சக்தி புருவ மத்தியில் இருக்கிறதா?
சத்குரு, நான் யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். என் உயிர்சக்தி இப்போது ஆக்ஞாவில், புருவ மத்தியில் இருப்பதாக உணர்கிறேன். இது உண்மையான உணர்வா? நான் எப்படி உறுதி செய்து கொள்வது? உண்மையென்றால் சகஸ்ராரத்திற்கு செல்வது எப்படி?
 
 

Question:சத்குரு, நான் யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். என் உயிர்சக்தி இப்போது ஆக்ஞாவில், புருவ மத்தியில் இருப்பதாக உணர்கிறேன். இது உண்மையான உணர்வா? நான் எப்படி உறுதி செய்து கொள்வது? உண்மையென்றால் சகஸ்ராரத்திற்கு செல்வது எப்படி?

சத்குரு:

யோகா என்பது வெறும் பயிற்சி கிடையாது. உங்கள் உடலளவில், மனதளவில் போட்டு வைத்திருக்கும் எல்லைகளை உடைத்து, அடுத்த நிலைக்குப் போவதற்கான கருவி. இப்படி பலவிதமான கருவிகள் ஈஷா யோகா வகுப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. எது செய்தாலும் உங்கள் மனநிலையில், உங்கள் உடல்நிலையில், உங்கள் உணர்வுநிலையில், உங்கள் சக்தி நிலையில், நீங்கள் உங்கள் உயிருக்கே ஒரு எல்லை போட்டு இருக்கிறீர்கள். அந்த எல்லையை உடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இந்தக் கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஈஷா யோகா வகுப்பில் கொடுக்கப்பட்ட கருவிகளை தினசரி உபயோகப்படுத்த வேண்டும்.

எப்பொழுது உங்கள் புரிதலில் ஒரு தெளிவு வருகிறதோ அப்பொழுது உணரக்கூடிய வாய்ப்பும் தானாகவே வளரும்.

'ஷாம்பவி மஹாமுத்ரா' என்றால் வெறும் பயிற்சி மட்டும் கிடையாது. எனவேதான் இந்த 20 நிமிட பயிற்சி சொல்லித்தருவதற்கு ஏழு நாட்கள் தேவைப்படுகின்றன. இந்த எல்லையை உடைக்காமல், ஏதோ செய்து கொண்டிருந்தால் என்ன பயன்? படைத்தலின் மூலம் நமக்குள்ளேயே இருக்கிறபொழுது இதை உணரவில்லையென்றால் இந்த வாழ்க்கை வீண்தானே? நாம் நமது உணர்விற்கு பலவிதமான எல்லைப் போட்டிருக்கிறோம்.

இந்த எல்லையை உடைப்பதற்கான கருவிதான் ஈஷா யோகா. இதையெல்லாம் நம்பத் தேவையில்லை. இதை உபயோகப்படுத்தவேண்டும். இந்த எல்லையில்லாத உயிருக்கு எல்லையைப் போட்டு, இல்லாத கற்பனை எல்லாம் செய்கிறோம். எனக்கு இங்கே சக்தி வந்திருக்கிறதா? அங்கே வந்திருக்கிறதா? இதெல்லாம் நீங்கள் படித்த கதைதானே? யார் யாரோ சொன்ன கதைகள்தானே? இந்தக் கதையெல்லாம் நமக்கு வேண்டாம்.

நமது கையில் ரொம்ப பிரமாதமான ஒரு கருவி இருக்கிறது. இந்த 'ஷாம்பவி மஹாமுத்ரா' என்பது ஆதிகாலத்திலிருந்தே பயிற்சியில் இருந்தது. ஆனால் சாமான்ய மனிதனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்ததேயில்லை. இந்த மாதிரி சக்தியை ஒரு மனிதருக்குக் கொடுத்தால் அதைத் தப்பாக உபயோகப்படுத்துவார் என்ற ஒரு பயத்தில்தான், இதை அப்படி வைத்தார்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே, இந்த உடல் தன்மையைத் தாண்டி ஏதோ ஒருமுறை கொஞ்சம் அசைவு வருகிறது. படைத்தலுக்கு எது மூலமோ அதனுடன் ஒரு தொடர்பு ஏற்பட்டதால்தான் இந்த அசைவு வந்தது. ஆனால் அது உங்கள் அனுபவத்தில் இன்னமும் முழுமையாக இல்லை. எனவே ஏதேதோ கற்பனைகள் செய்து கொள்ள வேண்டாம். எப்பொழுது உங்கள் புரிதலில் ஒரு தெளிவு வருகிறதோ அப்பொழுது உணரக்கூடிய வாய்ப்பும் தானாகவே வளரும். எனவே உங்களுக்குள் கதைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

இன்னொருவர் கதை நமக்கு எப்போதும் வேண்டாம். இப்பொழுது நமக்கு யாரோ ஏழு சக்கரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். உடலில் 114 சக்கரங்கள் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது வந்துவிட்டதா? இல்லையே? உங்கள் அனுபவத்தில் வரவில்லையென்றால் அதை நம்பக்கூடாது. ஆனால் அதைபற்றி அவநம்பிக்கையும் வேண்டாம். ஆனால் சோதனை பண்ணிப் பார்க்க வேண்டும். நீங்களே சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

ஆக்ஞா குறித்து இப்போது கேள்வி கேட்கிறீர்கள். ஏனெனில் அது இப்போது உங்கள் அனுபவத்தில் இல்லை. அது உங்கள் அனுபவத்தில் இருந்தால் கேள்வி கேட்கமாட்டீர்கள். சூரியன் உதித்துவிட்டானா என்று கண் இருப்பவர்கள் கேட்கமாட்டார்கள். கண் இல்லாதவர்கள்தான் கேட்பார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவத்தில் இன்னும் சூரியன் இல்லை. அது போல இப்பொழுது உங்கள் அனுபவத்தில் ஆக்ஞாவே இல்லை. ஆனால் சகஸ்ராரம் பற்றிப் பேசுகிறீர்கள்!

இல்லாதது பற்றி எல்லாம் கற்பனையில் யோசிக்க வேண்டாம்.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Chumma Pinreenga Sadhguru! Adhichu Norukkukunga Engaloda Karpanaigala!

3 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

சத்குரு உங்கள் பதிவுகளை கடந்த வருடங்களாக படித்து வருகிறேன். உங்களுடைய வாழ்க்கைகான வாழும் வழி தொழில் நுற்பம் எமக்கும் எமது ஈழத்திலும் இலகுவாக கிடைக்க வழிவகுத்து தாருங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள்