தஞ்சை பெரிய கோவில் - பெருமையும் வலியும்! (Thanjai Periya Kovil in Tamil)
தமிழகத்தின், தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக காலத்தை வென்று உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான கலைப்படைப்புகளில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். 'பெரிய கோவில்' என்ற பெயரே இந்த கோவிலின் தனித்தன்மைக்கு கட்டியம் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்ப தூண்டியது எது? இதன் பின்னணி பற்றியும், அதே காலகட்டத்தில் எழுப்பப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவில் உருவான காரணம் பற்றியும் பேசுகிறார் சத்குரு.
வெளிப்புற அழகுடனும் பிரம்மாண்டமான விகிதாச்சாரத்திலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அற்புதமான கலைப்படைப்பு தஞ்சை பெரிய கோவில். இயந்திரங்கள் எதுவுமே இல்லாதபோது, பெரிய பாறைகளைக் கொண்டுவர வாகனங்களோ கிரேன்களோ இல்லாதபோது கட்டப்பட்டது இந்த கோவில். அனைத்துமே மனிதனின் முயற்சியால், வெறும் கைகளால் நடந்திருக்கிறது. இது ஒரு சாதாரண செயல் அல்ல.
இது என்ன மாதிரியான செயல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், நான் உங்களுக்கு ஒரு எளிய வேலை தருகிறேன். இப்போது நாம் ஆதியோகி ஆலயத்தை உருவாக்குகிறோம், அதற்காக ஒரு பாறையைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொள்ளுங்கள், ஆனால் உங்களிடம் இயந்திரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு பெரிய பாறை தெரியுமா? அதன் அளவைப் பார்த்ததும் அது எப்பேர்ப்பட்ட காரியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மக்கள் அதைத்தான் செய்தார்கள்.
தஞ்சை பெரிய கோவில் மூலவர்
தற்போது தஞ்சை பெரிய கோவிலில் லிங்கமாக வீற்றிருக்கும் பாறையை, குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ரா என்ற இடத்தில், நர்மதா நதிக்கரையிலிருந்து கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள அந்த பாறையை, விந்திய மலைகளைக் கடந்து கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். லாரிகள் எதுவும் அப்போது இல்லை. அப்படியானால் இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இதைச் செய்வதற்கு எந்த வகையான ஒரு தெம்பு, ஆர்வம் நம் தமிழ் மக்கள் நெஞ்சில் குடியிருந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதை யோசித்து, நடத்தியும் காட்டியிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்களின் இதயத்தில் அப்படி ஒரு உறுதி, வைராக்கியம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயல் ஒன்றை, அவர்களை செய்யத் தூண்டியது எது? அனைத்து முயற்சிகளுக்கும் பிறகு, மனித உழைப்பால் அவர்கள் கலைநயம் மிளிரும் ஒரு அற்புதமான கோவிலைக் கட்டினார்கள்.
கோபுர அழகு
தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் மகுடமாக வீற்றிருக்கும் விமானப்பகுதியின் எடை என்ன வென்று தெரியுமா? நிச்சயமாக நூற்று இருபது டன்களுக்கு மேல் இருக்கும். பொதுவாக கோபுரத்தின் விமானப்பகுதி சுதை சிற்பமாக வடிக்கப்படும். ஆனால், தஞ்சை பெரிய கோவிலின் விமானப் பகுதியை கிரானைட் கல்லால் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக பத்து மைல் தூரத்திற்கு சரிவுப்பாதை அமைத்தார்கள், அதன் வழியாக நூற்று அறுபது அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச்சென்று வைத்தார்கள். அதுவும் கலைநயம் மிளிரும் அழகான வேலைப்பாடுகளுடன். அதுமட்டுமின்றி, கருவறையின் மேல் பகுதியின் முதல் அடுக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன, கோவில் வளாகம் முழுவதுமே நேர்த்தியான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Subscribe
கர்நாடகாவில் அவர்கள் சோப்புக் கல்லை செதுக்கியிருக்கிறார்கள்; தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கொஞ்சம் உக்கிரமானவர்கள், கிரானைட் கருங்கல்லை செதுக்கியிருக்கிறார்கள். சோப்புக் கல்லை செதுக்குவதை விட மிகவும் கடினமானதாக இருந்தாலும் கிரானைட்டை செதுக்கி, சிற்பங்கள் நிறைந்த ஒரு மிகச்சிறந்த கட்டமைப்பாக, கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்தார்கள்.
