சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது?

சமூகத்தை மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சமூகத்தை வெளியில்போய் தேடிக்கொண்டிருப்பவரே இங்கு அதிகம்! உண்மையில், சமூகம் என்ற ஒன்று இல்லை எனச் சொல்லும் சத்குரு, ஈஷாவில் சமூகநலத் திட்டங்களில் ஈடுபடும்போது நிகழும் உள்நிலை மாற்றங்கள் குறித்தும் பேசுகிறார்!
 

சமூகத்தை மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சமூகத்தை வெளியில்போய் தேடிக்கொண்டிருப்பவரே இங்கு அதிகம்! உண்மையில், சமூகம் என்ற ஒன்று இல்லை எனச் சொல்லும் சத்குரு, ஈஷாவில் சமூகநலத் திட்டங்களில் ஈடுபடும்போது நிகழும் உள்நிலை மாற்றங்கள் குறித்தும் பேசுகிறார்!

Question:இந்தச் சமுதாயத்தில் ஒரு மனிதனின் பங்கு என்ன? இவ்வுலகில் மாற்றங்கள் கொண்டுவர, ஒருவர் தன்னை எப்படி மாற்றிக் கொள்ளவேண்டும்?

சத்குரு:

‘சமுதாயம்’ என்பது ஒரு வார்த்தை மட்டும்தான். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை. நிஜத்தில் நீங்கள் இருக்கிறீர்கள், நான் இருக்கிறேன், இன்னொருவர் இருக்கிறார், மற்றுமொருவர் இருக்கிறார். இங்கு தனித்தனி மனிதர்கள்தான் இருக்கிறார்கள். மனிதர்கள்தான் நிஜம். மனித இனம் என்பது வெறும் வார்த்தைதான்.

உண்மையிலேயே இவ்வுலகில் மாற்றம் நிகழவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு ஒரேவழி, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தன்னளவிலே மாறுவதுதான். இந்த வேலையைத்தான் தற்போது ஈஷா செய்து வருகிறது.

சமுதாயம் மாற வேண்டுமெனில், சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் மாறவேண்டும். தனிமனிதமாற்றம் இல்லாமல், இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வுலகம் மாறவேண்டும் என்றால், அதன் முதல் படியாக நீங்கள் மாறவேண்டும். எந்த மாற்றத்தை இந்த உலகில் விரும்புகிறீர்களோ அந்த மாற்றத்தை முதலில் உங்களிடம் கொண்டுவர வேண்டும். அந்த மாற்றம் உங்களுக்குள்ளேயே நிகழவில்லை என்றால் இவ்வுலகில் அந்த மாற்றம் எப்படி நிகழும்? நான் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் ‘உலகஅமைதி’ பற்றிப் பேசுவார்கள். அப்போது அவர்களிடம் ‘உங்கள் வாழ்வில் நீங்கள் அமைதியாக, நிம்மதியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்பேன். இதற்கு அவர்களால் ‘ஆம்’ என்று சொல்லமுடியாது. நீங்கள் நிம்மதியாக இல்லையெனில், உலகில் நிம்மதியும், அமைதியும் எப்படி சாத்தியப்படும்? இவ்வுலகில் வன்முறையை நீங்கள் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதற்காக நீங்களும், இந்த உலகும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது. போர் ஏதும் நடக்கவில்லை என்பதாலேயே, உலகம் அமைதியாக, நிம்மதியாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. வேறுபலவிதமான சண்டைகளும், சர்ச்சைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையிலேயே இவ்வுலகில் மாற்றம் நிகழவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு ஒரேவழி, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தன்னளவிலே மாறுவதுதான். இந்த வேலையைத்தான் தற்போது ஈஷா செய்து வருகிறது. தேவையான அளவிற்கு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய நபர்களை ஓரளவிற்கேனும் நாம் உருவாக்கினால், நிச்சயம் இவ்வுலகில் மாற்றம் கொண்டுவரலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இதுபோன்ற ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க முடிந்தால், அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால்தான் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நாம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு செயல்பட்டு வருகிறோம். தொழில் நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவட்டம் என எதுவாக இருந்தாலும் சரி, ஆயிரம் மனிதர்களின் வாழ்வில் மாற்றமோ, தாக்கமோ உண்டு செய்யக் கூடியவர்களெல்லாம் தலைவர்கள்தான். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஒரு மாற்றம் உண்டானால், இவ்வுலகை அவர்கள் காண்பதிலும், உணர்வதிலும் மாற்றம் ஏற்பட்டால், இந்த உலகும் மாறும்.

