இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தான் சமீபத்தில் இயற்றிய "கலத்தல்" எனும் கவிதையின் பின்னணியை விளக்குவதுடன், மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் கூட போராடுவதன் காரணத்தை சத்குரு விளக்குகிறார். அதோடு மனக்கவலையின் ஆணிவேரை அடையாளம் காட்டி களையச் சொல்கிறார்.

கலத்தல்

உங்கள் உடலே ஒருநாள்
பச்சைப்பசும் இலையாகவும் செந்நிற
மலராகவும் உருமாறும் என்பதை
உணர்வதில் உள்ள ஆனந்தமே அலாதி
காலப்போக்கில் ஒருவர் பூமியில்
காலடி வைத்ததன் தடையம்
ஏதும் இல்லாமல் மறையும்
நாம் பாதம் பதித்து நடக்கும்
புல்வெளியும் நாம்தான்
ஒவ்வொரு இலையும், மலரும்
நாம்தான். இந்த கலத்தலை
உயிரில் மட்டுமே உணரமுடியும்.
உயிராய் உள்ளதன் சாரம் முழுவதும்
இக்கலத்தலில் உள்ளது.

எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் சமீபத்தில் காலமானார். நான் அமெரிக்காவின் ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ் மையத்தில், உயிர் பொங்கித் ததும்பிய அந்த இயற்கை அழகுமிக்க பள்ளத்தாக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் காலமானதை அறிந்துகொண்டதால், என்னுள்ளிருந்து இரண்டு கவிதைகள் வெளிப்பட்டன. இங்கே ஒன்று உங்களுக்காக. இரத்தமும் சதையுமாக இங்கு இருக்கும்போது உங்களால் இந்த கலத்தலை உணர முடியுமெனில், இந்த அனுபவத்தின் முழுமையே பொதுவாக தன்னை உணர்தல் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாம் முக்தியைப் பற்றி பேசுவது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்வதே பலருக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சிலர் மருந்துகள் பக்கம் திரும்புகின்றனர், சிலர் மதுபானங்கள், சிலர் போதைப்பொருட்கள் என்று செல்கிறார்கள். மற்றவர்களோ அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபடி இருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சங்கரன் பிள்ளை, தன்னுடைய ஒரு அவதாரத்தில் மனைவியை வார்த்தைகளால் தொடர்ந்து கொடுமைப்படுத்தும் ஒரு கணவனாக இருந்தார். ஒருநாள் தனது திட்டும் படலத்தின் நடுவில் திடீரென வசைப்பாட்டை நிறுத்தி, "நான் சதா சர்வகாலமும் உன்னை திட்டிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் நீ ஒருவார்த்தை கூட என்னை பதிலுக்கு திட்டாமல் இருக்கிறாயே. ரகசியமாக ஈஷா யோகா செய்கிறாயா? என்ன தந்திரமிது?" என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, "நான் இப்போதுதான் கழிவறையை சுத்தம் செய்தேன்" என்றாள். அதற்கு அவர், "என்னது?! கழிவறையை சுத்தம் செய்வதற்கும் நீ அமைதியாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?" என்றார். அதற்கு அவள், "உங்களுடைய பல்தேய்க்கும் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்தேன்" என்றாள்.

உங்கள் மனதின் செயல்பாட்டில் தொலைந்திருக்கும் வரை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. மனிதர்களால் தங்கள் மனக் கட்டமைப்பை கையாள முடியாமல் இருப்பதற்கு ஒரு அடிப்படைக் காரணம், அவர்கள் வேறொருவரை விட சிறப்பாக இருக்க விரும்புகிறார்கள். ஒருமுறை சங்கரன் பிள்ளை தனது நண்பனுடன் வெள்ளியங்கிரியில் மலையேறிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுத்தை தங்களை பசியுடன் பார்த்ததைக் கண்டார்கள். சங்கரன் பிள்ளை தனது முதுகுப்பையில் வைத்திருந்த புதிய ஓடுவதற்கான ஷூவை எடுத்து அணிந்துகொள்ள ஆரம்பித்தார். அதைக் கண்ட அவரது நண்பன், "அட முட்டாளே, இது நாம் ஓட்டம் பிடிக்க வேண்டிய நேரம்! எதற்காக இப்போது ஷூ அணிகிறாய்? சிறுத்தையை விட வேகமாக ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா?" என்றார். அதற்கு சங்கரன் பிள்ளை சலனமின்றி, "நான் சிறுத்தையை விட வேகமாக ஓடவேண்டிய அவசியமில்லை, உன்னைவிட வேகமாய் ஓடினால் போதும்" என்றார். ஒருபோதும் ஒரு சிறுத்தை இரண்டு மனிதர்களை ஒரே வேளையில் உண்டதில்லை.

