தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க வந்த சிவன்
இந்தியாவின் வடப்பக்கம் இமயமலைகளிலே வாழ்ந்தவர் சிவன். நம் தமிழ்நாட்டிலிருந்து வடஇந்தியாவில் இருக்கும் காசிக்கும், இமயமலைக்கும், கைலாயத்திற்கும் நாம் இன்றும் தவறாது புனிதப் பயணம் மேற்கொள்கிறோம். என்றாலும் தென்னிந்தியாவில் சிவனின் காலடி பட்ட இடம், சிவன் வாழ்ந்த இடம் ஒன்று உண்டு. விவரம் இங்கே...
 
 

சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 10

இந்தியாவின் வடப்பக்கம் இமயமலைகளிலே வாழ்ந்தவர் சிவன். நம் தமிழ்நாட்டிலிருந்து வடஇந்தியாவில் இருக்கும் காசிக்கும், இமயமலைக்கும், கைலாயத்திற்கும் நாம் இன்றும் தவறாது புனிதப் பயணம் மேற்கொள்கிறோம். என்றாலும் தென்னிந்தியாவில் சிவனின் காலடி பட்ட இடம், சிவன் வாழ்ந்த இடம் ஒன்று உண்டு. விவரம் இங்கே...

சத்குரு:

இந்தியாவின் தென்கோடி முனையில் வாழ்ந்த ஒரு இளம் பெண் சிவனை மணம் முடிக்க ஆசை கொண்டாள். அவள் பெயர் புண்யாக்ஷி. ஆழமான உள்வாங்கும் திறனுடனும், அருள்வாக்கு சொல்லும் சக்தியையும் பெற்றிருந்தாள் புண்யாக்ஷி. சிவனுக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டு, அவள் சிவனை தன்பால் ஈர்க்க முனைந்தாள். வேறெதிலுமே கவனம் சிதறாமல், சிவனை மணந்திட வேண்டும் என்ற அந்த எண்ணத்திலேயே அவள் மிகத் தீவிரமாக இருந்தாள். ஒரு குறிப்பிட்ட தினத்தை மனதில் நினைத்து, "அந்த நாள் சூரிய உதயத்திற்கு முன்பு அவர் என்னை மணந்திடாவிட்டால், நான் என் உடலைத் துறந்து விடுவேன்," என்று முடிவு செய்தாள்.

எங்கெல்லாம் சிவன் தங்கியிருந்தாரோ அவ்விடத்தையெல்லாம் கைலாயம் என்று அழைக்கும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தபடியால், பின்னர் இவ்விடம் தென் கைலாயம் என்றே அழைக்கப்பட்டது.

அவளது தீவிரம் எதற்கும் அசையாத சிவனையே உலுக்கியது. அவள் மீது கருணை கொண்டு, அவளை மணமுடிக்க இசைந்தார். சுடும் கதிரவனாய் கடுந்தவக் கோலம் கொண்ட சிவன் தற்போது குளிர் நிலவாய், அன்பு வெள்ளமாய் இமயமலையிலிருந்து குமரிமுனைக்கு பயணப்பட்டார்.

ஆனால் புண்யாக்ஷி வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில் உள்ளவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புண்யாக்ஷியின் தெய்வீக சொற்களும் அவளது அன்பும், வழிகாட்டுதலும் இனி கிடைக்கப் பெறாமல் போய்விடுமோ என வருத்தம் கொண்டனர். திருமணத்தை நிறுத்தி விடுவது தான் இதற்கான ஒரே தீர்வு என்று ஊர்மக்கள் கூடிப்பேசி முடிவு எடுத்தனர்.

