ஜென்னல் பகுதி 36

ஒரு ஜென்குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அந்த குரு, புதிதாகச் சேர்ந்த ஒரு சீடனை அழைத்தார். “சந்தைக்குப் போய், மடத்துக்குத் தேவையான சில பொருட்களை வாங்கி வா” என்று அவனிடம் பணம் கொடுத்து அனுப்பினார். சந்தைக்குப் போய் பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் சீடன் ஓர் இளம் ஜென் துறவியைச் சந்தித்தான். அவரும் சந்தையிலிருந்து சில பொருட்களை வாங்கிச் செல்வதைக் கவனித்தான். பேச்சுத் துணையாக இருப்பார் என்று நினைத்து, அவரிடம் “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.

முன்கூட்டியே செய்த தீர்மானங்களின்படி எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வது சரியல்ல. ஏனென்றால், இது இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் எத்தனை திட்டமிட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை உண்மையில் எதிர்ப்படும்போது, அதில் நீங்கள் எதிர்பார்க்காத சில மாறுதல்கள் இருப்பது சாத்தியம்.

“என் கால்கள் அழைத்துப் போகும் இடத்துக்கு” என்று சொல்லி விட்டு அவர் போய்விட்டார். சீடன் குழம்பினான். கால்கள் போகும் இடத்துக்குப் போகிறவர் எதற்காகச் சந்தையில் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்?

மடத்துக்குத் திரும்பியதும், தன் சந்தேகத்தை குருவிடம் கேட்டான். “அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது, 'கால்கள் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேள்” என்றார் குரு. மறுநாளும் சீடன் அந்த இளம் துறவியைச் சந்தித்தான். அவர் முந்தின நாள் சொன்ன பதிலைச் சொன்னால், அவரை மடக்குவதற்கான கேள்வி அவனிடம் தயாராக இருந்தது. எனவே, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். “காற்று எங்கே கொண்டு போகிறதோ அங்கே" என்று இளம் துறவியிடமிருந்து பதில் வந்தது. சீடன் மிகவும் குழம்பிவிட்டான். தன்னிடம் பேச விரும்பாமல், அவர் பேச்சைக் கத்தரிக்கிறாரா என்று கோபம் கூட வந்தது.

நடந்ததைத் தன் குருவிடம் அப்படியே விவரித்துச் சொன்னான். “அடுத்தமுறை அந்த பதிலைச் சொன்னால், விடாதே! ‘காற்று வீசாவிட்டால், எங்கே போவீர்கள்?’ என்று கேள்” என்று குரு சிரித்துக்கொண்டே சொல்லி அனுப்பினார். அடுத்த முறை இளம் துறவி குதர்க்கமாக பதில் சொன்னாலும், அவரை மடக்க வேண்டும் என்று சீடன் பல கேள்விகளைத் தயார் செய்து கொண்டான்.

மறுநாள் இளம்துறவியை சந்தைக்குப் போகும் வழியிலேயே சந்திக்க நேர்ந்தது. சீடன் “எங்கே போகிறீர்கள்?” என்று வழக்கம் போலக் கேட்டான். இளம் துறவி அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“சந்தைக்கு” என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்க்கொண்டே இருந்தார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முன்கூட்டியே செய்த தீர்மானங்களின்படி எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வது சரியல்ல. ஏனென்றால், இது இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் எத்தனை திட்டமிட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை உண்மையில் எதிர்ப்படும்போது, அதில் நீங்கள் எதிர்பார்க்காத சில மாறுதல்கள் இருப்பது சாத்தியம்.

எனவே, ஒரு கேள்விக்குச் சரியான விடை, தவறான விடை என்று எதுவும் இல்லை. பொருத்தமான விடை என்றுதான் உள்ளது. செயலும் அப்படித்தான். எந்தச் சூழ்நிலையிலும் சரியான செயல், தவறான செயல் என்பதை விட அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமான செயல் என்பதே உசிதமானது.

