தியானம் - சில சமையல் குறிப்புகள்
தினம் தினம் தவறாமல் தியானம் செய்கிறோம்; தியானத்தில் இப்போது நாம் எந்த அளவை எட்டியிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? உங்களுக்கு இந்த ஆவல் இருந்தால், இங்கே தியானங்கள் பற்றிய சில கேள்விகளும் சத்குருவின் பதில்களும் உங்களுக்கு தெளிவுபடுத்தும்!
 
 

தினம் தினம் தவறாமல் தியானம் செய்கிறோம்; தியானத்தில் இப்போது நாம் எந்த அளவை எட்டியிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? உங்களுக்கு இந்த ஆவல் இருந்தால், இங்கே தியானங்கள் பற்றிய சில கேள்விகளும் சத்குருவின் பதில்களும் உங்களுக்கு தெளிவுபடுத்தும்!

Question:தியானத்தில் நான் எந்த அளவு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறேன் என்பதை எப்படி அளவிடுவது?

சத்குரு:

அளவுகோல்களைப் பயன்படுத்துவது எதற்காக? ஒப்பிடுவதற்காக. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும்போதுதான் அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது. அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, உங்களிடம் தியான நிலை இல்லை என்று தான் அர்த்தம்.

தியானம் என்ற அம்சம் யாருடனும் போட்டியில் ஈடுபடுவதல்ல. முன்னே போகிறோமா, பின்னால் போகிறோமா என்பதைக் கூட கவனிக்க வேண்டியிருக்காத ஓர் இடத்தை அடைந்து விட்டால், அங்கே இருப்பதே போதுமானது.

மற்றபடி, தியானத்தில் இருக்கிறீர்களா, அல்லது தூக்கத்தில் இருக்கிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால், சில விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்த முடியும். உங்கள் நாடித் துடிப்பு, ரத்தக் கொதிப்பு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை அளந்து பார்க்க முடியும். இவை கூட தியானத்தின் பின்விளைவுகள் தான். இந்த விளைவுகளை அளப்பதற்கு விஞ்ஞானம் பயன்படலாமே தவிர, தியானத்தை அளப்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

Question:தியானத்தின் போது ஏன் கண்களை மூட வேண்டும்?

சத்குரு:

தூங்குவதற்காக மட்டுமே நீங்கள் கண்களை மூடி பழக்கப்பட்டு விட்டீர்கள். தூக்கம் என்பது விழிப்புணர்வற்ற ஒரு நிலை. ஆனால் தியானம் என்பது உள்நோக்கிப் பார்ப்பது. அதற்கு விழிப்புணர்வு வேண்டும். உங்களுக்கு தியானமே தெரியவில்லை என்றாலும் தினம் பத்து நிமிடம் விழிப்புணர்வாக கொஞ்சம் கண்ணை மூடி உட்கார்ந்து பாருங்கள். உங்கள் உடல்நிலை, மனநிலையில் பெரிய மாற்றம் வரும். வித்தியாசம் நன்கு புரியும்.
1

Question:காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் ஏன் புலித்தோல், மான்தோல் ஆகியவற்றை தியானம் செய்வதற்காக பயன்படுத்தினர்?

சத்குரு:

தியானம் செய்யும்போது சக்தி சிதறாமல் மேல்நோக்கி நகர அனுமதிக்க வேண்டும். ஆனால் குளிர்ந்த தரையில் உட்கார்வது எப்போதும் சக்தியை சிதறடிக்கும். முனிவர்கள் பொதுவாக காடுகளில் உள்ள குகைகள் மற்றும் குடிசைகளில்தான் வசித்து வந்தனர். எனவே குளிர்ந்த தரையை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. காடுகளில் வசித்தமையால் அவர்களுக்கு இறந்த விலங்குகளின் தோல் எளிதாக கிடைத்தது. எனவேதான் அவற்றை பயன்படுத்தினர். ஆனால் அப்போதும் கூட புல்லை கட்டுகளாகக் கட்டி அதன்மீது உட்கார்ந்து தியானம் செய்வதுதான் பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது. புல்லும் நல்ல வெதுவெதுப்பைத் தரும். நீங்கள் இப்போது தியானம் செய்வதற்கு கம்பளியை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அதுவும் உங்கள் சக்தி சிதறுவதைத் தடுக்கும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1