ஒருபக்கம் நகைச்சுவை சினிமாக்களும், தொலைக்காட்சிகளும் பெரும் வரவேற்போடு மக்களைச் சிரிக்க வைக்க, இன்னொரு பக்கம், "லாஃபிங் கிளப்" என்ற பெயரில், சுற்றி நின்று சிரித்துக்கொள்கின்றனர். இவையெல்லாம் நம்முள் இயல்பாக இருக்கக்கூடிய அம்சத்தை வெளிக்கொணர ஊன்றுகோல்கள் மட்டும்தான். ஆனால் தன் வாழ்வில் நகைச்சுவை எப்படி ஒரு அம்சமாக இருக்கிறது என்பதை சுவாரஸ்யமாக நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு.

சத்குரு:

வாழ்வின் முக்கியச் செய்திகள் நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து. ஆனால், நான் நகைச்சுவைக்காக ஒன்றைச் சொல்லும்போது, அதை ஜோக்காக மட்டுமே பார்த்து அதன் பின்னே பொதிந்திருக்கும் முக்கியமான செய்தியைத் தவற விடுபவர்களே அதிகம்!

'மழையில் நனைவதில் மிகப் பெரிய வசதி இருக்கிறது. கண்ணீர் வெளியே தெரியாது!' என்ற சார்ளி சாப்ளினின் வாசகம் அவர் நிலையை உலகுக்குச் சொல்லும்.

நகைக்சுவை என்பது ஒரு குணம் அல்ல. அது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தன்மையல்ல. ஆனந்தமாக இருக்கும் ஒருவரது பேச்சில், இயல்பாகவே நகைச்சுவை கலந்திருக்கும். ஆனந்தம் என்பது அபூர்வமாகிவிட்டதால்தான், நகைச்சுவை என்பது பேசுவதற்குரிய ஒரு பொருளாகிவிட்டது.

போர்க்களத்துக்குப் போய் பாருங்கள். கிடைக்கும் இடைவெளிகளில் சிப்பாய்கள் சிரித்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அதே சமயம், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில், சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு இருப்பவர்கள் எவ்வளவுபேர் என்றும் பாருங்கள்.

ஆபத்து இருக்கும் இடத்திலேயே சந்தோஷமாக இருக்க முடிகிறதே. பிறகு ஏன் விளையாட்டாகச் செய்ய வேண்டியதை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு செய்கிறார்கள்? மனித உயிர்களைவிடவும் பணத்தைப் பெரிதாக நினைப்பவர்கள் முகத்தில் எப்படிச் சந்தோஷம் வரும்? எப்படிச் சிரிப்பு வரும்? இவர்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டினாலும் கோபம் வருமே தவிர, மகிழ்ச்சியான சிரிப்பு வராது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மல்லாடிஹல்லி சுவாமி, கர்நாடகத்தில் வாழ்ந்த உன்னதமான யோகி. எந்த அளவுக்கு அவர் தெளிவாகவும், தன்னை அர்ப்பணித்தவராகவும் இருந்தார் என்பதற்குப் பல நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.

திங்கட்கிழமைகளில் அவர் ஆயுர்வேத மருத்துவராகச் செயல்படுவார். அதிகாலை 4 மணிக்கு அமர்ந்தார் என்றால், இரவு 7 மணி வரை, தன்னை நாடி வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அது 'மருத்துவர்-நோயாளி' உறவாகவே இருக்காது. அவர் இருக்கும் இடம் பண்டிகைபோல் கொண்டாட்டமாக இருக்கும். தன்னிடம் வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி ஜோக் வைத்திருப்பார். வந்தவர் தன் வேதனை மறந்து, இறுக்கம் தளர்ந்து சிரித்திருக்கையில், சிகிச்சை நிகழும். நோய் பறந்தோடும்!

என் வீட்டில் லீலா என்றொரு நாய் இருக்கிறது. அண்மையில் யாரிடமோ போனில் பேசியபடி, சில கடிதங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என் தட்டில் பழத்துண்டங்கள் காத்திருப்பதை லீலா கவனித்தது. தனக்கான பங்கைக் கேட்டுக் குரைத்தது.

அதன் அழைப்பை கவனிக்க முடியாமல், சில குறிப்புகள் எடுத்துக் கொள்ள எழுந்து போனவன் போனில் பேசிக் கொண்டே வந்து பழைய இடத்தில் அமர எத்தனித்தேன். துதும்...! என்று வாரியடித்துக் கொண்டு மல்லாக்க விழுந்தேன். அத்தனை நேரம் நான் அமர்ந்திருந்த மெத்தையை லீலா கவ்வி நகர்த்திவிட்டிருந்தது. 'இப்போதாவது என்னைக் கவனிப்பாயா?" என்பதுபோல் பார்த்தது. அடக்க முடியாமல் சிரித்தேன்.

உலகில் மிகப் பெரிய நகைச்சுவையாளர்களில் சிலர், தங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனது சிறு வயதில் சார்லி சாப்ளின் படங்கள் என்னை சிரிக்க வைத்ததைவிட வருத்தப்படவே வைத்திருக்கின்றன. அவருடைய அதீத புத்திசாலித்தனத்துக்குப் பின்னால் மறைந்திருந்த சோகம்தான் என்னைப் பாதித்தது. 'மழையில் நனைவதில் மிகப் பெரிய வசதி இருக்கிறது. கண்ணீர் வெளியே தெரியாது!' என்று அவர் சொன்ன வாக்கியமே அவர் நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்.

மோசமான வாழ்க்கை வாழ்பவருக்குத்தான், சோகத்தைச் சிறிது நேரம் மறந்திருந்த நகைச்சுவை ஒரு நிவாரணியாகப் பயன்படும். ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக வாழத் தெரிந்தவருக்கு நகைச்சுவை என்பது இடைவெளியில் தேவைப்படும் பொழுதுபோக்காக இருக்காது.

ஒருவன் தன் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் டாக்டரைப் பார்க்கப் போனான்.

"உங்கள் முதுகுத்தண்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். 3 லட்சம் செலவாகும்," என்றார் டாக்டர்.

"டாக்டர், 300 ரூபாய்க்கு ஏதாவது செய்ய முடியுமா?" என்று கேட்டான் நோயாளி.

டாக்டர் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சொன்னார், "அதற்கென்ன? உங்கள் ஸ்கேன் ரிப்போர்டுகளை வேண்டுமானால் கொஞ்சம் திருத்தித் தர முடியும்," என்றார்.

நகைச்சுவை என்பதை உங்கள் பிரச்சனைகளிலிருந்து சற்று நேரம் விலகியிருப்பதற்காக மட்டுமே அணுகினீர்கள் என்றால், வாழ்க்கையைத் தவறவிடுவீர்கள்.

செவிகள் சிறு துளைகளாக இருக்கின்றன. அவற்றின் வழியே ஒருவர் இதயத்தில் புகுவது கடினம். வெடித்துச் சிரிக்கும்போது வாயுடன் சேர்ந்து இதயமும் அகலமாகத் திறக்கிறது. நுழைவது சுலபம்!

Matthew Grapengieser @ flickr