இதுதான் பலப்பல மனிதர்கள் இயங்கும் விதத்தின் பின்னணியில் இருக்கும் தத்துவம். அவர்கள் தங்களுக்கு அருகில் இருப்பவரைவிடச் சற்று மேலாக செயல்பட்டால் போதுமென்று இருக்கிறார்கள். இதை நாம் மாற்ற முயற்சிசெய்து வருகிறோம். இன்னொருவர் எந்தப்பக்கம் ஓடுகிறார் என்று கூட பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை சிறப்பாகச் செய்கிறீர்களா என்று பாருங்கள், அதாவது உங்கள் உச்சபட்ச ஆற்றலுடன் ஓடுகிறீர்களா என்று பாருங்கள். இன்னொருவர் உங்களைவிடச் சிறப்பாக ஓடுகிறாரா அல்லது மோசமாக ஓடுகிறாரா என்பது விஷயமல்ல. நீங்கள் உயிராக உணர்கிறீர்களா என்பதுதான் முக்கியம். உயிரின் தன்மை வருத்தமோ, சலனமோ, காழ்ப்போ, கோபமோ, இது சார்ந்த வேறெதுவோ அல்ல. ஒரு புல்கீற்று, ஒரு மரம், ஒரு விலங்கு என்று வேறெந்த உயிர்வடிவத்தை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், அவற்றின் அடிப்படைத் தேவைகள் கவனிக்கப்பட்டுவிட்டால் உயிர் குதூகலமாக நடக்கிறது. மனிதர்கள் மட்டுமே மனக்கவலையில் ஆழ்கிறார்கள், ஏன்? ஏனெனில் அவர்கள் உயிராக உணர்வதில்லை. அவர்கள் வெறும் எண்ணங்கள், உணர்வுகள், கருத்துக்கள், முன்முடிவுகள் மற்றும் இதர குப்பைகளின் குவியலாக இருக்கிறார்கள்.

உயிராக உணர்வதற்கு ஒரே வழி, உங்கள் மனதின் செயல்பாட்டிலிருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்வதுதான். ஆதியோகி வழங்கிய நூற்றிப்பன்னிரண்டு வழிகளும், உங்கள் மனது எல்லாப்பக்கமும் சிதறுவதை விடுத்து நோக்கத்துடன் செயல்படும் இடத்திற்கு இட்டுச்செல்வதாகவே அடிப்படையில் அமைந்துள்ளன. குடித்தல், மாத்திரை போடுதல், அல்லது கண்மூடி ஒரு குறிப்பிட்ட விதத்தில் சுவாசிப்பதும் கூட, உங்கள் மனதைச் சற்று இடைவெளி கொடுக்க வைப்பதற்குத்தான். நிரந்தரமான தீர்வு வேண்டுமென்றால், எது நீங்கள் எது நீங்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிய வேண்டும். நீங்கள் அல்லாதது உங்களுடன் குறுகிய காலத்திற்கே இருக்கிறது. இதில் உங்கள் உடல், எண்ணங்கள், குடும்பத்தினர், நண்பர்கள், உங்கள் வேலை, உடைமைகள், போன்றவை அனைத்தும் உள்ளடங்கும்.

பெரும்பாலான மனிதர்களைப் பிடித்து வைத்திருப்பது அவர்களின் உடலும் மனமும்தான். அவற்றை நீங்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, அதனால் நீங்கள் வேதனைப்படவும் முடியும், உயிருடன் ஒன்றி இருக்கவும் முடியும். உயிராக இருப்பதற்கு முயற்சி தேவையில்லை. நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன், நீங்கள் உயிர்தான். மக்கள் தங்களைத் தாங்களே மதுவிலும், போதையிலும், அளவுக்கு மீறிய உணவிலும், வேறொன்றிலும் மூழ்கடித்துக்கொள்ள விரும்புவதன் காரணம், உயிராக இல்லாது இருப்பதே தீர்வு என்ற முடிவுக்கு அவர்கள் எப்படியோ வந்துவிட்டார்கள். ஆனால் அது ஒரு தீர்வல்ல, வெறும் ஏமாற்றமே. அதனால்தான் உயிராக இருப்பது குறித்த விழிப்புணர்வுடன் நீங்கள் இருக்கவேண்டும். அதனால்தான் நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்று நான் தொடர்ந்து உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

