கடவுள் இருக்கிறாரா... கண்டறிவது எப்படி?
கடவுள் உண்டா? இல்லையா? உண்மையை ஒரே வார்த்தையால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?
 
கடவுள் இருக்கிறாரா... கண்டறிவது எப்படி?, Kadavul irukkirara - kandarivathu eppadi?
 

Question:கடவுள் உண்டா? இல்லையா? உண்மையை ஒரே வார்த்தையால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

சத்குரு:

கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ ஒரே வார்த்தையில் சொல்ல என்னால் முடியும். நான் சொல்வதால் உங்கள் அனுபவத்தில் உங்களால் எதையாவது உணர முடியுமா என்ன? நான் சொல்வதை நம்புவீர்கள் அல்லது நம்பாமல் போவீர்கள். கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்வி உங்களுக்குள் அப்படியேதான் இருக்கும்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். இருக்கிறாரா? இல்லையா... என்று தேடுங்கள். எங்கே தேடுவது என்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே தேடுங்கள். கடவுள் உண்டா... இல்லையா... என்பதை நீங்களே உணர முடியும்.

ஒருமுறை கௌதம புத்தரை சந்திப்பதற்கு ஒரு மனிதர் வந்தார். அதிகாலை நேரம். இருள் விலகியும் விலகாதபொழுதில் அவர் வந்தார். அந்த ஊரின் மிகப்பெரிய பக்தர் அவர். அவருக்குக் கடவுள் இருப்பது தெரியும். ஆனால் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. ஞானமடைந்த மனிதர் இங்கே இருக்கிறாரே அவரையே கேட்போம் என்று வந்திருந்தார். தான் புத்தரைப் பார்க்க வந்ததுகூட வெளியே தெரியக்கூடாது என்பதால் அவ்வளவு சீக்கிரம் வந்திருந்தார். புத்தரிடம் மெதுவாகக் கேட்டார். "கடவுள் உண்டா? இல்லையா?"

அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு புத்தர் சொன்னார், "கடவுள் இல்லை" என்று. உடனே புத்தரின் சிஷ்யர்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளத்தான் அவர்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். புத்தரே கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார். இனிமேல் என்ன... என்று நிம்மதியடைந்தார்கள்.

 

அன்று இரவு ஊரெல்லாம் அடங்கிய பிறகு ஒருவர் வந்தார். அவரொரு நாத்திகவாதி. இருளில் மறைந்து நின்று தயங்கித் தயங்கிக் கேட்டார். "கடவுள் இருக்கிறாரா?"

அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தீர்மானமாகச் சொன்னார் புத்தர், "கடவுள் இருக்கிறார்". சிஷ்ய சமூகத்தில் மறுபடியும் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது.

ஏனெனில் மற்றவர்களின் அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டு கடவுள் விஷயத்தில் முடிவெடுக்கக் கூடாது.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். இருக்கிறாரா? இல்லையா... என்று தேடுங்கள். எங்கே தேடுவது என்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே தேடுங்கள். கடவுள் உண்டா... இல்லையா... என்பதை நீங்களே உணர முடியும்.

இந்த மண்ணில் விளைவதைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அந்தச் சாப்பாடு உங்களுக்குள் போய் உங்களுடைய உடலை முழுமையடையச் செய்கிறது. அப்படிப் பார்த்தால் நீங்கள் சாப்பிடுகிற எதுவுமே மண்தான். மண்ணை உட்கொண்டு அதை மனிதனாக்குகிற சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்றால் அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1