சிவன் சத்குருவிற்கு என்ன செய்தார்?
சிவனைப் பற்றி இதுவரை சத்குரு சொன்ன விபரங்களை இங்கே உங்களுக்கு வடித்தோம். இந்தப் பகுதியில், சத்குருவின் உணர்வில் சிவன்...
 
 

சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 13

சிவனைப் பற்றி இதுவரை சத்குரு சொன்ன விபரங்களை இங்கே உங்களுக்கு வடித்தோம். இந்தப் பகுதியில், சத்குருவின் உணர்வில் சிவன்...

சத்குரு:

இப்படி ஒரு அடிப்படை சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறது என்பது, அந்த எழுவரின் மனதில் ஆதியோகி விதைத்த அந்த ஒற்றை எண்ணத்தில் இருந்து வெளிப்பட்டது தான். அவர்கள் அப்போது வாழ்ந்திருந்த சராசரி வாழ்வின் கட்டுப்பாடுகளைத் தாண்டிய ஒன்றிற்கான பசியை, அவர் அவர்களுக்கு உண்டாக்கினார். ஒரு மனிதன் என்று அவர்கள் அதுவரை அறிந்திருந்ததைத் தாண்டிய நிலையை உணர வேண்டும் என்ற ஏக்கத்தை, அவர் அவர்கள் மனதில் ஊன்றச் செய்தார்.

அவருக்குப் பின்னும் கூட, கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளாக இதைவிட புரட்சிகரமான ஒரு எண்ணத்தை இவ்வுலகில் வேறு யாரும் வழங்கவில்லை.

ஒவ்வொரு உயிரினமும் அதற்கென ஒரு வரம்புடனேயே இங்கு தோன்றியிருக்கிறது. ஒரு எறும்பு சிலவற்றைச் செய்யமுடியும். எறும்புகளில், 'சாகச' எறும்புகள் உண்டு. அவற்றால் இன்னும் சற்று அதிகமாய் செய்யமுடியும்... ஆனால் அந்த வரம்பிற்குள்ளே. ஒரு புலி சிலவற்றைச் செய்ய முடியும், ஆனால் அந்த வரம்பிற்குள்ளே. யானை சிலவற்றைச் செய்யமுடியும். ஆனால் அந்த வரம்பிற்குள்ளே. மனிதனும் சிலவற்றை செய்யமுடியும் ஆனால் அந்த வரம்பிற்குள்ளே.. இப்படித்தான் மனிதர்கள் அன்று வாழ்ந்திருந்தார்கள். ஆனால் மனிதர்கள் அந்த பரிமாணத்திற்குள்ளேயே கட்டுண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை, அதைத் தாண்டிச் செல்லலாம் என்ற எண்ணத்தை விதைத்தவன் ஆதியோகி.

வாழ்வை வாழ்வதற்கு வேறு வழி இருக்கிறது. ஆம், முற்றிலும் மாறுபட்ட இன்னொரு வழி இருக்கிறது எனும் எண்ணம்... எண்ணம் மட்டுமல்ல, அதை அடைவதற்கான வழியையும் சேர்த்தே வழங்கினார் ஆதியோகி. மனிதன் தன் வரம்புகளை மீறி வளரமுடியும் என்ற இந்த ஒரு எண்ணம் தான், இந்த முழு கலாச்சாரத்திற்குமே அடிப்படையாக இருந்திருக்கிறது. இந்துவோ, புத்த மதமோ, ஜைன மதமோ அல்லது சீக்கிய மதமோ அல்லது வேறு எப்படி ஒருவன் தன்னை வகுத்துக் கொண்டாலும், அனைவருமே தங்களின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து, முக்தி அடைய வேண்டும் என்ற இந்த ஒரு எண்ணத்தை நோக்கியே வாழ்கிறார்கள்.

இந்த முழுக் கலாச்சாரத்தின் மையமும் இந்த ஒன்று தான் - முக்தி. இங்கு ஒருவர் என்ன செய்தாலும், அது அடிப்படையில் இந்த ஒன்றை நோக்கித்தான். இதைவிட புரட்சிகரமான ஒரு எண்ணம் அதற்கு முன் இவ்வுலகில் இருந்திருக்கவில்லை. அவருக்குப் பின்னும் கூட, கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளாக இதைவிட புரட்சிகரமான ஒரு எண்ணத்தை இவ்வுலகில் வேறு யாரும் வழங்கவில்லை.

21 அடி உயர ஆதியோகி சிலைகளை உலகெங்கும் நிறுவப்போவதுபற்றி சத்குரு பகிர்ந்து கொண்டது...

ஆதியோகி குறைந்தது 12000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும், அவரின் வழியில் சப்தரிஷிகள் இவ்வுலகின் பலபகுதிகளில் யோகாவைப் பரப்பினர் என்பதற்கும் இன்று சான்றுகள் நிறைய உள்ளது. கடந்த 200 வருடங்களில், இது பல இடங்களில் நலிந்து மறைந்தே விட்டது என்றாலும், அதற்கு முன் சப்தரிஷிகளின் தாக்கம் உலகெங்கிலும் பரவியிருந்தது.