மேல்மட்ட தலைமையோடு ஒரு வகையிலும், கிராமத்தில் இருக்கும் சாதாரண மக்களோடு வேறு வகையிலும் நாம் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறோம். ஏனெனில், இவ்விரண்டிலுமே அடிப்படை மாற்றங்கள் நிச்சயம் வரவேண்டும். சாதாரண அளவிலே சில மாற்றங்கள் நடக்கவேண்டி இருக்கிறது. அதேபோல் உயர்மட்டத்திலும் சிலமாற்றங்கள் நடக்கவேண்டி இருக்கிறது.

Question:ஆக, எனக்குள் நான் மாற வேண்டியதுதான் முதல்படி என்றால், என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? நான் இப்போதுதான் உள்நிலை மாற்றத்திற்கு முதல்படி எடுத்து வைத்திருக்கிறேன். அதே நேரம், வெளி உலகிலும் ஏதோ ஒரு மாற்றம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்....

சத்குரு:

‘ஞானோதயம் கிடைக்கும் வரை நான் எதுவும் செய்யக்கூடாதா?’ என்று கேட்கிறீர்கள். ஞானோதயம் பெறுவதற்கு பல பரிமாணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, யோக வகுப்புகள் தவிர, வேறுபல பணிகளும் நாங்கள் செய்து வருகிறோம். ‘கிராமப் புத்துணர்வு இயக்கம்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதன் மூலம் இலட்சக்கணக்கான கிராம மக்களுக்கு எங்களால் இயன்றவற்றைச் செய்து வருகிறோம். இது மாபெரும் வேலை. எங்கள் வாழ்வு முழுவதிற்கும் இடைவிடாது பணம் சேகரித்து, தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் அளவிற்கு இது இமாலயப்பணி. இப்படி இடைவெளிவிடாமல் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை. அதே நேரம், செய்யும் வேலையில் மனநிம்மதியோ, நிறைவோ எதிர்பார்த்தும் நாங்கள் இதை செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், என் நிம்மதிக்கும், மனநிறைவிற்கும் எவ்வித குறைச்சலும் இல்லை. அதனால் அதை உணர்வதற்கு நான் செயல் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை.

இந்த வேலையை நாம் எடுத்துக் கொண்டது, இது பலருக்கும் தன்னை உணர்வதற்கான ஒரு கருவியாய் இருக்கும் என்பதற்காகவே. பலர் தங்கள் செயலில்தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். செயல் இல்லையெனில், எப்படி இருப்பது என்று அவர்களுக்குப் புரிவதில்லை. அதனால் அவர்கள் செயல் செய்வதற்கான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிக் கொடுக்கிறோம். இது தான் கர்ம யோகம். நீங்கள் செய்யும் செயல் உங்களைப் பற்றியது என்றால், அதில் நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள். ஆனால் இந்த செயல் உங்களைப் பற்றியது அல்ல. அடுத்தவருக்காக நீங்கள் ஏதோ செய்கிறீர்கள். இது நல்ல எண்ணத்தாலோ, கெட்ட எண்ணத்தாலோ அல்ல. தேவை என்பதால் அந்த செயலைச் செய்கிறீர்கள். அதைப் புனிதம் என்றும் சொல்லவேண்டாம், மாபெரும் தியாகம் என்றும் பார்க்க வேண்டாம். அந்த செயலுக்குத் தேவை இருந்தது, செய்தீர்கள். அவ்வளவே. நாம் நன்றாகச் சாப்பிடுகிறோம், ஆனால் வேறு ஒருவருக்கு சரியாக உணவு கிடைப்பதில்லை, அதனால் அதற்குத் தேவையானதைச் செய்கிறோம், அவ்வளவே. அந்த நேரத்திற்கு என்ன தேவையோ, அதை மட்டும் நீங்கள் செய்து வந்தால், அதிக உயிர்தன்மையில் வெளிப்படுகிறீர்கள். எண்ணங்கள் குறைந்து, உணர்ச்சிகள் குறைந்து உயிராய் மட்டும் வெளிப்படுவீர்கள். அதிக உயிர்தன்மையுடன் இயங்கும்போது, இப்படைப்புடன் நீங்கள் இன்னும் அதிகமான தொடர்பில் இருப்பீர்கள். இப்படைப்போடு எவ்வளவு ஒன்றி வாழ்கிறீர்களோ, அந்த அளவிற்கு இப்படைப்பின் மூலமான படைத்தவனுக்கு அருகில் நெருங்கிவிடுவீர்கள்.

