செருப்பை மாற்றிப்போட்ட புத்தர்...! - ஒரு ஜென் கதை சொல்லும் செய்தி!
ஆன்மீகம் அப்படித்தான். திசை புரிந்துவிட்டால் அங்குலத் தொலைவுகூட இல்லை.
ஜென்னல் பகுதி 13
யாங்ஃபு என்ற இளைஞன், தன் பெற்றோரை நீங்கி, குருவைத் தேடிப் புறப்பட்டான். வழியில் ஒரு ஜென் குருவைச் சந்தித்தான். ஆன்மீகத்தில் சிறக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தான்.
“வேறு யாரோ ஒரு குருவைத் தேடிப் போவதைவிட புத்தரையே நீ சந்திக்கலாமே?” என்றார் அவர்.
“புத்தரா... அவரை எங்கே காண முடியும்?” என்று யாங்ஃபு பரபரத்தான்.
“நீ வீட்டுக்குத் திரும்பும்போது, தோளில் போர்வை போர்த்தி, காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டு ஒரு நபர் உன்னை எதிர்கொள்வார். அவரே புத்தர்” என்றார் குரு.
யாங்ஃபு அவசரமாக வீடு திரும்பினான்.
தன் மகனை வரவேற்கும் பரபரப்பில், அவன் தாய் காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டபடி, தோளில் போர்த்திய போர்வையுடன் கதவைத் திறந்தார்.
அவரைப் பார்த்த கணத்தில் யாங்ஃபு ஞானம் பெற்றான்!
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
யாரோ ஒருவர் இங்கே பக்கத்துக் கிராமத்துக்கு வந்துவிட்டு, “ஈஷா யோகா மையம் இன்னும் எவ்வளவு தூரம்?” என்று விசாரித்தார்.
கிராமத்துச் சிறுவன் சொன்னான், “35 ஆயிரம் கிலோ மீட்டர்.”
“ஐயோ, அவ்வளவு தூரமா?”
“நீங்கள் இப்போது போகும் திசையில் போனால், அவ்வளவு தொலைவு. அப்படியே திரும்பி எதிர்த் திசையில் போனால், நான்கு கி.மீ. தான்” என்றான் பையன்.
ஆன்மீகம் அப்படித்தான். திசை புரிந்துவிட்டால் அங்குலத் தொலைவுகூட இல்லை.
ஆன்மீகத் தேடுதல் என்பது கடவுளையோ, சொர்க்கத்தையோ, வேறு உலகத்தையோ வெளியே தேடிப் போவது அல்ல. ஆன்மீகம் என்பது உள்ளே இருக்கும் ஆன்மா பற்றியது. அது இந்த உயிரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு நோக்கம். உள்நோக்கிப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
வெளிப்படையான உடலை மட்டும் புரிந்துகொள்வதாலோ, அல்லது மனதை மட்டும் புரிந்துகொள்வதாலோ வாழ்க்கை முழுமையாகாது. இது இரண்டையும் உருவாக்கும் சக்தி உங்களுக்கு உள்ளே இருக்கிறது. உள்நோக்கிப் பார்த்துப் பழக்கம் இல்லாத நமக்கு, வெளியில் இருந்து திசை காட்ட ஒரு வழிகாட்டியாக குரு தேவைப்படலாம். மற்றபடி, காடு, மலை, கழனி என்று உலகம் முழுதும் சுற்றினாலும் பயனில்லை.
இதைத்தான் இந்த ஜென் கதை உணர்த்துகிறது!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418