தீர்த்த யாத்திரை என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?
சத்குரு, தீர்த்த யாத்திரை என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?
 
 

Question:சத்குரு, தீர்த்த யாத்திரை என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

சத்குரு:

தீர்த்த யாத்திரை என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? சக்தியூட்டப்பட்ட இடத்திற்கு அல்லது அத்தகைய சூழலில் சிறிதுநாள் இருந்தால் நமக்குள் இருக்கிற கோபம், வெறுப்பு, மனத்தடைகள் இவற்றைத் தாண்டி வரமுடியும் என்ற நோக்கத்தில்தான் தீர்த்த யாத்திரைகள் நமது கலாச்சாரத்தில் மேற்கொள்ளப்பட்டன.

சக்தியூட்டப்பட்ட சில இடங்களுக்குச் சென்றால் நமது புரிந்து கொள்ளும் தன்மைக்கும் அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அங்கே நிகழ வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற பல ஸ்தலங்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், தீர்த்த யாத்திரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது காசிக்குச் செல்வதுதான். ஏனென்றால், முன்காலத்திலிருந்தே உண்மை உணர்ந்தவர்களும் பலவிதமான யோகிகளும், ஞானியரும் இந்த இடத்தில்தான் ஒன்று சேர்த்தார்கள். ஆன்மீக ரீதியாக எதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான எல்லாத் தன்மைகளும் இந்த ஒரே இடத்தில் கிட்டும் வாய்ப்பிருந்ததால், காசிக்குப் போனால் முக்தியை நோக்கிய பயணத்திற்கு வழி உருவாகும் என்றார்கள். காசிக்குச் சென்றால் நீங்கள் அங்கே எதையேனும் விட்டுவிட்டு வரவேண்டும். பலர் அங்கே சென்று பாகற்காயை விட்டுவிட்டு வருகிறார்கள். பாகற்காயை விடுவதில் பிரயோஜனமில்லை. உங்களுக்குப் பிடிக்காததை விடுவது மிக எளிது. நீங்கள் எதன் மீது பற்றாய் இருக்கிறீர்களோ அதை விட்டுவிட்டு வரவேண்டும். குழந்தையின் மீதான பற்றையோ விட்டுவிடலாமா? உங்கள் பற்று குழந்தை, கணவர், மனைவியில் இல்லை. உங்கள் தன்மையில் இருக்கிறது. உங்கள் கோபம், உங்கள் அகங்காரம் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் அதில்தான் மிக ஆழமான பற்று உள்ளது. எனவே, வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது எதுவோ அதை விட்டுவிட்டு வரவேண்டும்.

 

நீங்கள் வருவதற்கு முன்பிருந்தே இந்த உலகம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. நீங்கள் இறந்துவிட்டாலும் உலகம் நன்றாகவே நடக்கும். நீங்கள் தேவையின்றி ஆதங்கம் கொள்ளத் தேவையில்லை. தீர்த்த யாத்திரை இந்த அடிப்படையை புரிந்து கொள்வதற்கான வழி.

தீர்த்தயாத்திரை என்பது பிரபஞ்சத்தில் நாம் எத்தகைய அளவைக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கருவியாக உள்ளது. நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராகயிருந்தாலும், இந்த உலகில் உங்களுடைய பங்கு ஒரு எல்லைக்குள் அடங்கக்கூடியது. தீர்த்தயாத்திரை சக்தியூட்டப்பட்ட இடங்களுக்குச் சென்று நம் உயிர்சக்தியை மேல்நோக்கி எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி. இந்த கருவியை மனிதன் உபயோகப்படுத்தினால் அவனது வளர்ச்சிக்கு அது உதவியாய் அமையும்.

குறிப்பு:

ஈஷா சேக்ரட் வாக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள: sacredwalks.org

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1