உங்கள் கோப்பை நிரம்புகிறதா...? - ஒரு ஜென்கதை சொல்லும் செய்தி!
காலியான கோப்பையாக வந்தால், அதில் எதையாவது நிரப்ப முடியும். ஏற்கனவே பல குப்பைகளைச் சேர்த்து நிரம்பி வழியும் மூளைகளுக்கு எதைச் சொல்லித் தர முடியும்.
ஜென்னல் பகுதி 11
எத்தனையோ விஷயங்களைக் கற்று அறிந்த ஒரு பேராசிரியர் ஜென் குருவைத் தேடிப் போனார். ‘‘எனக்கு ஜென்னை போதியுங்கள்’’ என்றார். ‘‘முதலில் தேநீர் அருந்துங்கள்’’ என்று சொன்னார் குரு. பேராசிரியர் கோப்பையை நீட்ட, அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிக்கொண்டே இருந்தார். தேநீர் வழிந்து வெளியே ஓடியது. ‘‘என்ன செய்கிறீர்கள்?’’ என்று பேராசிரியர் பதறினார்.
ஜென் குரு புன்னகைத்தார்.
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
பள்ளிக்கூடம் போய் கற்கிறீர்கள். கல்லூரி சென்று கற்கிறீர்கள். இணையதளங்கள் மூலம் ஆயிரம் விஷயங்கள் அறிகிறீர்கள். கடைசியில் யோகாவும் கற்க வருகிறீர்கள். கற்றுத் தந்ததும், ‘’அடுத்த நிலையையும் சொல்லித் தருவீர்களா?’’ என்று கேட்கிறீர்கள்.
உங்களைச் சந்தோஷப்படுத்த மேலும் மேலும் சொல்லிக் கொடுத்துக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு கேளிக்கையாகக் கற்கும் வரை, அது உங்களுக்கு எந்தவிதப் பலனும் கொண்டுதராது.
ஏகப்பட்ட காரண அறிவுடன் ஒரு குருவிடம் வந்தால், அவரைப் பற்றிய தீர்மானங்களை உருவாக்குவதில் இருந்து நீங்கள் தப்ப முடிவதில்லை. அவர் எப்படி அமர்கிறார், எப்படிப் பேசுகிறார் என்று ஒவ்வொன்றையும் கண்காணித்து அவரைப் பற்றி பலவாறான கருத்துக்களை உருவாக்குவதில் தான் உங்கள் கவனம் போகும். அவரிடம் இருந்து பெறவேண்டியது என்ன என்பதில் கவனம் பதியாது. இதனால்தான் பல குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு அவ்வப்போது தரிசனம் தந்துவிட்டு அவர்களிடம் இருந்து விலகியே இருந்தார்கள்.
காலியான கோப்பையாக வந்தால், அதில் எதையாவது நிரப்ப முடியும். ஏற்கனவே பல குப்பைகளைச் சேர்த்து நிரம்பி வழியும் மூளைகளுக்கு எதைச் சொல்லித் தர முடியும். புதிதாகச் சொல்லித் தருபவை மேலும் குப்பைகளாகத்தான் நிரம்பி வழியும் என்பதையே ஜென் குரு பேராசிரியருக்கு நுட்பமாகத் தெரிவித்தார்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418