ஆனால், தர்க்க ரீதியான மனம் எல்லாவற்றுக்கும் சரியான வழி, தவறான வழி என்று இருப்பதாக நம்புகிறது. வாழ்க்கை என்பதை உன்னதமாகக் கையாள தர்க்க ரீதியான அணுகுமுறை உதவாது. அந்தந்தக் கணத்துக்குப் பொருத்தமான விதத்தில் வாழ்க்கையை எதிர்கொள்வதே வாழ்வின் வினோதங்களையும், அதிர்ச்சிகளையும் இயல்பாக ஏற்க வழி வகுக்கும்.

நீதிபோதனைகளைக் கடைப்பிடித்து வாழ்வதற்கும், முழுமையான உள்ளுணர்வோடு வாழ்வதற்கும் இது தான் முக்கியமான வித்தியாசம்.

நீதிபோதனைகள் எல்லாவற்றுக்கும் தயாரான விடைகளைத் தர முனையும். ‘இதைச் செய், இதைச் செய்யாதே. இதைச் சொல், இதைச் சொல்லாதே, இது நல்லது, இது கெட்டது’ என்று சொல்வதெல்லாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருத்தமான தீர்வுகளாக இருக்க இயலாது.

முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட பேச்சு, முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட செயல், முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை என்பதெல்லாம் சூழ்நிலைகளால் பந்தாடப்படக் கூடும்.

சூழ்நிலை என்பது ஒவ்வொரு கணத்திலும் மாறிக்கொண்டே இருக்க வல்லது. அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு கவனமாகச் செயல்பட வேண்டுமென்றால், நாம் கணத்துக்குக் கணம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

விழிப்புணர்வோடு இல்லாமல், முன்கூட்டியே ஏதோ ஒரு முடிவெடுப்பது என்பது வாழ்க்கைக்கே முடிவாகி விடும். வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால், முன்கூட்டியே தீர்மானங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, நீங்கள் முழு உள்ளுணர்வுடன் அந்தந்தக் கணத்தை எதிர்கொள்ள வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்று தீர்மானித்திருப்பது ஆத்திகம். கடவுள் இல்லை என்று தீர்மானித்திருப்பது நாத்திகம். இரண்டு நம்பிக்கைகளின் பேரில் இரண்டு அணிகளாகப் பிரிந்து காலாகாலத்துக்கும் விவாதங்கள் புரியலாம். தங்கள் நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கலாம். ஒப்புக் கொள்ளாதவர்களோடு போர் செய்யலாம். எதுவும் வாழ்க்கையை நுகர உதவாது. இரண்டு நம்பிக்கைகளுமே ஆன்மிகத்துக்கு ஒத்து வராதவை.

இப்படித்தான் என்று நம் புத்திக்கு நாமே முடிச்சு போட்டு வைத்துவிட்டோம். இந்த புத்தியால், மாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாது.

உண்மையை, இப்படித்தான் என்று தானாகத் தீர்மானிப்பதை விடுத்து உள்ளுணர்வுடன் தேடுவது தான் ஆன்மிகத்தின் அடிப்படையே!

ஆன்மிகப் பயணம் என்பது சரியான விடைகளைச் சொல்வதல்ல. சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது கூட அல்ல. எப்படி இருந்தால் இந்த உயிருக்கு உன்னதமோ, அப்படி இருப்பது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், அந்தந்த அவசியத்துக்கேற்ப நடந்து கொள்வதே ஆன்மிக வழி.

ஆன்மிகம் மட்டுமல்ல. யதார்த்த வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டுமானால், அந்தந்தச் சூழல்களை எதிர்கொள்ளும் தருணத்துக்கேற்ப முடிவு செய்ய வேண்டும்.

இளம் ஜென் துறவி அந்தத் தேடுதலில் இருக்கிறார். ஜென்மடத்தில் சேர்ந்த சீடர் முன்கூட்டிய தீர்மானங்களோடு கேள்விகளை அமைப்பதால், மாறான பதில் வந்ததும் திணறுகிறார். இதை மறைமுகமாக விளக்குவதுபோல், அவருடைய கேள்விகளுக்கு இளம் துறவி அறுதியிட்டு பதில் தராமல், சீடருக்குப் புரிய வைக்கிறார்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418