எந்த விதமான அறிவும் நல்லதுதான். உங்களுக்கு இயற்கையான அறிவு வாய்க்கப் பெறாவிட்டால், செயற்கை அறிவு தேவைப்படுகிறது. உங்கள் வீட்டுச் சுவர்கள் திடீரென அறிவுமிக்கவையாய் ஆகிவிட்டால், அது அற்புதமானதுதானே! அவை உங்களைவிட சாமர்த்தியமாக நடந்துகொள்ளத் தொடங்கினால், உங்களுக்குள் பாதுகாப்பின்மை மேலோங்கலாம்.

மற்றபடி அறிவுமிக்கவை உங்களைச் சுற்றி இருப்பது எப்போதுமே மிகுந்த நன்மை தரக் கூடியது.

உலகிலேயே மிகவும் சாமர்த்தியம் மிக்க மனிதராக விளங்கும் விருப்பம் இருப்பவர்கள்தான் தன்னைவிட பிறர் சாமர்த்தியம் மிக்கவர்களாக இருக்கும்போது, பாதுகாப்பற்றவர்களாக உணர்வார்கள். உங்களிடமுள்ள ஒரு பேனா, நீங்கள் எழுத நினைப்பதை ஒருவேளை தானாகவே எழுதத் தொடங்கினாலோ, உங்கள் அலைபேசி, நீங்கள் பேச நினைப்பதை தானாகவே அது பேசினாலோ அது நன்றாக இருக்குமல்லவா?

அறிவின் தன்மை இல்லாமல் உண்மை இல்லை. பொய்மை ஏற்பட ஏமாற்று மட்டுமே காரணமில்லை. அறியாமை காரணமாகவும் பொய்மை உருவாகிறது. உண்மையே மைய நீரோட்டமாகத் திகழ வேண்டுமென்றால் அதற்கு வழி அறிவு, அறிவு, அறிவு மட்டுமே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ரோபோக்கள் வருகிறார்கள்...

குறிப்பாக, புற உலகில் தொழில்நுட்பங்கள் பல்கிப் பெருகுகிற சூழலில் நீங்கள் செய்பவற்றை எல்லாம் ரோபோக்கள் செய்யத் தொடங்கினால், மனிதர்கள் என்ன செய்வார்கள்? ரோபோக்கள், 2050-ல் கால்பந்துக்கான உலகக் கோப்பையை வெல்லப்போவதாக ஏற்கெனவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

உங்கள் எண்ணங்களும், உணர்வுகளும்கூட செயற்கையாக உருவாக்கப்படக் கூடியவைதான். சமீபத்தில், ஒரு கணினியுடன் மனிதர்கள் எப்படி தொடர்புகொள்ள முடியும் என்பதைப் பரிசோதிக்க சில ஆய்வாளர்கள் ஓர் ஏற்பாடு செய்தார்கள்.

மின்னஞ்சல் வழியே அந்தக் கணினி, தானாகவே மனிதர்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டது. தாம் தொடர்பு கொண்டிருப்பது ஒரு கணினியிடம் என்பதே அந்த மனிதர்களுக்குத் தெரியாத வண்ணம் அந்தக் கணினி அவர்களை அற்புதமாகக் கையாண்டது. இத்தனைக்கும் அது வெறும் 20 வாக்கியங்களை மட்டுமே பயன்படுத்தி சூழ்நிலையை கையாண்டிருக்கிறது.

மனிதர்களைவிட பல லட்சம் மடங்கு மேம்பட்ட முறையில் செயற்கையாக சிந்தனை செய்யும் கணினிகள் உருவாகக்கூடிய திசையை நோக்கி தொழில்நுட்பம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், சிந்தனைதான் கணினிச் செயல்பாட்டின் அடிப்படைத் தகவல்கள் குவிக்கப்பட்டு, அதிலிருந்து அறிவுப்பூர்வமாக சில விஷயங்கள் கண்டறியப்படுகின்றன. கணினியின் செயல்திறன் மேம்படும் வேளையில் அது மனிதர்களை விட பல மடங்கு சிறப்பாக இவற்றைச் செய்யும். இந்த நிலையை விரைவில் உலகம் காணக்கூடும். அதன்பிறகு மனித சிந்தனை மதிப்பிழக்கலாம்.

எல்லா சிந்தனையாளர்களுக்கும் வேலை இல்லாமல் போகலாம்!

ஆனால், இதில் வெறும் அறிவு மட்டுமே உள்ளது, விழிப்புணர்வு நிலை இல்லை. நம் சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றுக்கு விழிப்புணர்வு நிலையுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.

எல்லாமே நன்றாக இருக்கும்போது மனிதர்கள் என்ன செய்வார்கள்? எந்திரங்கள் செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டி வரும். அதுதான் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது.