் பூக்களைக் கிள்ளியெறிந்து, மரம் மேலும் வளர்வதற்கு மட்டும் அனுமதிக்கும் நேரம் இது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு வகையில், கனவு அல்லது குறிக்கோள் என்பதை ஒரு விதமான பந்தயமாக நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போதெல்லாம், அதை ஒரு எலிப்பந்தயம் என்று அழைக்கின்றனர். நீங்கள் எலிப்பந்தயத்தில் இடம்பெற்றால், அது முக்கியமாக யார், யாரை விட நீங்கள் மேலானவர் என்பதைக் குறித்துதான் இருக்கிறது. அதற்குத் தகுதி பெறுவதற்கு நீங்கள் ஒரு எலியாக இருக்கவேண்டும். பரிணாமத்தின் செயல்முறையில் அது ஒரு மாபெரும் பின்னோக்கிய படிநிலை. பந்தயத்தில் நீங்கள் வென்றால், அதி உன்னத எலியாக இருக்கிறீர்கள் எனலாம். ஆனால் அப்போதும் நீங்கள் ஒரு எலிதான். “நான் எந்த இடத்தில் இருப்பேன், யாரோ ஒருவருக்கு எவ்வளவு முன்னால் இருப்பேன் அல்லது பின்னால் இருப்பேன்?“ - என்ற ரீதியில் யோசனை செய்யாதீர்கள். உங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவையும் உள்வாங்குவதற்கான காலம் இது. நீங்கள் மாங்கனிகளைத் தருவதற்கான நேரம் இது அல்ல. மரத்தில் முதன்முதலாக மலரும் பூக்களைக் கிள்ளியெறிந்து, மரம் மேலும் வளர்வதற்கு மட்டும் அனுமதிக்கும் நேரம் இது.

ratrace-sadhguruquote-sgtamilfbpage-img

ஒரு பந்தயத்தில் நீங்கள் வெல்லவேண்டுமென்றால், அதற்கு விருப்பம் கொள்வதால் மட்டும் அது நிகழ்ந்துவிடாது. அதற்குத் தகுந்த இயந்திரத்தை நீங்கள் கட்டமைக்கவேண்டும். உங்களிடம் இருப்பதென்னவோ ஒரு மாருதி800, ஆனால் நீங்கள் ஃபார்முலா ஒன் ரேஸ் – ல் வெல்வதற்கு எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். எப்படி லெவிஸ் ஹாமில்டன் உங்களை முந்துவதற்கு முயன்றுகொண்டிருந்தார், ஆனால் உங்களுடைய மாருதி800 –ஐக் கொண்டு நீங்கள் அவரை முந்திச் சென்றுவிட்டதாக! இப்படி நீங்கள் கனவு காண முடியும், ஆனால் நீங்கள் பந்தயப் பாதைக்குச் சென்று எதையாவது செய்ய முயற்சித்தால், உங்களுடைய மாருதியின் நான்கு சக்கரங்களும், நான்கு திசைகளில் பறக்கும்.

ஒப்பீட்டளவில் யாரோ ஒருவரைவிட மேலானவராக இருக்க விரும்புவதென்பது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு தவறான திசையாகும்.

பந்தயத்தை வெல்வதற்கு நீங்கள் முயற்சி செய்யாதீர்கள். அதற்கு ஏற்ற தகுதியுள்ள இயந்திரத்தை மட்டும் நீங்கள் உருவாக்குங்கள் – அதுதான் மிகவும் முக்கியமானது. பந்தயத்தை வெல்வதற்கு எண்ணிக்கொண்டிருப்பது என்றால், “எனக்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்“, என்று பின்னால் திரும்பிப் பார்க்கிறீர்கள் என்பது பொருள். உங்களைச் சுற்றிலும் முட்டாள்களின் கூட்டம் ஒன்று இருந்தால், நீங்கள் சற்று மேலான முட்டாளாக இருப்பீர்கள் – அவ்வளவுதான். அந்த ரீதியில் ஒருபோதும் சிந்திக்காதீர்கள். ஒப்பீட்டளவில் யாரோ ஒருவரைவிட மேலானவராக இருக்க விரும்புவதென்பது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு தவறான திசையாகும். இது உங்களை எப்போதும் போட்டி மனப்பான்மையிலேயே வைத்திருக்கும். அனைத்துக்கும் மேல், யாரோ ஒருவர் தோல்வி பெறுவதை நீங்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்தால், அது ஒரு நோய்.