திருமணம் நடக்கவிருக்கும் இடத்திற்கு சிவன் வேகவேகமாக வந்து கொண்டிருந்தார். சுசீந்தரம் வழியாக சிவன் வந்து கொண்டிருந்தபோது அங்கே தங்களது இறுதி சூழ்ச்சியை அந்த ஊர்பெரியவர்கள் அரங்கேற்றினர். பெரும் கற்பூரக் குவியலைப் பற்றவைத்து, அது கொழுந்துவிட்டு எரிய, அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகளை விடிகாலைப் பனி பன்மடங்காகப் பிரதிபலிக்க, அதன் தாக்கம் சூரியோதயம்போல் தோன்றத் துவங்கியது. சிவன் அவ்விடத்திற்கு மிக அருகில் இருந்தார். வெறும் 22 கிமீ தூரத்தில் இருந்த சிவன், இதைப் பார்த்து சூரியன் உதித்துவிட்டது, எல்லாம் முடிந்துவிட்டது என்றெண்ணி, வந்த வழியே திரும்பினார்.

இது ஏதும் அறியாத புண்யாக்ஷி, சிவன் வரவில்லை என்றதும் ஆவேசமானாள். மனம் ஒடிந்து போனாள். அவள் கைதேர்ந்த யோகியும் ஆதலால், அத்திசையில் இருந்த நிலப்பரப்பின் எல்லைக்குச் சென்று, நின்றபடியே தன் உடலைத் துறந்தாள். இன்றளவும்கூட, அவள் 'கன்னியாகுமாரி'யாக, நிற்கும் நிலையிலேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். இந்திய நிலப்பரப்பின் அந்தத் தென்கோடி நுனியில் அவளின் திருச்சின்னமாக ஒரு இடம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்த சிவன், சரியான நேரத்தில் தான் வரமுடியாமல் போனதை எண்ணி மனம் நொந்து தன் மீதே கோபமாக இருந்தார். திரும்பிச் செல்லும் வழியில் தனது மன வேதனையையும், கோபத்தையும் ஆற்றிக் கொள்ள ஒரு இடம் தேடினார். வெள்ளியங்கிரி மலையைப் பார்த்துவிட்டு, அதில் ஏறி, அதன் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார்.

அவ்விடம் சிவன் வாழ்ந்த மற்ற இடங்களைப் போல் அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட சக்தி அதிர்வுகள் நிறைந்த இடமாக மாறியது. காரணம், சிவன் அங்கு ஆனந்த நிலையிலோ அல்லது அசைவற்ற தியானத்திலோ அமரவில்லை. தன்னைத் தானே நொந்து கொண்டு, தன் மீதே கோபமான நிலையில் உட்கார்ந்திருந்தார். கோபமும், சோர்வுமாய் இங்கே அமர்ந்த சிவனின் சக்தியை ஈர்த்து கொண்ட இம்மலையின் அதிர்வுகள், மிகத்தீவிரமாய், வேறெங்கும் இருப்பதை விட வித்தியாசமாய் இருக்கும். அங்கே பல நாட்கள் சிவன் தங்கி இருந்தார். அதன் பின், தன் மனநிலை மெல்ல மெல்ல அமைதியான பிறகே, அவர் அங்கிருந்து கிளம்பினார்.

எங்கெல்லாம் சிவன் தங்கியிருந்தாரோ அவ்விடத்தையெல்லாம் கைலாயம் என்று அழைக்கும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தபடியால், பின்னர் இவ்விடம் தென் கைலாயம் என்றே அழைக்கப்பட்டது.

கைலாய மலையைப் போல் அடர்ந்த பனிமூட்டம் இங்கே இல்லையென்றாலும் இம்மலையின் சக்தி அதிர்வுகளும் அதன் அருளும் கைலாய மலையைப் போன்றதே. தன் திறனிலும் அழகிலும் புனிதத் தன்மையிலும் இது கைலாயத்தை விட குறைவானது இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல யோகிகளும் ஞானிகளும் துறவிகளும் இம்மலையின் சக்தியை தம் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கின்றனர். கடவுளும் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு இம்மலையில் வாழ்ந்த ஞானியர்களின் உள்நிலை உயர்வாக இருந்தது. அந்த அற்புதமான மனிதர்கள் தமது சக்தியை இம்மலையில் பதித்து வைத்துள்ளனர்.

அடுத்த பதிவில்...

எந்தப் பிரிவிலும், எந்த வகையிலும் அடங்கிடாத சிவன்..!


சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1