நடந்து, பேசி, நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் செய்தாலும், உயிராக இருக்கமுடியாத ஒரு இயந்திரம் போல வாழாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, நீங்கள் உயிர் என்பதையே அது நிரூபிக்கிறது. நீங்கள் இறந்தாலும் அதற்குமுன் நீங்கள் உயிராக இருந்ததையே அது நிரூபிக்கிறது, இல்லாவிட்டால் உங்களால் இறக்க இயலாது. இந்த நிதர்சனத்திலிருந்து உங்களால் தப்பித்துக்கொள்ள முடியாது, உயிரின் தந்திரங்களாலும் முடியாது, மரணத்தாலும் முடியாது. இது உங்களைப் பிடித்து வைத்திருக்கும் பொறியல்ல, இது ஒரு அபாரமான சாத்தியம். நீங்கள் நடமாடும் மண் உயிராக உருமாற விழைகிறது. அந்த விழைவு இல்லாவிடில் அது மரமாக எழுந்து நிற்காது. அடிப்படையில் பூமியிலுள்ள அனைத்தும் உயிராக இருக்கவே விழைகிறது, உயிரின் இன்னும் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறது. இந்த ஏக்கத்தை சமாதானப்படுத்த இரண்டே வழிகள்தான் உள்ளன, உயிராக இல்லாததுபோல நடிப்பது ஒருவழி, ஞானோதயம் இன்னொரு வழி. இரண்டும் அதே பலனைத் தந்தாலும் இரண்டும் இருவேறு துருவங்கள்.

உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளோருக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான அடிப்படையான ஒன்று, முழுவீச்சில் உயிராக இருப்பதே. நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட விதத்திலும் இருக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உயிர்தான், உங்கள் உடல், மனம் உட்பட மற்ற அனைத்தும் உயிருக்கு உபகரணங்கள் மட்டுமே. உபகரணங்கள் உயிர் செயல்பட வழிசெய்து ஊக்கப்படுத்துவதற்காக உள்ளனவே தவிர, உயிர்மீது ஆதிக்கம் செலுத்தி ஆக்கிரமிப்பதற்கு அல்ல. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும், நீங்கள் வைத்திருக்கும் அனைத்தும், உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உட்பட அனைத்தும் உயிரின் உபகரணங்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வுடன் இருந்தால், மனச்சோர்வு வருவதற்கான பேச்சிற்கே இடமில்லை. ஆனால் மனக்கவலைத் தத்துவங்களைப் பரப்பும் வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நான் இப்படி சொல்லக்கூடாது என்று நினைப்பார்கள். நோய்களையும் மனிதர்களின் வேதனையைப் பற்றியும் பேசுவதன் மூலம் தங்கள் பிழைப்பை சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அதிகமாக பணம் பார்ப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். பிரச்சனையின் ஆணிவேரை நீங்கள் அடையாளம் காட்டினால் அவர்களுக்குப் பிடிக்காது. நான் சொல்வது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம், ஆனால் மனச்சோர்வு நீங்கள் உருவாக்குவது என்பதை நீங்கள் உணரும்வரை அதிலிருந்து வெளிவர வழியில்லை. மருத்துக் கம்பெனிகள் மனச்சோர்வைக் கொண்டாடுகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், "நான்"-"நான் அல்லாதது", இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணருவது மட்டுமே. எது நீங்கள் அல்லாததோ, அதை, அதன் தன்மைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதன்மீது உங்கள் பிடி எத்தகையதாக இருந்தாலும், நீங்கள் விரும்பும்போது உங்கள் பிடியை உங்களால் தளர்த்த முடியாவிட்டால், நீங்கள் பிரச்சனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வீர்கள். நீங்கள் இறக்கும் தருவாயில், எப்படியும் எல்லாவற்றின் மீதும் உள்ள உங்கள் பிடியைத் தளர்த்தத்தான் போகிறீர்கள். மரணத்தின் தத்ரூபமான சித்தரிப்புகளை நீங்கள் திரைப்படங்களில் கண்டிருக்கக்கூடும், ஒருவர் தன் பிடியைத் தளர்த்துவார், உயிர் பிரிந்துவிடும். உயிருடன் இருக்கும்போதே, உடல், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மீதுள்ள பிடியைத் தளர்த்தினால், நீங்கள் உற்சாகமாக மாறுவீர்கள். இது கால்ஃப் விளையாடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது, இறுகப் பிடித்தால் எங்கும் போய்ச்சேராது. உங்கள் பிடியைத் தளர்த்தினால், வாழ்க்கையில் சுமுகமாக சவாரி செய்வீர்கள்.

Love & Grace