Question: சத்குரு, பல நேரங்களில் என்னால் சுயநலமாகத்தான் இருக்க முடிகிறது, இது தவறா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எது சுயநலம்?

சுயநலமாய் இருப்பதை நீங்கள் தவிர்க்க முடியாது. நான் சுயநலமாய் இருக்கக் கூடாது, சுயநலமாய் இருக்கக் கூடாது, சுயநலமாய் இருக்கக் கூடாது - இதுவே சுயநலம்தான் இல்லையா? நீங்கள் சுயநலத்துடன் இருங்கள். உங்களையே நீங்கள் உண்மையாகப் பார்த்தால் உங்களால் சுயநலமற்று இருக்க முடியாது, அதற்கு நீங்கள் திறமையற்றவர் என்பது புரியும்.

சுயநலத்திலும் கஞ்சத்தானமாய் இருக்க வேண்டாம், முழு சுயநலத்துடன் இருங்கள்

எப்படிப் பார்த்தாலும் இந்த வாழ்க்கையை நீங்கள் உங்கள் கோணத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறீர்கள். அதன்படித்தான் நடக்கிறீர்கள். எனவே சுயநலம் என்று எதுவும் கிடையாது. அது ஒரு பொய் மட்டுமே. ஒழுக்கம் என்று நீங்கள் சொல்வதுதான் இந்த பொய்யை உருவாக்கியிருக்கிறது. பல மக்கள் இதனால் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். மக்கள், சில செயல் செய்யும்போது சுயநலம் இல்லாமல் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருவதால்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்த ஒரு வழியில் தான் அவர்கள் அமைதியாக இருக்க முடியும்.

தான் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற சுயநலத்தில்தான் அந்தச் செயலை அவர்கள் செய்வார்கள். எனவே சுயநலத்துடன் மட்டுமே நீங்கள் இருக்க முடியும். நான் சொல்வது என்னவென்றால், சுயநலத்திலும் கஞ்சத்தானமாய் இருக்க வேண்டாம், முழு சுயநலத்துடன் இருங்கள் என்று சொல்கிறேன்.

சுயநலத்தை எல்லையில்லாமல் ஆக்குங்கள்!

எந்த விஷயத்தில் நீங்கள் சுயநலமாக இருக்க விரும்புவீர்கள்? மகிழ்ச்சியடைவதில்தான். இதுதான் உங்களுடைய அடிப்படை சுயநலம், இல்லையா? ஆனால் முழு சுயநலத்துடன் இருங்கள். எனக்கு இந்த உலகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுது எந்த சிக்கலும் இருக்காது. சுயநலத்திலும் கஞ்சத்தனம் காட்டுவதுதான் உங்கள் பிரச்சனை. எல்லையற்ற வழிகளில் சுயநலத்துடன் இருப்போம்.

வாழ்க்கையின் பல அம்சங்களில் முழுமையாக இருக்க நீங்கள் விருப்பம் காட்டுவதில்லை. குறைந்தபட்சம் சுயநலத்திலாவது முழுமையுடன் இருக்கலாமே. நன்னடத்தை என்ற பெயரில் உங்களுக்கே நீங்கள் தவறாக வழி காட்டிக் கொள்ளாதீர்கள். அப்படி நடக்கவே நடக்காது. சுயநலமற்றவராக இருக்க முயற்சி செய்து பாருங்கள். கடைசியில் உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்வீர்கள்.

வாழ்க்கை இரண்டு வழிகளில்...

இரண்டு வழிகளில்தான் உங்களால் இருக்க முடியும். உச்சியை அடைய வேண்டுமானால், ஒன்று நீங்கள் ஒரு பூஜ்யமாக மாற வேண்டும். அல்லது எல்லையற்றவராக மாற வேண்டும். இவை இரண்டுக்கும் வேறுபாடே இல்லை. சுயநலமற்றவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களையே தாழ்த்திக் கொள்கிறீர்கள். நீங்கள் 10 என்றால் உங்களை 5 ஆக்கிக் கொள்கிறீர்கள். 0 ஆக்கிக் கொள்ள முடியாது. 10லிருந்து 5 ஆக்கிக் கொள்வது இன்னமும் சிக்கலாகத்தான் இருக்கிறது. ஒன்று நீங்கள் முழு பூஜ்யமாக ஆக வேண்டும். ஒரு சிக்கலுமில்லை. அல்லது நீங்கள் எல்லையற்றவராக ஆக வேண்டும். இப்பொழுதும் ஒரு சிக்கலுமில்லை.

எனவே பக்தியின் பாதை கரைவதுதான். ஒன்று சரணடைந்து ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுங்கள். அப்பொழுது ஒரு சிக்கலும் இருக்காது. அல்லது எல்லாவற்றையும் உங்களில் ஒரு பாகமாக்கிக் கொண்டு எல்லாமுமாகி விடுங்கள். அப்பொழுதும் ஒரு சிக்கலுமில்லை. ஆனால் உங்களைப் பற்றி பேசுவதற்கு என்று உங்களுக்கு ஏதோ இருக்கும்போது, இருக்கக்கூடிய ஒன்றைப்பற்றித்தான் பேச முடியும். எனவே கரைந்து போதல் என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே எல்லையற்றவராகி விடுவதே சிறந்தது. இதுதான் உங்களுக்கு எளிமையான வழி.