ஆனால் கோவிலின் முக்கிய ஒரு பாகம் தோல்வியில் முடிந்தது, அவர்கள் விரும்பியபடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை. அது நடக்கவில்லை.
நிறைவேறாத கனவு
இன்றும் கூட, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? ஆனால் இது முற்றிலும் சரியல்ல; ஓரளவு சரியானது. இது ஒரு வகையான சிதைந்த சக்தி வடிவமாக, அதன் நிறைவைக் காணாத வடிவமாக இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு வருட உழைப்பு மற்றும் அதன் இதயப் பகுதி தோல்வியை சந்தித்தது. எனவே இதை முயற்சித்த ராஜராஜ சோழன்... இத்தகைய அற்புதமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு அவரின் ஒரே நோக்கம், தலைமுறை தலைமுறையாக மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பதுதான்.
இது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு மேம்பட்ட அனுபவமாக, உந்துசக்தியாக இருந்து மக்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால் அவர்கள் நினைத்தபடி அது நடக்காதபோது, அந்த முயற்சி வீணானதன் அவலத்தையும் வலியையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, தனிப்பட்ட முயற்சி மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக உழைத்திருப்பார்கள், அரசின் கஜானாவைக் காலி செய்திருப்பார்கள், அநேகமாக அவர்கள் இதற்கான நிதியை சேர்க்க போர்கூட புரிந்திருக்கலாம், ஆனால் அவ்வளவு முயற்சிக்கு பிறகும், இறுதியில் அவர்கள் எதிர்பார்த்த நிறைவை அடையவில்லை.
மகன் தந்தைக்காற்றும்...
எனவே அவரது மகன் ராஜேந்திர சோழர், இறந்த தனது தந்தை அரசர் ராஜராஜ சோழருக்கு (சாந்தி) அமைதியை ஏற்படுத்த விரும்பினார், அவர் அந்த கோவிலின் மாதிரி வடிவத்தை, சரியான பிரதி ஒன்றை உருவாக்கினார். ஆனால் அதே அளவிலான பிரம்மாண்டத்தை முயற்சி செய்ய அவர் விரும்பவில்லை. அநேகமாக நடைமுறை நோக்கங்களுக்காக அவர் அப்படி முடிவெடுத்திருக்கலாம். கோவிலின் அளவை அவர் கணிசமாகக் குறைத்தார், இதேபோன்ற ஒரு கோவிலை, இன்னும் வேகமாக எழுப்ப முயன்றார்.
எனவே, கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மிகவும் புகழ்பெற்ற கலைப் படைப்பாக இல்லாமல் இருந்தாலும், செயல்பாட்டு ரீதியாக சிறந்ததாக இருக்கிறது. அங்கே அவர்கள் கோவிலின் கலை அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கவில்லை. பாறைகளை குவித்து கட்டினார்கள், கட்டமைப்பு ரீதியாக அது நல்லது. ஆனால் அழகியலின் அடிப்படையில் தஞ்சாவூர் கோயிலை நெருங்க முடியவில்லை என்றாலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர்கள் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ராஜராஜ சோழரின் வலி
அன்றைய காலகட்டத்தை, தஞ்சையில் கோவில் கட்டியபோது நடந்த முழு நாடகத்தையும் என் மனதில் ஓட்டிப் பார்க்க முயற்சித்தேன். இந்த கோயிலைக் கட்டுவதற்கு அவர்களுக்கு என்ன மாதிரியான ஒரு தைரியம் தேவைப்பட்டிருக்கும், அது முழுமையடையாததைப் பார்த்து எப்படி உணர்ந்திருப்பார்கள், ராஜ ராஜ சோழனின் மகன், ராஜேந்திர சோழன் அப்போதுதான் அரியணை ஏறிய நிலையில் எவ்வளவு வலியைச் சுமந்திருக்க வேண்டும். அவசரமாக அதேபோன்ற மற்றொரு கோவிலை உருவாக்க ராஜேந்திரர் முயன்றார். அதே வடிவமைப்பு, ஆனால் மிகச் சிறிய அளவில் இருந்தாலும், கோவிலை உயிர்ப்போடு கொண்டுவர செய்த முயற்சி என அந்த முழு நாடகத்தையும் நான் என் தலையில் ஓட்ட முயற்சித்தேன், அது உண்மையிலேயே வலி மிகுந்ததாக இருந்தது.
அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்களது முயற்சி பற்றி உங்களுக்கே தெரியும். மிகப் பெரிய அளவிலான ஒரு காரியத்திற்காக, மகத்தான எண்ணிக்கையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை மொத்தமாக முதலீடு செய்து மிகப் பெரிய அளவில் விளையாடுகிறார்கள். ஆனாலும் இறுதியில் அதை நிறைவேற்ற முடியாத வேதனையும், அதை நிறைவேற்றுவதற்கான ஏக்கமும் விருப்பமும் நின்றுவிடுகிறது - அவர்கள் தங்களுக்கென தனிப்பட்ட அளவில் நிறைவை தேடவில்லை. இது உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்காக நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த உலகில் ஓர் அற்புதமான விகிதாச்சாரத்தையும் நிறைவையும் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் ஒரு போராட்டம், வேதனை இது. இதில் எல்லோருமே வெற்றியை சந்திப்பதில்லை. இந்த மிகச்சிறந்த அரசர் அனுபவித்த தோல்வியின் அளவையும் அனைவரும் அனுபவிப்பதில்லை.
வெளியே பிரம்மாண்டம் உள்ளே வெறுமை
வெளியில் பிரம்மாண்டமும் அழகும் பொங்கும் ஓர் இடம், ஆனால் பிரதானமான மூலஸ்தான பகுதி வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில், பிரதானமான மூலஸ்தான பகுதி வலிமை நிறைந்தாக உள்ளது, ஆனால் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமும் அழகும் இல்லை. இதுதான் பல வழிகளிலும் உலகின் கதையாக இருக்கிறது - வெளியில் நல்வாழ்வு மற்றும் செல்வச்செழிப்பு; ஆனால் உள்நிலையில் வெறுமை. உள்நிலையில் வலிமையும் அழகும் இருக்கும் இடத்தில், வறுமை மற்றும் கவனிக்கப்படாத பிற வகையான வெளிசூழ்நிலை விஷயங்கள்.
இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு காலகட்டம் வந்துவிட்டது. வெளிப்புற சூழ்நிலைகளை கையாளும் அடிப்படையில், மனிதகுலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நாம் திறமையானவர்களாக இருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத விஷயங்களை இன்று நாம் மிகச் சுலபமாக செய்ய முடியும். வெளிசூழ்நிலைகளை நிர்வகிப்பதில் இப்போது இந்த வகையான திறனை நாம் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிநபராகவும் நாம் இன்னொரு தஞ்சை பெரிய கோவிலாக மாறாமல் இருப்பது மிகவும் முக்கியம் - வெளியில் அழகாக, உள்ளே வெறுமையாக இருந்துவிடக்கூடாது. தனிமனிதர்களாக, சமுதாயங்களாக, தேசங்களாக, மனிதகுலமாக, நாம் இந்த முழுமையடையாத தஞ்சை கோவிலைப் போல ஆகிவிடக்கூடாது.
உள்நிலை வளர்ச்சி
எனவே, இந்த நேரத்தில், மனிதகுலம் தங்கள் வெளிசூழ்நிலைகளில் சற்றே வேகத்தை குறைப்பது பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் சொந்த விழிப்புணர்வால் ஏற்படவில்லை, ஆனால் சுற்றுச்சூழல் நிர்பந்தங்கள் காரணமாக, அவர்கள் அதிக காலம் வாழ விரும்பினால் மனிதகுலம் அதன் வெளிப்புற ஆடம்பரத்தை கணிசமாக குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் ஓர் இனமாக இந்த பூமியில் நீண்ட காலம் இருக்க வேண்டுமானால், வெளிமுகமாக உள்ள நமது திட்டங்களை சற்று குறைத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அப்படிப்பட்ட நேரம் இப்போது வந்திருப்பது சிறப்பானது - ஏனென்றால் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எண்ணும் மனித அபிலாஷைகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது - எனவே உள்நிலையில் பிரம்மாண்டமான திட்டங்களை நாம் வகுக்கத் தொடங்குவது மிகவும் முக்கியமாகிறது. இல்லையெனில் ஒரு மனிதன் எங்கேயோ சிக்கிக்கொண்டதாக உணர்வான். ஒருவரின் படைப்பாற்றலுக்கு வெளிப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவர் இப்போது இருப்பதை விட அதிகமாக ஏதாவது செய்ய விரும்புவதை வெளிப்படுத்த முடியவில்லை என்றால், தான் ஏதோ சிறைப்பட்டு விட்டதாக தோன்றும்.
