நீதிநெறிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்வதில்லை. அலுவலகம், அரசாங்கம், குடும்பம் என சமூகத்தின் பலநிலைகளிலும் ஊழலும் அதிகாரதுஷ்பிரயோகமும் நிறைந்துள்ளன. இதற்கு என்ன காரணம்? தீர்வு எங்கே இருக்கிறது? இதுபற்றி சத்குருவின் கருத்து...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, வேலை சூழ்நிலைக்குக் கேடுவிளைவித்து, ஏமாற்றி, பதவியை துஷ்பிரயோகம் செய்யும் நேர்மையற்ற தொழிலாளிகளை எப்படிக் கையாள்வது?

சத்குரு:

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாடாக நாம் தற்போது இருக்கும் நிலையில், நாம் நீதிபோதனைகளற்ற ஒரு சமுதாயமாய் இருக்கிறோம். நமக்கென்று சரி-தவறு குறித்த கண்ணோட்டம் கிடையாது, நாம் இப்போதுதான் ஆங்காங்கே இருந்து கற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த சமுதாயம் எப்போதும் மனித விழிப்புணர்வால் வழிநடத்தப்பட்டதால், மக்களிடம் "இதைச் செய், இதைச் செய்யாதே" என்று சொல்வது அவசியம் என்று நாம் ஒருபோதும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. இந்த நாட்டில் "நீங்கள் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது" என்று உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளை எங்கும் பார்க்க முடியாது. இப்போது அப்படிச் செய்ய முயற்சி செய்கிறோம், ஆனால் அது இன்னும் வேலை செய்யவில்லை, ஏனென்றால் இந்த மண்ணில் இதுவரை வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதரும் தன்னுடன் ஒரு ஆன்மீக செயல்முறையை வைத்திருந்தார். நீதிநெறிகள் இல்லை, உள்நிலை விழிப்புணர்வு மட்டுமே இங்கு இருந்துள்ளது.

உங்கள் மனிதத்தன்மையை வெளிக்கொணர, உங்கள் மனிதத்தைத் தூண்டுவதுதான் நோக்கமாக இருந்துள்ளதே தவிர, நீதிநெறிகளை நாம் வகுக்கவில்லை.

உங்கள் மனிதத்தன்மையை வெளிக்கொணர, உங்கள் மனிதத்தைத் தூண்டுவதுதான் நோக்கமாக இருந்துள்ளதே தவிர, நீதிநெறிகளை நாம் வகுக்கவில்லை. இதை நேர்மையானது நேர்மையற்றது என்று பார்ப்பதற்கு பதிலாக இப்படிப் பாருங்கள். ஒரு பெண்மணியுடன் நான் பயணம் செய்துகொண்டு இருந்தேன், அவர் தந்தை ஒரு பிரபல அரசியல்வாதி. அவருக்கு நான்கு பிள்ளைகள். தன் தந்தைக்கு தன்மீது எவ்வளவு பிரியம், எவ்வளவு வைரக் குவியல்கள் அவர்களிடம் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் உள்ளது, தன் தந்தை கொடுத்த பரிசு, என்றெல்லாம் சொல்லி அந்தப் பெண்மணி மிகவும் பெருமைப்பட்டார். நான் எல்லாம் கேட்டுவிட்டு, "உங்கள் தந்தைக்கு வாய்ப்புக் கிடைத்தால் இந்தியாவையே நான்காக்கி நான்கு பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுவார் அல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அதில் என்ன தவறு?" என்று கேட்டார். ஒரு க்ஷணத்துக்கு நான் ஸ்தம்பித்துவிட்டேன். ஆனால் அவர் என்னிடம் உண்மையாகவே அப்படிக் கேட்டார், "அதில் என்ன தவறு, எங்கள் தந்தைக்கு எங்கள் மேல் அவ்வளவு பிரியம்." என்றார். இந்தியா அவர் கையில் இருந்தால், நான்காகக் கூறுபோட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பிள்ளைக்குக் கொடுத்துவிடுவார்.

