ஜென்னல் பகுதி 5

ஒரு குரு எப்போதும் தன் சீடனை புகழ்ந்து பேசுவதில்லை; மாறாக எப்போதும் குறைகளைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறார். சீடன் ஒருவேளை தலைமைத் தளபதியாக இருந்தால்...?! இந்த ஜென் கதை என்ன சொல்கிறது என தொடர்ந்து படித்தறியலாம்!

தயு மற்றும் யுதாங் என்ற இரு ஜென் குருமார்களைத் தேடி தலைமைத் தளபதி ஒருவர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்கும்படி கோரினார்.

‘’இயல்பிலேயே நீ புத்திசாலியாகத் தெரிகிறாய். நல்ல சீடனாக இருப்பாய்’’ என்றார் யுதாங்.

‘’இவனா? இந்த அடிமுட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால்கூட ஜென்னைப் புரியவைக்க முடியாது’’ என்றார் தயு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன்னை ஏளனமாகப் பேசிய தயுவையே செல்வாக்கு மிகுந்த தளபதி தன் குருவாக ஏற்றார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

பொதுவாக உங்கள் அகங்காரத்தைக் கேள்வி கேட்காதவரே உங்களுக்கு உற்றவராக இருக்க முடியும். உங்கள் குறைபாடுகளை ஆதரிப்பவரே நண்பராக ஏற்றுக்கொள்ளப் படுவார். ஆனால், குரு என்பவர் உங்கள் முட்டாள்தனங்களை ஆதரிக்க வரவில்லை. அவர் உங்கள் வரையறைகளைத் தகர்க்க வந்தவர்.

சௌகரியமாக உணர வேண்டுமானால், அதற்குத் தோழர்களைத் தேடிப் போகலாம். திருமணம் செய்துகொள்ளலாம். எதற்காக குருவை நாடி வந்தீர்கள்? யாருடன் இருக்கையில் முகமூடிகள் கிழிக்கப்பட்டது போல் மிகவும் அசௌகரியமாக உணர்கிறீர்களோ, அந்த நிலையிலும் யாரைவிட்டுத் தப்பித்து விலகப் பிரியம் இல்லாமல் மறுபடி நாடிப் போகிறீர்களோ, அவர்தான் உங்கள் குரு.

‘’நீங்கள் அற்புதமானவர், புத்திசாலி’ என்று எல்லாம் புகழ்ந்து பேசி, உங்கள் அகங்காரத்துக்குத் தீனி போடுபவர், உங்களிடம் ஆதாயங்களை எதிர்பார்த்து நிற்பவர்.

முகத்துக்கு நேராக உங்கள் வரையறைகளைச் சுட்டிக்காட்டி, உங்கள் அகங்காரத்தை சதா தகர்த்துக்கொண்டு இருப்பவர்தான் குரு. உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டினால், உங்கள் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகலாம். வெகு சீக்கிரத்தில் எதிரியாகவே கருதப்படலாம். ஆனால், அதைப் பொருட்படுத்தாது, அளவற்ற கருணையுடன் உங்களுடைய குறைபாடுகளை எடுத்துச்சொல்லி, அவற்றைக் கடந்து நீங்கள் பயணம் செய்ய உதவி செய்வதே குருவின் உண்மையான நோக்கம். அவர் உங்களுக்கு உபச்சாரங்கள் செய்ய வரவில்லை. உங்களை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்ல வந்திருக்கிறார்.

தன்னைப் பாராட்டிப் பேசிய யுதாங்கைவிட தன் பதவி பற்றி கவலைப்படாது கனிவுடன் பேசிய தயுவையே தன் குருவாக தலைமைத் தளபதி ஏற்றதில் அவருடைய புத்திசாலித்தனம் பிரதிபலிக்கிறது.

ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418