இங்கே செயல் ஒரு கருவியாய் பயன்படுத்தப்படுகிறது. இதை நான் சொன்னால், அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பிருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன். இந்தச் சமூகநலத் திட்டங்களை என் அன்பினால் நான் உருவாக்கவில்லை. செயலின் துணை இல்லாமலே, என் அன்பை மிக அழகான வழிகளில் என்னால் வெளிப்படுத்த முடியும். நான் சும்மா கண் மூடி அமர்ந்தாலே, செயல் செய்யும் நேரத்தில் இருப்பதை விட, மிக அதிகமாக என்னால் அன்பாய் இருக்கமுடியும். இந்தப்பணியை நாங்கள் மேற்கொண்டது, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக. ‘நான்’ என்ற கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, அவர்கள் வெளிவருவதற்காக.

இது நல்ல எண்ணத்தாலோ, கெட்ட எண்ணத்தாலோ அல்ல. தேவை என்பதால் அந்த செயலைச் செய்கிறீர்கள். அதைப் புனிதம் என்றும் சொல்லவேண்டாம், மாபெரும் தியாகம் என்றும் பார்க்க வேண்டாம். அந்த செயலுக்குத் தேவை இருந்தது, செய்தீர்கள். அவ்வளவே.

சாதாரணமாக அவர்களின் வாழ்க்கை என்று பார்த்தால், அவர்கள் நலன், அதை மிஞ்சினால் அவர்களோடு சேர்த்து இன்னும் ஒருவரின் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ, முன்பின் தெரியாத ஒருவருக்காக, எவ்வகையிலும் தங்களோடு சம்பந்தப்படாத ஒருவருக்காக செயல் செய்யும் அளவிற்கு அவர்கள் மனம் விரிவடைந்திருக்கிறது. ஒருவர் மீது உள்ள அன்பினாலோ, அல்லது ‘எல்லோருமே கடவுளின் படைப்பு’ என்ற தத்துவத்தை நம்புவதாலோ நீங்கள் அவருக்கு தேவையானதைச் செய்யவில்லை. கவனித்துப் பார்த்தால், ‘எல்லோருமே கடவுளின் படைப்பு’ என்று நீங்கள் சொல்லும்போது, அவர்களோடு ஒரு சகோதரப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறீர்கள். இது அப்படியல்ல. ‘செயல் ஒன்று தேவைப்படுகிறது, அதனால் அதைச் செய்கிறேன்’ என்றுமட்டுமே செயல்படுகிறீர்கள். அதற்காக அந்த செயல் எந்த வகையிலும் உங்களுக்கு முக்கியமில்லை என்று அர்த்தம் கிடையாது. ஆனாலும் உங்கள் உயிரே அதைச் சார்ந்து தான் இருக்கிறது என்பதுபோல் அதில் ஈடுபடுகிறீர்கள். இதுதான் அதன் சாரம்.

ஈஷா யோகா வகுப்புகள், என்னளவில் எனக்கு எவ்வகையிலும் முக்கியமில்லை. ஆனால், இந்த வகுப்புகளை எடுக்கும்போது, என் வாழ்வே அதைச் சார்ந்து இருக்கிறது என்பது போல், ஏன் அதற்கும் மேலாகவே அதில் ஈடுபடுவேன். இதில் துரதிர்ஷ்டம் என்னவெனில், என் எதிரே அமர்ந்து இந்த வகுப்பில் ஈடுபடுபவர்களைவிட, என் ஈடுபாடு இதில் அதிகமானதாக இருக்கும். என் ஈடுபாட்டைவிட, பங்குபெறுவோருக்கு இதில் அதிக ஈடுபாடு இருக்கும் நாள்வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நிகழும்போது மிக அற்புதமாய் இருக்கும். இந்த வகுப்பில் எனக்குக் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை, ஆனால் இதில் என் ஈடுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த வகுப்பை எடுப்பதால் எனக்கு மனநிறைவோ, நிம்மதியோ கிடைக்கிறது என்றில்லை. ஆனால், இந்த செயல் இப்போது மிகஅவசியமாக இருக்கிறது, அதனால் மட்டுமே இதைச் செய்கிறேன். இப்போது ஒரு செயல் செய்யவேண்டிய தேவை இருக்கிறது, அதை செய்வதால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்றாலும், உங்கள் வாழ்வே அதைச் சார்ந்து தான் இருக்கிறது என்பதுபோல், முழு ஈடுபாட்டுடன் அந்த செயலில் ஈடுபட்டால், அந்த செயலே உங்களுக்கு விடுதலை அளிப்பதாக இருக்கும்.

