Question: இன்றைய நிலையில், பல காரணங்களினால் காதல் உறவுகளும், திருமண உறவுகளும் துன்பகரமாக மாறியுள்ளன. காதல் மற்றும் திருமணம் குறித்து சற்று ஆழமாக நீங்கள் பேச முடியுமா?

சத்குரு:

இரண்டு நபர்கள், தங்களைப் பார்த்தே சிரித்துக் கொண்டும், ஒருவரைப் பற்றி மற்றவர் கேலி பேசி நகைச்சுவை பரிமாறிக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்ட ஒரே காரணத்தினால்தான் இன்று திருமணங்கள் துயர்மிக்கதாக மாறியுள்ளன. இருவர் தங்களுடைய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள செய்யப்பட்ட ஒரு எளிமையான ஏற்பாடுதான் திருமணம். அந்த ஏற்பாட்டில் இறங்கிய இருவரும் பிறகு அதைக் குறித்து மிகவும் கடுமையாகிவிட்டனர். இரண்டு நபர்களுக்கும் தேவைகள் இருக்கின்றன. இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். அதற்காக நீங்கள் செய்திருக்கும் ஒரு எளிய ஏற்பாடுதான் திருமணம் என்பது. ஆனால் அதனைப் பற்றி நீங்கள் மிகவும் கடுமையாக மாறிவிட்டீர்கள். திருமணம் என்ற ஏற்பாட்டில் ஏதோ ஒன்று தவறாகிவிட்டது என்பது இதற்குக் காரணமல்ல. உங்களால் எதையும் நகைச்சுவை உணர்வோடு பார்க்கவோ அல்லது சிரிக்கவோ முடியாமலிருக்கும் காரணத்தினால்தான், இங்கே ஒவ்வொன்றும் உங்களுக்கு தீவிரமான பிரச்சனையாகிவிடுகிறது. மக்கள் தமது நண்பர்களுடன் வெளியில் பரிகசித்து, நகைச்சுவையாக சிரித்துக்கொள்ளும் அதே விஷயங்கள், வீட்டிற்கு வந்துவிட்டால், தீவிரமான பிரச்சனைக்குரிய விஷயங்களாக மாறிவிடுகின்றன. இப்படி நிகழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? அவ்விதம் நீங்கள் நடந்துகொண்டால், அது உண்மையிலேயே மிகவும் பரிதாபம்தான்.

இரண்டு நபர்கள், தங்களைப் பார்த்தே சிரித்துக் கொண்டும், ஒருவரைப் பற்றி மற்றவர் கேலி பேசி நகைச்சுவை பரிமாறிக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்ட ஒரே காரணத்தினால்தான் இன்று திருமணங்கள் துயர்மிக்கதாக மாறியுள்ளன.

அப்படியென்றால், காதல் என்பது என்ன? நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், காதலின் இயல்பையும், நுட்பத்தையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது. நீங்கள் விருப்பத்துடன் பதில் கொடுக்கும் தன்மையில் இருக்கும்போது மட்டுமே உங்களுக்குக் காதல் நிகழ்கிறது.

சங்கரன்பிள்ளை ஒருமுறை பல்கலைக்கழகத்தில் படிக்க நேர்ந்தது. ஒருநாள் அவர் தனது பேராசிரியரிடம் சென்று, “ஐயா, எனக்கு உங்களது உதவி தேவைப்படுகிறது” என்று கூறினார்.

பேராசிரியரும், “நிச்சயமாக, அதற்காகத்தானே நான் இங்கு இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறமுடியுமா? என்றார்.

சங்கரன்பிள்ளை, அந்தக் கல்லூரியிலேயே அழகாக இருக்கும் பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, “நான் அவள்மீது காதல் கொண்டுள்ளேன். என் காதலில் ஐம்பது சதவிகிதம் வெற்றி பெற்று விட்டேன், ஆனால் மீதி ஐம்பது சதவிகிதம் வெற்றி பெற எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்றார்.

பேராசிரியர், “நல்லது, உனக்கு நான் உதவக்கூடிய அதிகாரம் பெற்ற துறை இது அல்ல. கல்வி சார்பான எதுவும் இருந்தால், நான் உனக்கு உதவமுடியும், ஆனால் எப்படியோ நீ என்னைக் கேட்டுவிட்டாய், ஆகவே ஐம்பது சதவிகித வெற்றி என்று எதைக் குறிப்பிடுகிறாய்?” என்று கேட்டார்.

சங்கரன்பிள்ளை, “நான் அவளை முழுமையாகக் காதலிக்கிறேன், எனவே ஒரு ஐம்பது சதவிகிதம் முடிந்துவிட்டது. ஆனால் அவள் என் காதலை அறிந்திருக்கவில்லை. எனவே மீதி ஐம்பது சதவிகிதத்திற்கு நீங்கள் உதவ வேண்டும்” என்றார்.

காதல் என்பது யாரோ ஒருவருக்கு நீங்கள் பதில் கொடுக்கும் திறன்தான். ‘காதல்’ என்றால் நீங்கள் இன்னொருவரைப் பற்றி நினைக்கிறீர்கள். ஆனால் காதல் என்பது இன்னொருவரைப் பற்றியதல்ல. அது உங்களைப் பற்றியது. நீங்கள் காதலில் நிரம்பியவராக ஒரு சாலையில் நடந்து செல்ல முடியும், காதலுடன் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் பணியாற்ற முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணியாளர்களுக்காக நாம் ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தோம். என்னுடன் சுமார் பதினோரு தன்னார்வத் தொண்டர்கள் இருந்தனர். நமது தன்னார்வத் தொண்டர்கள் அனைவருமே முழுமையான ஈடுபாட்டுடன், எப்போதும் சுறுசுறுப்பாக பணி செய்து கொண்டிருந்தனர். இந்த ஐ.டி.துறை அதிகாரிகள் எல்லோருமே எப்போதுமே தங்களுடைய வேலைகளுக்காக நல்ல மனிதர்களை தேடிக்கொண்டிருப்பார்கள், ஏனென்றால் அதுதான் அவர்கள் பணிக்கு முக்கிய சவாலாக இருந்தது. நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சரியான விதத்தில் செயல் செய்பவர்களைக் கொண்டிருந்தாலே உங்களது பணியின் எண்பது சதவிகித வெற்றி உறுதியாகி விடுகிறது. உங்களைச் சுற்றிலும் சரியான மக்கள் இருந்தால், மற்றவை எளிதாகிவிடுகிறது. ஆகவே, அந்த அதிகாரிகள் என்னைச் சுற்றி இயங்கியவர்களைக் கவனித்துவிட்டு, பிறகு கேட்டார்கள், “சத்குரு, இப்படிப்பட்ட மக்களை நீங்கள் எங்கே பெற்றீர்கள்?”

“அவர்கள் உங்களுக்கு கிடைப்பதில்லை, அவர்களை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்றேன் நான்.

“சரி, எப்படி அவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்?”

“அவர்களை நீங்கள் உங்கள் மீது காதலில் விழச்செய்ய வேண்டும்” என்று கூறினேன்.

“அதை எப்படி நாங்கள் செய்வது?”

“முதலில் நீங்கள் அவர்கள் மீது காதலில் விழுந்துவிட வேண்டும்” என்று நான் சொன்னேன்.

காதல் என்பது நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல. காதல் அல்லது அன்பு கொள்வதுதான் உங்கள் இயல்பாகவே இருக்கிறது. இதை நீங்கள் உங்கள் குணாதிசயமாக வைத்துக்கொண்டால், அதன்பிறகு உங்கள் தேவைகளுக்கேற்ப பல உறவுநிலைகள் தானாகவே நிகழும். இன்று மேற்கத்திய நாடுகளில் ‘உறவுநிலை’ என்றாலே, உடனடியாக, ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணிடம் கொள்ளும் உடல் அடிப்படையிலான உறவையே மக்கள் எண்ணுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. இந்தியாவில் நீங்கள் ‘உறவுநிலை’ என்று கூறினால், நமக்கு தாய், தந்தை, சகோதர, சகோதரியர், நட்புகள் போன்ற எல்லாவித உறவுகளும் நினைவில் எழுகின்றன. ஆனால் இப்போது, இந்தியாவிலும் கூட மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தில் உள்ள நகர்ப்புற இளைஞர்கள், உறவு என்றால் உடல் அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான உறவுநிலைகளையே எண்ணுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டமானது.

நீங்கள் தற்போது, குறிப்பாக, உடல் தொடர்பான உறவுமுறைகளைப் பற்றியே பேசுகின்றீர்கள். அந்த உறவுமுறைகளில்தான் அதிகபட்ச நெருக்கமும் நிகழும், எதிர்ப்பும் நிகழும்.

பெரும்பாலானவர்களுக்கு, அனைவருக்கும் அல்ல. ஆனால் பெருவாரியான தம்பதிகளுக்கு திருமணமான ஐந்து, ஆறு வருடங்களுக்குள் குழந்தைகள் இல்லையென்றால், அவர்களுடைய உறவு முறிந்துவிடும் அல்லது குறைந்தபட்சம் அவர்களது உறவு அர்த்தமற்றதாகிவிடுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வற்று, பாதி உயிரற்றுப் போகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் தங்களது வாழ்நாள் முழுவதும் அந்த உறவை உயிரோட்டமாக தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அது வேறு. ஆனால் பெருமளவு மக்களுக்கு அவர்களது உறவு முறிந்துவிடுகிறது.

ஒரு குழந்தை வரும்பொழுது, ஒரு பூங்கொத்தாக தன்னுடன் ஆனந்தத்தையும் அள்ளிக்கொண்டு வருகிறது. அப்போது உங்களையறியாமல் நீங்கள் சிரிக்கிறீர்கள், பாடுகிறீர்கள்.

குழந்தைக்குப் பின்னால் சோபாவுக்கு அடியில் தவழ்கிறீர்கள், குழந்தை மட்டும் இல்லையென்றால், நீங்கள் ஒருபோதும் இப்படி செய்திருக்க மாட்டீர்கள். உங்களுடைய உயிரோட்டமான வாழ்க்கை, இன்னுமொரு முறை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆனால் குழந்தை பெரியவனாக வளர்ந்து, தனக்கான வாழ்வைத் தேட முயற்சிக்கும்போதும், உங்களுக்கு விருப்பமில்லாத ஏதோ ஒன்றை அவன்/அவள் செய்யும் போதும், “உனக்காக நான் எவ்வளவு செய்திருக்கிறேன் தெரியுமா?” என்று ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்தது அவனுக்காக அல்ல, உங்களுக்காக. ஏனெனில் குழந்தையினால்தான் உங்களுக்கு வாழ்க்கை திரும்பக் கிடைத்தது. ஆனால் இப்போது நீங்கள் புலம்புகிறீர்கள், “நான் உனக்காக எவ்வளவெல்லாம் செய்துள்ளேன்!” என்று. இது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறை.

இது ஒவ்வொரு உறவுமுறையிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுடைய தேவைகளை யாரோ ஒருவர் பூர்த்தி செய்கிறார் என்பதை உணராமல், நீங்கள் அவர்களுக்கு ஏதோ பெரியதாக செயல் செய்துவிட்டீர்கள் என்றே நீங்கள் நினைக்கிறீர்கள். எங்கோ ஏதோ தவறு நடந்துவிட்டால், “அவரே அதற்கு பொறுப்பு” என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். நீங்கள் அடுத்தவரை சுட்டிக் காட்டும்போதே, பாதகமான உறவுமுறை துவங்கிவிடுகிறது.

உறவுநிலைகள் மனிதர்களைப் பற்றியது. பல்வேறு உறவுநிலைகளையும், வெவ்வேறு விதங்களில் நடத்திக்கொள்ளத் தேவைப்படுகிறது. ஆனால் அன்பு என்பது வேறு யாரோ ஒருவரைப் பற்றியதல்ல. அது உறவுமுறை குறித்ததல்ல. எதனுடனும் நீங்கள் அன்புடன் இருக்கக்கூடும். மேலும் ஒட்டுமொத்தப் படைப்போடும் நீங்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். ஏனெனில் இது படைப்பைப் பற்றியதல்ல. இது நீங்கள் வாழும்விதம் பற்றியது. நீங்கள் ஒரு அன்பான தன்மையில் வாழ்ந்து, தேவைகளுக்கு ஏற்றபடி பல உறவுநிலைகளைக் கட்டமைக்கிறீர்கள். இருப்பினும் அனைவரையும் நேசிக்கிறீர்கள் என்ற காரணத்தினாலேயே அனைவரிடமும் ஒரேவிதமாக உங்களால் நடந்துகொள்ள முடியாது.

ஒருவரிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், அவருடன் உங்கள் உறவுநிலையை எப்படி நடத்திச் செல்கிறீர்கள் என்பது அந்த நபருடனான உங்களது நெருக்கத்தின் அளவைப் பொறுத்தது. அந்த நெருக்கத்தை நீங்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கென்று குறிப்பிட்ட தீர்வு எதுவும் கிடையாது. ஆனால் நீங்கள் அன்புமயமாக இருந்தால், உங்களது வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையாகிறது.

யாரோ ஒருவர் எப்படி இருக்கிறார் என்பது இப்போது பொருட்டில்லை. ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள் முற்றிலும் இனிமையாகவும், அற்புதமாகவும் உணர்கிறீர்கள். அதுதான் முக்கியம். நீங்கள் உங்களுக்குள் அற்புதமாக உணர்வீர்களேயானால், இயல்பாகவே மற்றவர்களிடமும் அற்புதமாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் உங்களுக்குள் வெறுப்பாக உணர்ந்தீர்கள் என்றால், இயல்பாகவே நீங்கள் உங்களது வெறுப்பைத்தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். அன்பு என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறது. அன்பு என்றால் உங்கள் உணர்ச்சிகள் இனிமையாக உள்ளன என்பது பொருள். உங்களது உணர்ச்சிகள் இனிமையுடன் இருந்தால், நீங்கள் இயற்கையாகவே அன்பாக இருக்கிறீர்கள்.

நீங்கள் பார்ப்பது என்னவாக இருந்தாலும், அது ஒரு ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மரமாக, விலங்காக, பறவையாக அல்லது நீங்கள் சுவாசிக்கும் காற்றாக இருந்தாலும்கூட, நீங்கள் அன்புடன் எதிர்கொள்வீர்கள். நீங்கள் உள்ளே சுவாசிக்கும் காற்றை உங்களால் அன்புடன் உள்வாங்க முடியாதா என்ன? காற்றுக்கு நினைவாற்றல் உண்டு. “இந்த நபர் என்னை நேசிக்கிறார்” என்பதை காற்று நினைவில் வைத்திருந்தால், அது உங்களுக்கு அற்புதமாகச் செயல்படும். தண்ணீரை உங்களால் அன்புடன் அருந்த முடியாதா என்ன? நீருக்கு நினைவாற்றல் உண்டு. இது ஒரு விஞ்ஞானபூர்வமான உண்மை. நீருக்கு, தான் அன்புடன் அருந்தப்படுவது நினைவில் நின்றால், அது உடலுக்குள் சென்று, உங்களுக்குள் அற்புதமான விஷயங்களைச் செய்யும். இல்லையென்றால், அது உடலில் சென்று, உங்களுக்கு மோசமான விஷயங்களைச் செய்யும்.

இதை முயன்று பாருங்கள் - நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் அருந்தும் நீர், நீங்கள் கால் பதிக்கும் இந்த மண் இவைகள் அனைத்தையும் அன்புடன் அணுகுங்கள். பிறகு பாருங்கள், உங்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை! உங்களைப் பற்றிய ஒவ்வொன்றும், உங்களது ஆரோக்கியம் உள்பட, நம்பமுடியாத அளவுக்கு மாறிப்போகும். எல்லாவற்றுக்கும் நினைவாற்றல் இருக்கும் காரணத்தால் ஒவ்வொன்றுடனும் அன்பு மேலிடத் தொடர்பு கொள்ளுங்கள். இது மனிதர்களுடனும் உண்மையாகத்தானே இருக்கிறது?

இரண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் அறிமுகமற்ற ஒருவரை அன்புடன் அணுகியிருந்தால் கூட, இன்று உங்களை எதிர்பாராமல் சந்திக்கும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட விதமாக உங்களை அணுகமாட்டாரா என்ன? ஆகவே, அன்பு என்பது உறவுமுறை சார்ந்தது அல்ல. அன்பு உங்களது தன்மையாக இருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் அன்புடன் அணுக முடியும். அனைத்திற்கும் மேலாக, உங்களது இருத்தலின் தன்மை மிக மிக இனிமையாகவும், அழகு நிறைந்ததாகவும் ஆகிறது. இதுதான் மிகவும் முக்கியமானது.