நான் கவனமாகப் பார்த்தபோது, இது நீங்கள் எதனுடன் உங்களை அடையாளப் படுத்தியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது என்பது புரிந்தது. உங்கள் குடும்பத்துடன் உங்களை அடையாளப் படுத்திக் கொண்டால், குடும்பமெனும் தொழிலைச் செய்ய உலகம் முழுவதையும் கொள்ளையடிப்பீர்கள். உங்கள் சமூகத்துடன் அடையாளப் படுத்தியிருந்தால், உலகையே கொள்ளையடித்து உங்கள் சமூகத்திற்குக் கொடுப்பீர்கள். உங்கள் தேசத்துடன் அடியாளப் படுத்தியிருந்தால், உலகையே கொள்ளையடித்து உங்கள் தேசத்தை உருவாக்குவீர்கள். அதனால் இவை அனைத்தும் அடையாளம் சார்ந்தது. அதனால் தனிப்பட்ட அடையாளங்களைத் தாண்டி மனிதர்களை உயரச்செய்ய நாம் பாடுபட வேண்டும். நம் கையில் மிகப்பெரிய பணி இருக்கிறது, மனிதர்கள் தங்களை சின்னச்சின்ன விஷயங்களுடன் அடையாளப் படுத்திக் கொள்ளாமல், அவர்களுக்குள் இருக்கும் உயிருடன் அடையாளம் கொள்ளச் செய்ய வேண்டும். அவர்கள் தங்களை ஊழல்வாதிகளாகக் கருதவில்லை, அவர்கள் தங்களை நேர்மையற்றவர்களாகக் கருதவில்லை. அவர்கள் சரியான செயல்களைச் செய்வதாகத் தான் அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும், மிகவும் மோசமான ஊழல்வாதிகளை நீங்கள் சந்தித்தால், அவர்களை நீங்கள் இப்படி மோசமான பெயர்கள் சொல்லி அழைக்கிறீர்கள் என்று அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு நல்ல விஷயங்களை செய்வதாக நினைக்கிறார்கள். அடையாளம் சிறியதா பெரியதா என்பதுதான் பிரச்சனை.

ஏன் ஒருவர் வேறொரு மனிதரைக் கொல்லத் தயாராக இருக்கிறார், ஆனால் தன் குழந்தையைக் கொல்லத் தயாராக இல்லை? அடையாளத்தால்தான், இல்லையா?

அதனால் மனிதர்களை, சிறிய அடையாளத்திலிருந்து பெரிய அடையாளத்திற்குச் செல்ல நீங்கள் உதவவேண்டும். உங்கள் அலுவலகத்துடன் நீங்கள் துவங்கலாம், பிரபஞ்சத்துடன் அடையாளம் கொள்ள முடியவில்லை என்றால், அண்டத்துடன் அடையாளம் கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் அலுவலகத்துடனாவது துவங்குங்கள். இந்த தொழிற்சாலையுடன் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளட்டும், ஏனென்றால் மனித மனம் அவர் எடுத்திருக்கும் அடையாளத்தைச் சுற்றித்தான் இயங்குகிறது. நான் ஒரு இந்தியன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது ஒரு அடையாளம். இப்போது இந்தியாவிற்கு 68 வயது ஆகிவிட்டதால் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். சிலர் எல்லைக்கோட்டின் இந்தப்பக்கம் விழுந்தார்கள், சிலர் எல்லைக்கோட்டின் அந்தப்பக்கம் விழுந்தார்கள், அவ்வளவுதான்.

ஆன்மீக செயல்முறை முழுவதும் இவ்வளவுதான், எந்தவொரு அடையாளமும் இல்லாமல் வாழ்வது. ஏனென்றால் உங்களுக்கு வேறெந்த அடையாளமும் தேவையில்லை. உங்களை ஏதோவொன்றுடன் நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளும் அந்தக் கணமே உங்கள் மனம் அதிலே சிக்கிப்போகும், அதைச் சுற்றி மட்டுமே இயங்கும். இது பாரபட்சமான மனமாகிவிடும். அதனால் இது நேர்மையாக இருப்பதையும் ஏமாற்றுவதையும் பற்றியதல்ல, இது எல்லையுள்ள அடையாளம் சார்ந்தது. எல்லையுள்ள அடையாளம் தான் ஒரே குற்றம், இதைப் புரிந்துகொள்ளுங்கள். ஏன் ஒருவர் வேறொரு மனிதரைக் கொல்லத் தயாராக இருக்கிறார், ஆனால் தன் குழந்தையைக் கொல்லத் தயாராக இல்லை? அடையாளத்தால்தான், இல்லையா? அதனால் அதை நோக்கி நாம் வேலைசெய்ய வேண்டும். அவர்களுக்கு நீதிநெறிகளின் கட்டமைப்பு ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்வது வேலைசெய்யாது. குறிப்பாக இந்தியர்களுக்கு இது மிகவும் கடினம், ஏனென்றால் அவர்கள் மனதில் நீதிபோதனைகள் என்று எதுவும் கிடையாது. சற்று கவனமாகப் பார்த்தால் இந்தியாவில் நீதிபோதனைகள் கிடையாது என்பது உங்களுக்கே புரியும். இங்கு மனிதர்கள் எப்போதும் தங்களுக்குள் இருக்கும் மனிதத்தின்படி வாழ்ந்துள்ளார்கள், நீதிநெறிகளால் அல்ல. அதுதான் வாழ்வதற்கு சிறந்த வழியும் கூட.