தியானலிங்கப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, என்னுடன் இருந்தவர்கள், “தியானலிங்க வேலைகளை எப்படியேனும் முடிக்கவேண்டும் என்று சத்குரு உறுதியோடு இருக்கிறார். அதில் முழு மனதோடு ஈடுபடுவோம். அதை மட்டும் முடித்துவிட்டால், அதன்பின் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்” என்று நினைத்தனர். அவர்கள் வாழ்வே தியானலிங்கப் பணிகளை முடிப்பது என்பது போல் அதில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று, தேவையான பொருளை ஈட்டி, இங்கும் அங்கும் தேவையான உதவிகளைப் பெற்று, தியானலிங்கப் பணிகளை முடித்தனர். அது முடிந்தவுடன், அவர்கள் ‘அப்பாடா..!’ என்பதற்குள், இன்னும் பத்து செயல்திட்டங்களைக் கொண்டு வந்தேன். இப்படி எப்போதுமே நான் நிறைய செயல்திட்டங்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பேன், ஏனெனில் மனிதர்களுக்கு இதுபோன்ற செயல்கள் தேவைப்படுகிறது. தங்கள் விருப்பு வெறுப்புகள் கடந்து, தங்களின் தேவைகளை மறந்து, அப்போது என்ன தேவையோ அதில் ஒருவர் ஈடுபடுவது அவசியம். எப்படியும் நாம் வளர்ச்சி பெறுவதற்கு செயல் செய்ய வேண்டியிருக்கிறது, அதையே மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் செய்தால் என்ன? அதனால் அர்த்தமுள்ள, பயன்படக்கூடிய செயல்களில் ஈடுபடுவோம். இதுபோல் உடனிருப்பவர்களின் தேவைக்கு ஏற்றவாறு, செயல்களை உருவாக்கிய பலஞானிகள் இருந்திருக்கின்றனர்.

ஐரோப்பாவில் குர்ட்ஜீஃப்(20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு ஆன்மீக குரு)பல மையங்களைத் திறந்தபோது, ஐரோப்பாவின் மேல்வர்க்கம் அவரை நாடிச் சென்றது. வந்தவர்களின் கைகளில் மண்வெட்டியையும், கடப்பாறைகளையும் கொடுத்து, அவர்களை அங்கே குழி வெட்டச் சொன்னார் குர்ட்ஜீஃப். சுட்டெரிக்கும் வெயிலில் நின்று, அவர்களும் குழி வெட்டிக் கொண்டே இருந்தனர். இவர்கள்எல்லாம் இதற்கு முன் வேலை செய்து பழக்கமில்லாதவர்கள். சிலமணிநேரம் வேலை செய்தவுடனேயே, அவர்கள் கைகள் காய்த்துப் போயின. இருப்பினும் அவர் சிறிதும் ஓய்வளிக்காமல், அவர்களை வேலைவாங்கிக் கொண்டே நின்றார். மாலை நெருங்கியபோது அனைவரும் களைத்துப்போய் பசியால் துவண்டனர். இருப்பினும் வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர். குர்ட்ஜீஃப் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து, ‘சரி, மணி ஏழாகிவிட்டது. இரவு உணவருந்தும் நேரம் வந்துவிட்டது, இதுவரை தோண்டிய குழிகளை மூடிவிட்டு எல்லோரும் சாப்பிட வாருங்கள்’ என்றார். ஒருநாள் முழுவதும் செய்த வேலை!

இந்த செயலுக்கும் ஒரு நோக்கம் இருந்தது, அது உங்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வதுதான். இப்படிப்பட்ட செயல்தான் உங்கள் கர்மபந்தங்களை உடைக்கும். ஆனால் நம்மைப் பொறுத்தவரை, எப்படியும் ஒருவேலை செய்கிறோம். சும்மா குழிகளைத் தோண்டிக் கொண்டிராமல், மற்றவர்களுக்கு பயன்தரும் ஏதோ ஒன்றை செய்வோமே! அதனால்தான் இந்த அளவிற்கு செயல்கள் ஏற்றிருக்கிறோம். அதனால் நீங்கள் வெளியுலகை மாற்ற முயற்சிக்க வேண்டாம். கவனத்தை உங்கள் மீது வையுங்கள். அப்படித் திருப்புவதற்கு வெளியில் செய்யும் செயல்களை ஒரு கருவியாய் வைத்திருங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1