எனவே மனிதனின் உள்ளம் பற்றிய மிகப் பெரிய அளவிலான திட்டங்களை வகுக்க வேண்டிய நேரம் இது. ஆனால் அதற்கும் கூட வெளிப்புறத்தில் ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வருடங்களில், ஓரிரு வருடங்களில் நாம் அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம். உங்களுக்குள் நீங்கள் என்ன செய்ய முடியும் என ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பிரம்மாண்டமான திட்டங்களை வகுக்க விரும்புகிறோம். ஒருவர் தன்னுள் செய்யக்கூடிய நம்பமுடியாத விஷயங்கள் உள்ளன, இது ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக வைத்திருக்கும்.
நிலையான அடித்தளம்
இந்த நேரத்தில் நம்முடன் கைகோர்த்து நிற்க நமக்கு நிறைய மக்கள் தேவை. உங்களிடம் என்ன திறன் இருக்கிறது, என்ன திறன் இல்லை என்பது முக்கியமில்லை . என்னைப் பொருத்தவரை - மக்களின் திறமையைப் பற்றி எனக்கு கவலை இல்லை, திறமையை எப்படி உருவாக்குவது என்பதை நாம் அறிவோம், ஆனால் உங்களுக்கென்று தனியாக சொந்த விருப்பு வெறுப்பின்றி உங்களை இந்தச் செயல்முறைக்கு உட்படுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். உங்கள் மூலமாக எதை வேண்டுமானாலும் நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.
எனவே நாம் உண்மையில் திறமையை தேடவில்லை. உங்களிடம் திறமை இருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் எதுவும் இல்லை, ஆனால் நீங்கள்.... உங்களிடம் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அல்லது பக்தி இருந்தால், நீங்கள் மிகவும் பயனுள்ளவராக இருக்கிறீர்கள், ஏனென்றால் திறமையை இப்போது உருவாக்க முடியும், எதையும் கட்டமைக்க முடியும். உங்களுக்குள் அந்த ஒரு நிலையான அடித்தளம் இருந்தால், உங்கள் அர்ப்பணிப்பும் பக்தியும் தளர்ந்துவிடாதபடி, அந்த ஓர் அடித்தளம் இருந்தால், அதன் மீது எந்த கட்டமைப்பையும் நம்மால் உருவாக்க முடியும்.
வரவிருக்கும் சில மாதங்களில் அந்த வகையான அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் வெளிப்பாட்டை நான் எதிர்நோக்குகிறேன். ஏனென்றால் அப்போதுதான் இந்த பூமியில் மனித வாழ்க்கை மகத்தான மதிப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்வின் கவனம் ஒரு கணம் கூட மாறாது என்ற அடிப்படையான நிலைத்தன்மை இல்லாமல் அதைச் செய்ய முடியாது. அந்த நிலைத்தன்மை மாறினால் அது எல்லாவற்றையும் தளர்த்தும். நகரும் அடித்தளத்தின் மீது நீங்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியுமா... ம்ம்? ஒரு நிலையான அடித்தளத்தின் மீது மட்டுமே எதையும் உருவாக்க முடியும். உங்களில் பலர், அந்த ஸ்திரத்தன்மையை உங்களுக்குள் கொண்டுவருவதற்கு உழைப்பீர்கள் என்று நம்புகிறேன் - அப்போதுதான் நம்மால் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மதிப்புமிக்க ஒன்றை உருவாக்கி வழங்க முடியும்.
மீண்டும் நீங்கள் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கையில் எடுப்பதற்கு முன், நேரில் சென்று தஞ்சை பெரிய கோவிலையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த மனிதர்களை இப்படி ஒரு செயலை கையில் எடுக்கத் தூண்டியது எது? இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களின் நோக்கம் உங்களுக்கு புரிகிறதா? தங்கள் சொந்த வாழ்வாதாரத்திற்காக அவர்கள் இதைச் செய்யவில்லை. அழகியலை முன்னிறுத்தி அவர்கள் இதில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் உருவாக்கியது ஏதோ ஒரு தொழிற்சாலை கொட்டகை அல்ல. அழகியலுக்காக, அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் முதலீடு செய்ய தயாராக இருந்தனர். அவர்கள் பெற்றிருந்த அனைத்தையும் இதில் முதலீடு செய்தார்கள். நாம் ஓர் அழகான, மகத்தான பாரதத்தை உருவாக்க விரும்பினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் மனதில் சுடராய் ஒளிர்ந்த அந்த கலாச்சாரம் திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன் - இதுவே மிக முக்கியமானது.