உள்நிலையிலும், புறநிலையிலும் தூய்மை அடைய என்ன வழி?

குருபூஜையில் பாடப்படும் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, உள்நிலையிலும், புறநிலையிலும் தூய்மை அடையும் வழியை நமக்கு சொல்கிறார் சத்குரு.
 

குருபூஜையில் பாடப்படும் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, உள்நிலையிலும், புறநிலையிலும் தூய்மை அடையும் வழியை நமக்கு சொல்கிறார் சத்குரு.

சத்குரு:

உங்களைப் பற்றி உங்களுக்கென்று பெரிய அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் என்னோடு அமர்கிறபோது உங்களது எல்லா ஏமாற்றுதல்களும் குலைந்து போய் வெறுமனே இருக்கிறீர்கள். ஒரு சத்குருவுடன் இருப்பதன் முக்கிய நோக்கமே இதுதான். இந்த ஏமாற்றுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதை இருப்பது போல் பார்க்கத் தொடங்குங்கள். உங்கள் அபத்தமான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். இதுவரை நீங்கள் எப்படிப் பயின்றிருக்கிறீர்களோ, அதைத் தாண்டி உங்களால் சிந்திக்க முடியாது. எனவே, வெறுமனே பாருங்கள். உயர்ந்தது, தாழ்ந்தது, சரி, தவறு என்பதெல்லாம் உங்கள் மனதில்தான் இருக்கிறது. விஷயங்களை வெறுமனே பார்க்கிறபோது எல்லாம் சரியாக இருக்கிறது.

மிக உயர்ந்த ஒன்றில் நீங்கள் லயிக்கிறபோது உள்நிலையிலும், வெளிநிலையிலும் உங்கள் தூய்மை தானாகவே நிகழ்கிறது.

நீங்கள் ஈஷா யோகா மையத்தில் நின்று பார்த்தால், இங்கிருக்கும் புல்வெளி, மரங்கள், இந்த மலை, அந்த பெரியமலை, சிறியமலை எல்லாமே இந்த அழகிய காட்சியின் அங்கங்கள் தான். மலையைவிட மேகம் அழகாக இருக்கிறதா? அல்லது மேகத்தைவிட இந்த ஆகாயம் அழகாக இருக்கிறதா? எல்லாமே ஒன்றாகத் தான் தோன்றுகிறது. நீங்கள் நின்று கொண்டு ‘இது மலை, இது மேகம் என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கினால் எல்லாம் தனித்தனியாகத் தெரிகிறது. இப்படி நீங்கள் எண்ணத் தொடங்குகிறபோது பல்வேறு பிறவிகளாக உங்களைத் தொடர்கிற கர்மவினைகள் உங்களை எதிர்கொள்கின்றன. வெறுமனே நீங்கள் இங்கு இருந்தால், இருப்பவற்றை இருப்பதைப்போல் பார்த்தபடி இருந்தால், நீங்கள் மிகவும் வித்தியாசமான தன்மை வாய்ந்த மனிதராகிவிடுவீர்கள். முற்றிலும் வேறுபட்ட ஒருநிலையை எட்டுகிறீர்கள்.

உங்கள் மனதில் சிக்கியிருக்கும்போது நீங்கள் எங்கேயும் சென்றடைய இயலாது. கற்பனைகளைத்தான் வளர்த்துக் கொள்வீர்கள். குருபூஜையின் முதல் பத்தி இதுதான்.

‘அபவித்ர பவித்ரோவா
சர்வாவஸ்தாங் கதோபிவா
யஸ்மரேத் புண்டரீ காக்ஷம்
சபாஹ்யா ப்யந்தர ஷுசிஹி’

‘யாராக இருந்தாலும் சரி. அவர் புனிதமானவரோ, புனிதமில்லாதவரோ அவர் எந்த நிலையை எட்டியிருந்தாலும் தாமரைக் கண்ணுள்ள கடவுள் மீது தியானிக்கத் தொடங்கிவிட்டால் உள்நிலையிலும், புறநிலையிலும் அவர் தூய்மையடைகிறார்’ என்பது இதன் பொருள். அப்படியானால் நீங்கள் உங்களை நீங்களே எடை போடுகிற வேலையில் ஈடுபடுவதில்லை. உங்களை நீங்களே மேம்படுத்த முயலவில்லை. உங்களை நீங்களே தூய்மைப்படுத்த முயலவில்லை. மிக உயர்ந்த ஒன்றில் நீங்கள் லயிக்கிறபோது உள்நிலையிலும், வெளிநிலையிலும் உங்கள் தூய்மை தானாகவே நிகழ்கிறது. உங்களை நீங்களே புனிதப்படுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் எவ்வளவுக்கெவ்வளவு முயலுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உள்ளே குழப்பங்கள் தான் நிகழும். எது மிக உயர்ந்ததோ, அதிலேயே லயித்து இருங்கள். அது கடவுளாக இருக்கலாம், குருவாக இருக்கலாம், அல்லது ஆகாயத்திலேயே லயித்து இருங்கள். வெறுமனே அதனோடு இருங்கள். அதில் இருக்கிற கடவுள் தன்மையை எல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்காதீர்கள். ஸ்மரணையில் ஈடுபடுங்கள். ஸ்மரணை என்றால் மிக உயர்ந்த ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது. இந்நிலையில் எல்லாமே மாறுகிறது. உள்நிலையிலும், புறநிலையிலும் தூய்மை தானாகவே நிகழ்கிறது.

ஏன் பலருக்கு கோவில்கள் பயனளிப்பது இல்லையென்றால், அவர்கள் கடவுளைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். அவர்கள் ஸ்மரணை நிலைக்கு வருவார்களேயானால் மிகப் பெரிய மாற்றத்தை உணருவார்கள். மனிதர்களால் கடவுளை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. எங்கேயாவது பார்த்திருந்தால் நினைவு வைத்துக் கொள்ள முடியும். ஒரு குழந்தையின் முகத்திலோ, உங்கள் மனைவியின் முகத்திலோ, உங்கள் காதலியின் முகத்திலோ, ஒரு மலரிலோ, மேகத்திலோ கடவுளின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்திருக்குமேயானால் அதை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்கள் கடவுளைப் பற்றி சிந்திக்கத்தான் முடியும். ஸ்மரணை என்றால் நிகழ்ந்துவிட்டது என்று பொருள். இதில் எல்லாமே தூய்மையாக இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது, சீர்செய்வது என்றெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் ஸ்மரணையிலேயே ஈடுபடுங்கள். உங்களுக்கு அதுதான் கடவுள். அதிலிருந்தே எல்லா மாற்றங்களும் ஏற்படும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1