உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா?
வெகு சிலரால் மட்டும் பல சூட்சும விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் பலரால் சாதாரண விஷயங்களைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு அவரவர் தங்கள் உடலை நடத்தும் விதம்தான் காரணம் என்கிறார் சத்குரு! இந்த உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா? தொடர்ந்து படித்து அறியுங்கள்!
 
உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா? udalai kondu prapanchathaiye download seyya mudiyuma?
 

வெகு சிலரால் மட்டும் பல சூட்சும விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் பலரால் சாதாரண விஷயங்களைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு அவரவர் தங்கள் உடலை நடத்தும் விதம்தான் காரணம் என்கிறார் சத்குரு! இந்த உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா? தொடர்ந்து படித்து அறியுங்கள்!

சத்குரு:

படைப்பானது ஒருவித சிக்கலான வடிவியல் (Geometry) ஆகும். ஒட்டுமொத்த பிரபஞ்சம் கூட ஒரு கச்சிதமான வடிவியலின்படிதான் இயங்குகிறது. அதனால்தான் அது அந்தரத்தில் நிலையாக நிற்கிறது. உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிறுத்துவதற்கு நீங்கள் கற்றுக்கொண்டால் மற்றும் உங்கள் உடலின் வடிவியல் மற்ற படைப்புகளின் வடிவியலுடன் ஓர் ஒத்திசைவில் இருந்தால், அப்போது ஒரு தொடர்பு உண்டாகும். அது, பிரபஞ்சம் முழுவதையும் உங்களுக்குள் பதிவிறக்கம் செய்வதற்குத் துணை செய்யும்.

உங்களது நண்பர்கள் இடையிலோ அல்லது குடும்பத்தினர் இடையிலோ, யாராவது ஒருவருக்கு, மற்றவர்களைக் காட்டிலும், சற்று அதிகமான புரிந்துகொள்ளும் தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்தக் குறிப்பிட்ட நபர் தனது உடலை நடத்திக்கொள்ளும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும்.

தொலைக்காட்சி அறிமுகமான புதிதில், ஒவ்வொரு முறையும் காற்று அல்லது மழைக்குப் பிறகு, நீங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டெனாவை சரியான திசை நோக்கித் திருப்பவேண்டியிருந்தது. இன்றைக்கு “டாடா ஸ்கை” மற்றும் “டிஷ் நெட்” போன்றவை நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தப் பிரச்சனை இல்லாமல் போனது. ஆனால், முன்பு, உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, ஆன்டெனா சரியான நிலையில் இல்லையென்றால், திரையின் பிம்பம் மறைந்துவிடும். நீங்கள் அதைச் சரிசெய்யும்வரை திரையில் எதுவும் தெரியாது. ஆன்டெனா ஒரு குறிப்பிட்ட கோணத்தை நோக்கி சரியாக இருந்தால்தான் உங்களால் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

இந்த உடலும் அதேபோன்றதுதான். இந்த பிரபஞ்சத்தை உள்வாங்குவதற்காக நீங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை வடிவியலின்படி சரியான புள்ளியில் நிறுத்தினால், இந்த உடல், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஆனால் உடலை ஒரு குறிப்பிட்ட விதமாக நிலைநிறுத்த வேண்டுமென்றால், உடலை நீங்கள் ஒரு இலகுவான தன்மையில் வைத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல், உடல் இறுக்கத்துடனோ அல்லது நிர்பந்தங்களுக்கு உட்பட்டோ இருந்தால், படைத்தலை உங்களால் உள்வாங்க முடியாது. உடலே அதைத் தடுத்து நிறுத்திவிடும், அதாவது கிரகிப்பது என்பது நிகழ்வதற்கு அனுமதிக்காது.

உங்களுடைய வீடு மற்றும் பணியிடங்களில், உங்களது நண்பர் வட்டத்தில், உங்கள் ஒவ்வொருவருக்கும் புரிந்துகொள்ளும் தன்மை வேறுபடுவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். நான் இப்போது சொல்வதை நீங்கள் வெறுமனே கவனிக்க வேண்டும், அது குறித்து பேசவும் கூடாது. உங்களது நண்பர்கள் இடையிலோ அல்லது குடும்பத்தினர் இடையிலோ, யாராவது ஒருவருக்கு, மற்றவர்களைக் காட்டிலும், சற்று அதிகமான புரிந்துகொள்ளும் தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்தக் குறிப்பிட்ட நபர் தனது உடலை நடத்திக்கொள்ளும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். யாராவது மந்தபுத்தியுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவர் தனது உடலை நடத்திக்கொள்வது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் இருத்தலின் வடிவியல் என்று நான் எதை சொல்ல வருகிறேன் என்பதை அப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் உங்கள் உடலை நடத்தும் விதமே உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கிறது.

ஒருவிதத்தில், ஒட்டு மொத்த யோகவியலின் அமைப்பும், இந்த உடலின் வடிவியலை சரியாக நிலைநிறுத்துவது பற்றிதான் உள்ளது. அப்போதுதான் உடல் ஒரு முழுமையான ஆன்டெனாவாக செயல்பட்டு, முழு பிரபஞ்சத்தையும் - உங்களுக்கு வெளியில் இல்லாமல் - உங்களுக்கு உள்ளேயே நிகழ வைக்கிறது. உங்களுக்கு வெளியே என்ன நிகழ்கிறது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியாது; உங்களுக்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைத்தான் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அந்த புரிதல் உங்களுக்கு வேண்டும். ஆகவே, உங்களுடைய புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், உங்களது உடலின் வடிவியலை நீங்கள் சுத்திகரிப்பு செய்யவேண்டும். யோகா அதைத்தான் செய்கிறது.

நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய உடலின் வடிவியலை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

நீங்கள் நிமிர்ந்து உட்காரக் கற்றுக்கொள்வதற்கு மட்டும், எவ்வளவு யோகா செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு குறிப்பிட்ட விதமான செயலை சரியான முறையில் உட்கார்ந்து செய்யக் கூட ஒருவருக்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. அவ்வளவு ஏன், நீங்கள் கைகளையும், கால்களையும் வெறுமனே அசைப்பதே கூட, பல விஷயங்களை நிர்ணயிக்கிறது. கால்களும், கைகளும் மிகவும் முக்கியமானவை. மருத்துவரீதியாகக் கூட, அதிகபட்சமான நரம்புகள் கைகளிலும், கால்களிலும்தான் முடிகின்றன என்கிறார்கள். உங்கள் நரம்புகள் புலன் உணர்வுகளை உடலெங்கும் பரப்பும் ஊடகமாக இருக்கின்றன என்பதை மருத்துவ அமைப்பும் அங்கீகரிக்கின்றது.

உங்களது புரிதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஒரு மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் நீங்கள் அறிந்துகொண்டீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கையை வாழாமல் போய்விட்டீர்களா? என்னிடம் உள்ள அத்தனை கேள்வியும் இது ஒன்றுதான். எவ்வளவு காலம் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமே அல்ல; உங்களுடைய வாழ்வு அனுபவம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது, அப்படித்தானே? நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய உடலின் வடிவியலை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதனால்தான் நாம், ஆசனங்கள், முத்திரைகள், மற்றும் கிரியா இவற்றுடன் தொடங்குகிறோம். பிரபஞ்சத்தையே உணரக்கூடிய திறனைப்பெறும் அளவிற்கு உங்களது உடலமைப்பின் சக்திவடிவத்தை முறைப்படுத்துவதே இதன் நோக்கம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1