இன்றைய மக்களாட்சி சூழ்நிலையில் தடை உத்தரவுகள் சமூகத்தை எப்படி பாதிக்கின்றன என்பது குறித்து சத்குரு கூறியதிலிருந்து...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில காலமாகவே, பிரச்சனைகளைத் தவிர்த்திடும் அவசர நடவடிக்கையாக புத்தகங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள் என்று எதுவாக இருந்தாலும் சிறிதும் யோசிக்காமல் தடை செய்யப்படுகின்றன. ஆனால் உண்மையான ஜனநாயக சிந்தனையோ, யாருடைய கருத்தையும் தடைசெய்திட விழைவதில்லை. யாரோ ஒருவருடைய கருத்து இறுதி உண்மையல்ல என்பது ஜனநாயகத்திற்குத் தெரியும். ஒரு சமூகம் வளர்வதற்கு வெவ்வேறு விதமான கருத்துக்கள் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் புண்படுத்தவோ அல்லது கேடு விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, குறிப்பிட்ட ஏதோ ஒன்றிற்கோ யாரோ ஒருவருக்கோ அவதூறு ஏற்படுத்தவோ செய்யப்பட்டாலொழிய, ஜனநாயகத்தில் தடை செய்வது என்பதே இருக்கக்கூடாது.

துரதிருஷ்டவசமாக, துரிதமான சட்ட நடவடிக்கைகளுக்கு வழியில்லாமல் இருப்பதே பல்வேறு கலை வெளிப்பாடுகள் குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம் என்ற நோக்கில் தடை செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துரிதமானதாக இருக்கும்பட்சத்தில், அவையே அவதூறு ஏற்படுத்தக் கூடிய விஷயங்களுக்கு விவேகமான தீர்வாக இருக்கும். அப்போது ஏதோ ஒன்றை தடை செய்வதற்கான தேவை முற்றிலும் இல்லாமல் போய்விடும்.

மேலும் எது சரியாக இருக்கிறது, எது மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று யார் முடிவு செய்கிறார்கள்? உதாரணத்திற்கு உலக சரித்திரத்தைப் பார்ப்போம். இயேசுவையும் கௌதம புத்தரையும் எடுத்துக்கொள்ளுங்கள். மதத்தை சுத்தப்படுத்தவும், வர்த்தகத்தை கோயிலுக்கு வெளியே கொண்டு செல்லவும் மட்டுமே இயேசு விழைந்தார், அவர் செய்ய முயன்றது அவ்வளவுதான். அதை வெளிப்படையாகப் பேசியதற்கு அவர் எவ்வளவு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வந்துசென்ற ஒவ்வொரு குருவும், யோகியும், பக்தரும், ஞானியும், முற்றிலும் புரட்சிகரமான விஷயங்களைப் பேசினார்கள், புரட்சிகரமான செயல்களைச் செய்தார்கள். உச்சபட்ச உண்மைக்கு வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் குறிப்பிட்டனர். ஆனால் எவரும் எந்தவித கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை. பலர் கடவுளை கேலி செய்தனர், அப்போதும் துன்புறுத்தப்படவில்லை. விவாதங்கள் மட்டுமே நிகழ்ந்தன. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கருத்துக்கள் இருக்கும் என்பதையும், எந்தவொரு கருத்தும் இறுதியான உண்மையல்ல என்பதையும் இந்தக் கலாச்சாரம் உணர்ந்திருந்தது.

ஜனநாயகம் என்ற கோட்பாடு உருவாகாத காலத்திலேயே ஒரு ஜனநாயகமாக வாழ்வதெப்படி என்பதை நாம் அறிந்திருந்தோம். ஏனெனில் நமது ஆன்மீக வளர்ச்சியானது, ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இடம்கொடுத்தது. இன்று, ஒரு ஜனநாயக நாடு என்ற முத்திரை பதிக்கப்பட்டு இருக்கும்போதும், நாம் பண்ணை ஜமீன்தார் போல் நடந்துகொள்வது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது. சமுதாயத்தில் வாழும்போது சிந்தனைகளிலும் செயல்களிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். "எனக்கு எதிராகவோ நான் நம்புவதற்கு எதிராகவோ யாரும் எதுவும் பேசக்கூடாது" என்ற நிபந்தனையுடன் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

உங்களைப் பற்றியோ அல்லது வேறு எதையாவது பற்றியோ யாராவது ஏதாவது சொன்னால், காது கொடுத்துக் கேளுங்கள், உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று பாருங்கள். அவர்கள் சொல்வதில் உண்மையிருந்தால், எதையாவது சரிசெய்ய வேண்டியிருந்தால் நாம் சரிசெய்து கொள்ளலாம். இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் கிசுகிசுக்களை இரசித்துக்கொள்ளலாம். இதில் இவ்வளவுதான் இருக்கிறது. உங்கள் காரண அறிவு பக்குவமடையும்போது, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வீர்கள், ஏனெனில் நீங்கள் வாழ்க்கை செயல்முறையை புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் தர்க்கத்தை மட்டுமே வைத்து செயல்படாமல் வாழ்க்கையின் காரண-காரியங்களின்படி செயல்படுவீர்கள். வெறும் தர்க்க அறிவைத் தாண்டி வாழ்க்கை குறித்த அறிவு உங்களிடம் இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, உலகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இப்படியில்லை. உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை யாராவது சொன்னால், நீங்கள் அவரையோ அவர் செயலையோ அழித்துவிடுவீர்கள். ஆனாலும், வேடிக்கை என்னவென்றால், இந்த ஒரு கலாச்சாரத்தில் மட்டும்தான் தண்டனையின் அச்சுறுத்தலும் தடை செய்யப்படும் அபாயமும் இல்லாமல், எவரும் எதுவும் பேசிட ஆன்மீக அடித்தளம் ஒன்று உருவாகியிருந்தது. இதை நாம் மறந்துவிட்டு, ஜனநாயகம் என்ற பெயரில் இன்று நடந்துகொள்வது போலவே தொடர்ந்து அதிகாரத்துடன் நடந்துகொண்டால், பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்திருக்கும் "விடுதலை அல்லது முக்தியை நாடுபவர்கள்" எனும் மிக உயர்ந்த பண்பினை இழக்க நேரிடும்.