துன்பம் வரும் வேளை

பிரார்த்தனை செய்தால் துன்பம் தீருமா? மரண தண்டனை சரியா? இவையிரண்டும் இன்று மிகப் பிரபலமான கேள்விகள். இதுபற்றி சத்குரு என்ன சொல்கிறார்? படியுங்கள்...
 

கேள்விதுன்பங்கள் வரும்போது, மனிதன் கடவுளிடம் கூடுதலாகப் பிரார்த்தனை செய்வது அவசியமா? அதனால் பலனுண்டா?

சத்குரு:

எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதுவல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்.

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?

பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும். துன்பங்கள் வரும்போது சாய்ந்துகொள்ளும் தோளாக கடவுளைக் கூப்பிட்டால் மட்டும் என்ன? உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை.

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளை தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்!

கேள்வி

சத்குரு, மரண தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு

அண்மையில் மும்பை கலவரம் குறித்த வழக்கில் பன்னிரெண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் உறவினர்களைப் பார்க்கும்போது, உங்கள் மனம் வேதனைப்படலாம். ஆனால் இந்தப் பன்னிரெண்டு பேரால், அநியாயமாக சில நூறு பேர்களில் உயிர்கள் பறிக்கப்பட்டதை எப்படி மறக்க முடியும்?

சமூகக் கோட்பாடுகளில் இக்குற்றங்களுக்கு தண்டனைகள் தரப்படவில்லை என்றால், இக்குற்றங்கள் கேள்வி கேட்பாரின்றி பெருகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்த பூமியில் வாழ்பவர்கள் அச்சத்திலேயே வாழ வேண்டி வரும்.

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைகளை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால் இன்றைய சமூகச் சூழ்நிலையில் இதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை!