உங்கள் ஆன்மீக சாதனா வெற்றியடைய...
யோக வகுப்புகளில் கலந்து கொள்ளும்போது நன்றாகத்தான் இருக்கிறது. பயிற்சிகளும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல... எங்கோ தொலைந்து போகிறோமோ என்று தோன்றுகிறது. ஏன் இப்படி? இதை எப்படி சமாளிப்பது?
சத்குரு:
Subscribe
இப்பிரபஞ்சத்திற்கே அடிப்படையான உண்மையை, சமஸ்கிருதத்தில் 'பிரம்மா' (பிரம்மம்) என்பார்கள். 'பிரம்மன்' என்பது அவ்வுண்மையின் உருவகம். ஒருவரின் புரிந்துகொள்ளும் திறனில் ஒரு சிறு பிசகு ஏற்பட்டால் அதை 'பிரம' (பிரமை) என்பார்கள். புரிந்துகொள்ளும் திறனில் உண்டாகும் ஒரு சிறு வித்தியாசம் தான், அறியாமைக்கும், அறிதலுக்குமான இடைவெளி. அந்த சிறு சறுக்கல் நடந்துவிட்டால், பிரம்மாண்டமான உண்மையும் கூட பிரமையாய் ஆகிடும். இதனால் தான் ஆன்மீகத் தேடுதல் என்ற பெயரில் இன்று பல முட்டாள்த்தனங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ஆன்மீக முட்டாள்கள்
இவ்வுலகில் பல முட்டாள்கள் இருக்கிறார்கள் தான், ஆனால் மத, ஆன்மீக முட்டாள்களுக்குத் தான் அதில் முதலிடம். ஏனெனில் அவர்கள், கடவுளின் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது சாஸ்திரங்களின் சான்றிதழ் பெற்றவர்கள். உங்கள் முட்டாள்த்தனம் உங்களுடையது என்றாலாவாது அதை சரிசெய்ய வழிபார்க்கலாம், ஆனால் உங்கள் முட்டாள்த்தனம் கடவுளின் சான்றிதழ் பெற்றுவிட்டது என்றால், அதற்கு மாற்றே கிடையாது. பிரமைகளை எப்போது நம்பிக்கைகளாக மனிதர்கள் மாற்றிக் கொள்கிறார்களோ, அவர்கள் கான்கிரீட் சுவர் போல் இறுக்கம் பெற்றுவிடுகின்றனர். அதன்பின் அவர்களை அதில் இருந்து அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. பின், ஈடுயிணையில்லா சாத்தியமாய் இருந்திருக்க வேண்டியது, பிரமையின் ஏமாற்றுச் சுழற்சியில் சிக்கிவிடும்.
இது அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் நடந்தது. ஒரு சிறுவன் தங்கள் குடும்பத்தில் இருந்த ஒரு பழமையான பைபிள் புத்தகத்தைத் திறந்தான். அதை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அதனடுவே இருந்து, காய்ந்து சருகாகிவிட்ட ஒரு இலை விழுந்தது. அதைப் பார்த்து அசந்து போன சிறுவன், அவன் தாயை அழைத்து, "பாருங்கள் அம்மா, பைபிளுக்குள் இருந்து நான் எதைக் கண்டெடுத்திருக்கிறேன் என்று" என்றான். அவனது தாயும், "அப்படி எதைக் கண்டெடுத்தாய்?" என்று வினவினாள். வியப்போடு மொழிந்தான் சிறுவன், "ஆதாமின் உள்ளாடை..." என்று!
சம்ஸ்க்ருதி
மனிதர்கள் பலவற்றையும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். எதையும் தவறாகப் புரிந்து கொள்ளாமல், ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து நடக்கவேண்டும் எனில், அதற்கு நேர்மையும், நாணயமும், உணர்ச்சிவசப்படா நிலையும் வேண்டும். நமது 'சம்ஸ்க்ருதி' குழந்தைகள் இப்பாதையில் தான் நடக்கிறார்கள். 'சம்ஸ்க்ருதி' என்பது, 'படைப்பின் மூலத்தை நோக்கிய முழுமையான தீவிரமான ஆர்வம், சுற்றி இருக்கும் உயிர்களிடத்தில் கருணை, தனக்கும் தன் தேவைக்கும் உணர்ச்சிவசப்படாத நிலை' என்று பொருள்படும்.
இன்றைய உலகம் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது: 'தனக்கும் தன் தேவைக்கும் முழுமையான தீவிரமான ஆர்வம், சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உணர்ச்சிவசப்படாத நிலை, கருணைக்கோ, வானம் பார்த்துக் காத்திருக்கின்றனர்'. இதுதான் பிரம்மத்திற்கும், பிரமைக்குமான வித்தியாசம். ஒரு சின்ன குழறுபடி தான்... ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. சம்ஸ்க்ருதி என்பது இந்தச் சின்னக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. இளம் வயதிலேயே இப்பாதையில் நடப்பது இக்குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும் பாக்கியம்தான். ஆனால் அதற்காக, இப்பாதை உங்களுக்கானதல்ல என்று நீங்கள் நினைத்திடவேண்டாம்.
உங்களுக்குள் சரியான சூழ்நிலையை நீங்கள் வளர்த்துக் கொண்டுவிட்டால், உங்களுக்குக் கொடுக்கப்பாட்டிருக்கும் சிற்சிறு பயிற்சிகளும் உங்களுள் பிரமாதமாய் வேலைசெய்யும். ஆன்மீகப் பாதையும் உங்களுக்கு மிக எளிதானதாக, இயல்பானதாக ஆகிடும். உள்சூழ்நிலை சரியாக இல்லையென்றால், இது மிகக் கடினமான வேலையாகிடும். வளர்ச்சியடைந்து, முழுமையாய் மலர்வது என்பது ஒவ்வொரு மனிதனின் இயல்பு. மண் சரியாய் இருந்தால், விதைக்கப்பட்ட விதை நன்றாய் வளர்ந்து மலர்வது இயற்கை தானே? ஆனால் மண் சரியாக இல்லையென்றால், செடி வளர்வதற்கு பற்பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
பிரம்மத்தை உணர்ந்திட (அ) தன் உண்மையான நிலையை அடைந்திட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய சாதகமான உள்சூழ்நிலை: 'படைப்பின் மூலத்தை நோக்கிய முழுமையான, தீவிரமான ஆர்வம்; சுற்றி இருக்கும் எல்லா உயிர்களிடத்திலும் கருணை; தனக்கும் தன் தேவைக்கும் உணர்ச்சிவசப்படாத நிலை.' கருணை என்பது இதற்கோ, அதற்கோ மட்டும் அல்ல... சுற்றி இருக்கும் எல்லா உயிர்களிடத்திலுமே! காரணம், கருணைக்கு பேதமில்லை. உணர்ச்சித் தீவிரத்திற்கும், ஆர்வத்திற்கும் மட்டும்தான் 'இது வேண்டும், அது வேண்டாம்' என்பதெல்லாம். கருணைக்கு அல்ல. கருணை எல்லாவற்றையும் அரவணைக்கும். உள்சூழ்நிலையை இவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதை இயல்பாகவே முளைவிட்டு, வளர்வது மட்டுமின்றி மலரவும் செய்யும். அதை யாராலும் தடுக்க முடியாது.