தளபதியை பார்க்க ஜென்குரு ஏன் மறுத்தார்?
உங்கள் உடல், மனம், பதவி, உங்கள் சொத்து என உங்கள் கையில் எதைக் கொடுத்தாலும், அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். எதெல்லாம் உண்மையில் நீங்கள் இல்லையோ, அதனுடன் எல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டு அவதிப்படுகிறீர்கள்.
ஜென்னல் பகுதி 18
ஜென் மடத்தின் வாசலில் குதிரையில் இருந்து அவர் இறங்கினார். அங்கிருந்தவரிடம், “உன் குருவைச் சந்திக்க விரும்புகிறேன். இந்த நாட்டின் தலைமைத் தளபதி வந்திருப்பதாகப் போய்ச் சொல்” என்றார்.
உள்ளே போன சீடர் விரைந்து திரும்பி வந்து, “எந்தத் தலைமைத் தளபதியையும் தனக்குத் தெரியாது என்று சொல்லி குரு உங்களைப் பார்க்க மறுத்துவிட்டார்” என்றார்.
தளபதி மண்டியிட்டார். “குருவை நாடி வந்திருக்கிறேன் என்று சொல்” என்றார்.
குருவே வெளியே வந்தார். “உள்ளே வாருங்கள்” என்று அழைத்துப் போனார்.
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
நம்மை ஓர் உயிராக உணரவிடாமல், ஆன்மிகத்துக்குத் தடையாக இருப்பது நாம் சுமக்கும் அடையாளம்தான்.
பிழைப்புக்காக நாம் பலவிதமான அடையாளங்களை எடுக்கிறோம். அந்த அடையாளத்தால் உயிரின் தன்மை எதுவும் புரியப்போவது இல்லை.
தேவை இல்லாத சாப்பாட்டை வயிறு அடைக்கச் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படுவதுபோல், தேவையற்ற அடையாளங்களால் மனதை நிரப்பினால், அது மனபேதியில் தான் கொண்டுவிடும்.
உங்கள் உடல், மனம், பதவி, உங்கள் சொத்து என உங்கள் கையில் எதைக் கொடுத்தாலும், அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். எதெல்லாம் உண்மையில் நீங்கள் இல்லையோ, அதனுடன் எல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டு அவதிப்படுகிறீர்கள்.
யாராவது பக்கத்தில் இருந்தால், அவருக்கு நீங்கள் யார் என்றுகூட அடையாளம் காண்கிறீர்கள். இப்படி அடையாளங்களில் சிக்கிப் போகிறவர் நிச்சயம் மனபேதி கொண்டிருப்பார். எதைப் போட்டாலும், அது நிற்காமல், வெளியேறிவிடும். அவருக்குத் தியானம் சொல்லித் தர முடியுமா, இல்லை ஆன்மிகம் பற்றிப் புரியவைக்கத்தான் முடியுமா? இப்படிப்பட்டவருடன் குருவுக்கு என்ன வேலை? அதனால்தான் அவனைப் பார்க்க குரு மறுத்தார்.
எப்போது தன் பதவி பற்றிய அடையாளத்தை இறக்கி வைத்துவிட்டு, அவன் நின்றானோ, அப்போது சந்தோஷமாக அவனை உள்ளே அழைத்துச் சென்றார்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418