உங்கள் கனவுகளைத் தாண்டி

உங்கள் கனவுகளைத் தாண்டி உலகத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும்? எது மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறதோ, அதை நீங்கள் செய்யவேண்டுமே தவிர, உங்கள் தலைக்குள் தோன்றும் கற்பனையை அல்ல. உங்களது கற்பனை, உலகத்திற்குத் தேவையற்றதாக இருக்கலாம். பிறகு அதைச் செய்வதில் என்ன பயன் இருக்கிறது? எண்ணற்ற மக்கள் அவர்களின் கற்பனைக்கேற்ற செயல்களைச் செய்து வெவ்வேறு வழிகளிலும் உலகத்தை அழித்துவிட்டனர். உலகிற்குத் தேவையானவற்றை ஆனந்தத்துடன் நம்மால் செய்யமுடிந்தால், நமக்கு அது ஒரு வெளிப்பாடாக அமைவதுடன் மக்கள் இணைந்து நின்று அந்தச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பார்கள் – அதன் பிறகு செயல்கள் நிகழும்.

யாரோ ஒருவர் தோல்வி பெறுவதை நீங்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்தால், அது ஒரு நோய்.

சில காலங்களுக்கு உங்கள் கனவுகளைத் தூங்கச்செய்யுங்கள். ஏனென்றால் கனவுகள் வாழ்வின் கடந்தகால அனுபவத்திலிருந்து வருகின்றது. நமது கடந்த காலம், நம் எதிர்காலத்தின் மீது எந்தத் தாக்கமும் ஏற்படுத்தக்கூடாது, இல்லையென்றால் நாம் கடந்தகாலத்தை மறுசுழற்சி செய்துகொண்டே, அதுதான் எதிர்காலம் என்று எண்ணிக்கொள்வோம். எதிர்காலம் குறித்த பெரும்பாலான மக்களின் கருத்து என்னவென்றால், கடந்தகாலத்தின் ஒரு பகுதியை எடுத்து, அதன் மீது ஒப்பனை செய்துவிட்டு, பிறகு அதையே சிறிதளவு முன்னேற்றமான எதிர்காலம் என்று நினைக்கின்றனர்.

எதிர்காலம் புதியதாக நிகழவேண்டும். உங்களால் கனவிலும் காணமுடியாதவை உங்கள் வாழ்வில் நிகழவேண்டும் – உங்களுக்கான என் வாழ்த்து அதுதான். உங்களால் கற்பனை செய்யமுடியாதவை நிகழவேண்டும். உங்களால் கனவு காணமுடிந்தவை நிகழ்ந்தால், அதனால் என்ன பயன்? உங்களுக்குத் தெரிந்ததை மட்டும்தான் நீங்கள் கனவு காண முடியும். உங்களுக்குத் தெரிந்தது மட்டும் நிகழ்ந்தால், அது பரிதாபமான ஒரு வாழ்க்கை. தற்போது உங்களால் கனவிலும் காணமுடியாத ஏதோஒன்று நிகழட்டும் – அப்போதுதான், வாழ்க்கை உத்வேகமானது.

உங்கள் கனவுகளை நான் அழிக்க விரும்புகிறேன். அவைகள் அழிந்துபோகட்டும், அதனால் உங்களது முழு ஆற்றலை எட்டுவதற்கு, உங்களை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் தீவிர விருப்பம் கொள்கிறீர்கள்.

ஆசியிர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!