நான் இறந்துபோவதற்கு முன்னால், ஆதியோகிக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரத்தை கிடைக்கச் செய்வேன்.

ஆதியோகியின் யோக அறிவியலால் பயன் பெறாத கலாச்சாரங்களே கிடையாது. யோகா எல்லா இடங்களுக்கும் சென்றது - மதமாக அல்ல, நம்பி ஏற்கும் கொள்கைகளாக அல்ல, தத்துவங்களாக அல்ல. வழிமுறைகளாக, செயல்முறைகளாக. காலப்போக்கில் சில சிதைவுகள் நடந்திருந்தாலும், இன்றுவரை தெரிந்தோ தெரியாமலோ 250 கோடி மக்கள் ஏதோ ஒரு யோகப் பயிற்சியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே, மக்கள் மீது திணிக்கப்படாமல் இத்தனை ஆண்டு காலம் நிலைத்திருப்பது இது ஒன்று தான். அது தானாகவே மக்களிடையே பிரசித்தி பெற்றது, ஏனெனில் அது எல்லோருக்குமே வேலை செய்தது.

ஆனால் யோகா எங்கிருந்து தோன்றியது என்பதை சிலர் கேள்விக்கு இடமாக்கிவிட்டார்கள். வேறு சிலரோ யோகா, ஐரோப்பிய உடற்பயிற்சி முறையில் இருந்து வழுவி நிருவப்பட்டது என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இவை எல்லாம் போலி முயற்சிகள். யோகா தோன்றிய கலாச்சாரத்திற்கும், மனித விழிப்புணர்விற்கு ஈடுயிணையற்ற பங்களிப்பை வழங்கிய அந்த மாபெரும் மனிதருக்கும், வழங்கப்பட வேண்டிய அங்கீகாரத்தை தடுப்பதற்கான முயற்சிகள் இவை.

நான் இறந்துபோவதற்கு முன்னால், ஆதியோகிக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரத்தை கிடைக்கச் செய்வேன். இந்த 21 அடி ஆதியோகி சிலைகள் அந்த முயற்சியின் ஒரு பாகம் தான். கிட்டத்தட்ட 2.5 வருடங்களாக முயற்சி செய்து, ஒருவாறாக எங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உருவை தேர்வு செய்துவிட்டோம். இப்பொழுது அவ்வுருவை பயன்படுத்தி, ஆதியோகியின் ஆதிக்கம் நிறைந்த இடங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறோம். 111 அடி X 111 அடி அளவிலான இடங்களில், 2.5 அடி உயரமுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களோடு அதியோகியின் 21 அடி சிலையும் இருக்கும். தியானம் செய்வதற்கு உகந்த, சக்தி வாய்ந்த இடங்களாக இவ்விடங்கள் இருக்கும். இவற்றின் முதல் கட்ட முயற்சியில் இந்த ஆதியோகியின் ஆதிக்கம் நிறைந்த இடங்கள் வடக்கு அமெரிக்காவில் நான்கு இடங்களில் நிருவப்பட உள்ளது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இது போன்ற ஒரு இடத்தை அமைக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணம்.

இந்தியாவில்..., இது போன்ற இடம் வேண்டும் என்று மக்கள் எங்கெல்லாம் முயற்சி செய்கிறார்களோ, அங்கெல்லாமே இவ்விடங்களை செய்து விடலாம். இந்தியாவின் நான்கு மூலைகளிலும் 112 அடி உயர ஆதியோகி சிலைகளை உருவாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சூரியனின் கதிரொலி இந்தியாவை முதன்முதலில் தொடும் இடம் அருணாச்சலப் பிரதேசம். இந்தியாவை வந்தடையும் அந்த முதற் கதிரொலி ஆதியோகியின் முகத்தில் தான் முதலில் படர வேண்டும் என்பது என் ஆசைக்கனவு. அதனால் அருணாச்சலப் பிரதேசத்திலும், ஹரித்துவார் செல்லும் வழியில் உத்தர்கண்ட் மாநிலத்திலும், ஒன்று கன்யாகுமாரியிலும், அடுத்தது எல்லையோரமாக ராஜஸ்தானிலும் நிருவ யத்தனித்து இருக்கிறோம். இந்த நான்கு 112 அடி உயர் ஆதியோகி சிலைகளை நிறுவ முடிவு செய்துள்ளோம்.

அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, மக்கள் அவரைக் கொண்டாட வேண்டும் - கடவுளாக அல்ல, எல்லா கட்டுப்பாடுகளையும் தாண்டி உயர்ந்துவிட்ட, இணையற்றவர் என்பதற்காக.

ஆதியோகி மனித குலத்திற்கு வழங்கியிருக்கும் இந்த மகத்தான வாய்ப்பிற்காக, சாதி, மதம், இனம், ஆண், பெண் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, மக்கள் அவரைக் கொண்டாட வேண்டும் - கடவுளாக அல்ல, எல்லா கட்டுப்பாடுகளையும் தாண்டி உயர்ந்துவிட்ட, இணையற்றவர் என்பதற்காக. மனிதனுக்கு இருக்கும் இந்த மாபெரும் வாய்ப்பை முதன்முதலில் அடைந்து, அதைப் பற்றிப் பேசியது மட்டுமல்லாமல், அதை மற்றவரும் அடைவதற்கு வழிவகுத்தவர் ஆதியோகி. அவருக்கு முன்பும் சரி, அவருக்குப் பின்னும் சரி, அவரை விட அதிகமாக மனித விழிப்புணர்வுக்கு பங்களித்தவர் எவரும் இல்லை.

இன்று நான் இருக்கும் எல்லாவுமாக நான் இருப்பதற்கு ஒரே காரணம் இந்த அறிவியல் எத்தடையுமின்றி, எக்கட்டாயமும் இன்றி, மிக எளிதாக, எனக்குக் கிடைத்ததால் தான். என் இளவயதில் என்னை யாரேனும் கட்டாயப் படுத்தியிருந்தால் - உதாரணத்திற்கு ‘நீ குருபூஜா செய்தால் தான் யோகா செய்யலாம்’ என்பது போல் சொல்லி இருந்தார்களேயானால், அக்கணத்திலேயே அங்கிருந்து நான் சென்றிருப்பேன். விழுந்து வணங்கு என்றோ, விளக்கு ஏற்று என்றோ என்னிடம் சொல்லியிருந்தார்கள் என்றால் என் வழியைப் பார்த்து நான் சென்றிருப்பேன். ஆனால் அது போன்ற கட்டாயங்களை என்மீது யாரும் திணிக்கவில்லை. எப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்புகள் தான் இருந்தது. அக்குறிப்புகளை பின்பற்றினேன், அது வேலை செய்தது.

ஆதியோகி வழங்கிய இந்த அறிவியல் இல்லாமல் இன்று நானாக இருக்கும் எதுவாகவும் நான் ஆகி இருக்க மாட்டேன். இந்த அறிவியல் 100% மதசார்பு அற்றது.

சிவன் சத்குருவிற்கு என்ன செய்தார்?, Shivan sadhguruvirku enna seithar?

யோகாவின் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறை மட்டும் தான் இன்று நமக்கிருக்கும் ஒரே வழி. மற்றவை எல்லாம் மக்களை பிரித்துவிடும். அந்நிலை வெகு தூரத்தில் இல்லை. அந்நேரம் வருமுன், ஆதியோகியைப் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும், அவர் வழங்கிய யோக விஞ்ஞானம் கை எட்டும் தூரத்தில் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எல்லையற்ற நிலையை உணர 112 வழிகளை ஆதியோகி வழங்கியதால், இந்தச் சிலைகள் 112 அடி உயரத்தில் சித்தரிக்கப்படும். இவ்வழிகளை சற்றே எளிதாக்கி, இவற்றை நீங்கள் செய்யக்கூடிய 112 செயல்முறைகளாக உங்களுக்கு வழங்குவோம். இவற்றில் நீங்கள் ஒன்றே ஒன்று செய்தால் போதும். அதுவே உங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை மிக எளிதாக உருவாக்கி விடும்.

ஆதியோகியின் பிரவேசம் நிறைந்த இவ்விடங்களுக்குள் நுழையும் ஒவ்வொருவரும், இந்த 112 ல் தங்களுக்கு வேண்டிய ஒன்றை தேர்ந்து எடுத்து, அதை 3 நிமிட சாதனாவாகத் துவங்கலாம். எல்லோராலும் 3 நிமிடம் முதலீடு செய்ய முடியும் தானே? அது வேலை பார்த்தால், படிப்படியாக அதையே 6, 12, 24 நிமிடங்கள் என்று மெதுவாக நீட்டித்துக் கொள்ளலாம். சாதி, மத, இன, ஆண், பெண், உடல்நிலை என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி, அனைவருமே தத்தமது வாழ்விலே ஒரு ஆன்மீக செயல்முறையை நடத்திக்கொள்ளும் நிலையை, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் நிச்சயம் உருவாக்க வேண்டும்.

இது நடக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள், தயவு செய்து எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள் - செய்யும் அனைத்துச் செயல்களிலும் உயர்ந்தது மக்களின் வாழ்வில் ஆன்மீக செயல்முறையை அறிமுகப்படுத்துவதுதான். இந்த மகத்தான பங்களிப்பை செய்ய சேர்ந்து கைபிடிப்போம் வாருங்கள்.

அடுத்த பதிவில்...

மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை தெரிந்துகொள்வோம்!


சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

We all with you Sadhguru as one unit, with your blessings

3 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்

Cant we get a one statue at least in Sri lanka because original sivapoomi is srilanka?
or not i am not ready?

3 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

sadhguru will decide always right decision