நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி ஒரு சுய பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோம். "நான் இப்படித்தான்" என்று தீர்க்கமாகவும் இருக்கிறோம். இது நமக்குள் ஒரு சுதந்திரமான உணர்வைத் தருகிறாதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சரி நம்மை மாற்றிக் கொள்ள சிறந்த வழியைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்?

சத்குரு:

ஒவ்வொரு மனிதனும், விழிப்புணர்வுடனோ விழிப்புணர்வின்றியோ, வாழ்க்கை என்று நாம் அழைக்கும் செயல்முறையில், தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை, ஒரு ஆளுமைத்தன்மையை உருவாக்கிக் கொள்கிறான். உங்களுக்குள் நீங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள இந்த பிம்பம் உண்மைநிலைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. அது உங்கள் சுயத்திற்கும், உங்கள் உள்தன்மைக்கும் சம்பந்தப்பட்டதல்ல. இது பெரும்பாலும் விழிப்புணர்வின்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பிம்பம்தான். தான் எப்படிப்பட்டவர் என்று ஏதோவொரு பிம்பம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. வெகு சிலர்தான் தங்களைப் பற்றிய பிம்பத்தை விழிப்புணர்வுடன் உருவாக்கியிருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் எப்படிப்பட்ட தோரணையில் செயல்படுகிறார்களோ, எப்படிப்பட்ட வெளிச் சூழ்நிலைகளை சந்திக்கிறார்களோ அதைப்பொருத்து தங்களது பிம்பங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நீங்கள் யாராக ஆக விரும்புகிறீர்கள் என்பதை வலுவாக மனத்தில் உருவாக்குவதன் மூலம் கர்மவினை பந்தங்களைக் கூட உடைத்துவிட முடியும்.

நாம் ஏன் ஒரு புதிய சுயபிம்பத்தை, நாம் உண்மையில் இருக்க விரும்பும் விதமாக விழிப்புணர்வுடன் உருவாக்கிக் கொள்ளக் கூடாது? தேவையான புத்திசாலித்தனம் இருந்தால், வேண்டிய விழிப்புணர்வு இருந்தால், உங்களுடைய இப்போதைய பிம்பத்தை மாற்றியமைத்து, முற்றிலும் ஒரு புதிய பிம்பத்தை, நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி உருவாக்கிக் கொள்ள முடியும். அது சாத்தியம்தான். ஆனால் உங்களுடைய பழைய பிம்பத்தை உதறிவிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இது பாசாங்கு செய்வதல்ல, அறியாமையுடன் செயல்படுவதை விடுத்து விழிப்புணர்வுடன் செயல்படுவது. உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு பிம்பத்தை, உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றுடனும் அதிகபட்ச ஒத்திசைவோடு இருக்கும் ஒரு பிம்பத்தை, மிகக் குறைவான உராய்வையே ஏற்படுத்தும் பிம்பத்தை, உங்கள் உள்தன்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு பிம்பத்தை நீங்கள் உருவாக்க முடியும். எந்த வகையான பிம்பம் உங்கள் உள்தன்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் உள்தன்மை மிக அமைதியாக இருப்பதை கவனியுங்கள். அது ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் மிக வலிமையான இருப்பதைப் பாருங்கள். இப்போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் கோபம், கட்டுப்பாடுகள் போன்ற மென்மையற்ற விஷயங்களை வெட்டி எறிந்துவிட வேண்டும். மென்மையான ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு புதிய சுயபிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த ஓரிரு நாட்களுக்கு இதைப் பற்றி சிந்தித்து, உங்களுக்கான சரியான பிம்பத்தை உருவாக்குங்கள்; அது உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையான இயல்பாக இருக்க வேண்டும். எந்த ஒன்றை உருவாக்குவதற்கு முன்னரும், ஏற்கனவே நம்மிடம் இருப்பதை விட நன்றாக உருவாக்குகிறோமா என்று அதை நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும். நீங்கள் தொந்தரவு செய்யப்படாத நேரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முதுகு சாய்ந்தபடி வசதியாக, தளர்வாக அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி, உங்களை மற்றவர்கள் எப்படி நினைக்க வேண்டும் என்பதை மனத்தில் உருவாக்குங்கள். ஒரு முற்றிலும் புதிய மனிதனை உருவாக்குங்கள். அந்த மனிதனை எத்தனை விரிவாகப் பார்க்க முடியுமோ அத்தனை விரிவான விவரங்களுடன் பாருங்கள். இந்த புதிய பிம்பம் இன்னும் அதிக மனிதத்தன்மையுடன், அதிக திறனுடன், அதிகமான அன்புடன் இருக்கிறதா என்று பாருங்கள்.

இந்த புதிய பிம்பத்தை எவ்வளவு ஆற்றலுடன் கற்பனை செய்யமுடியுமோ அவ்வளவு ஆற்றலுடன் கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்குள் அதற்கு உயிர் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் சக்தி வாய்ந்தவையாக இருந்தால், உங்கள் கற்பனைத் திறன் ஆற்றல் மிகுந்ததாக இருந்தால், உங்களால் கர்மாவின் பந்தங்களைக் கூட இதன் மூலம் உடைத்துவிட முடியும். நீங்கள் யாராக ஆக விரும்புகிறீர்கள் என்பதை வலுவாக மனத்தில் உருவாக்குவதன் மூலம் கர்மவினை பந்தங்களைக் கூட உடைத்துவிட முடியும். இது உங்கள் எண்ணம், உணர்ச்சி மற்றும் செயல்களின் அத்தனை கட்டுப்பாடுகளையும் கடந்து செல்வதற்கான ஒரு வாய்ப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.