பிறர் என்னை சுரண்டாமல் இருக்க என்ன வழி?

ஆனந்தமாக இருக்கும் ஒரு நபரை அருகிலிருக்கும் மற்றவர்கள் சுரண்டி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வதாக ஒரு கருத்து நிலவுகிறது! இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன? தொடர்ந்து படித்தறியுங்கள்!
 

Question:ஒரு மனிதர் ஆனந்தத்தில் இருக்கும்போது, மற்றவர்கள் அவரை தங்கள் சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்தும் நிலை அதிகம் இருக்கும் அல்லவா?

சத்குரு:

நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் - ஆனந்தமானவரோ அல்லது துயரமானவரோ - பிறரால் நீங்கள் சுரண்டப்படலாம். நீங்கள் ஆனந்தமாக இருப்பதால்தான் அல்லது துயரமாக இருப்பதால்தான் யாரோ உங்களைச் சுரண்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

சுரண்டல் பல வழிகளில் நிகழமுடியும்ஆனால் துயரம் தன்னளவிலேயே ஒரு சுரண்டலாக இருக்கும்.
உங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் யாராவது இருந்தால், தங்களது திறமையாலோ அல்லது சமூகச் சூழலின் காரணத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ, அந்த நபர் உங்களைச் சுரண்டக்கூடும். உலகத்தில் எங்குமே இதற்கான சாத்தியம் உண்டு. ஆனால் எப்படியிருப்பினும் நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்றால், சுரண்டல் உங்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சுரண்டல் பல வழிகளில் நிகழமுடியும், ஆனால் துயரம் தன்னளவிலேயே ஒரு சுரண்டலாக இருக்கும். யாரோ ஒருவர் உங்களைச் சுரண்டுவது ஒரு விஷயம். ஆனால் நீங்கள் உங்களுக்கே துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் சொந்த வாழ்க்கையையே சுரண்டுகிறீர்கள். நீங்கள் ஒரு ஆனந்தம் நிரம்பிய நபராக இருந்தால், எவராலும் உங்களை உண்மையில் சுரண்ட முடியாது. ஏனென்றால், சுரண்டல் என்றால், உங்களது நலனுக்கு எதிர்ப்பாகச் செயல்படுவது. நீங்கள் ஒரு ஆனந்தமான நபராக இருக்கும்போது, உங்களது நன்மைக்கு எதிரான ஏதோ ஒன்றை யார் செய்ய முடியும்? உங்களை அவர்கள் மரணத்திற்கு உட்படுத்தினாலும், நீங்கள் ஆனந்தமாக இறந்து போவீர்கள். உண்மையான ஆனந்தத்தில் இருக்கும் ஒரு நபரை எவரும் சுரண்ட முடியாது. அப்படிப்பட்டவருக்கு என்ன நடந்தாலும் அது ஒரு பொருட்டில்லை. அவரிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. அவர் கொல்லப்பட்டால், ஒரு ஆனந்தமான உயிர் போய்விடுகிறது. ஆனால் அவர் எதையும் இழக்கவில்லை, ஒரு உடலைத்தான் இழந்தார். அது அவருக்கு ஒரு பொருட்டல்ல - குறைந்தபட்சம், உடலின் வலிகளும், போராட்டங்களும் முடிவடைந்துவிடுகின்றன.

உண்மையான ஆனந்தத்தில் இருக்கும் ஒரு நபரை எவரும் சுரண்ட முடியாது.

துயரப்படுகின்ற ஒரு நபர்தான், யாரோ தன்னைச் சுரண்டுவதாக எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிறிய செயல் நிகழும்போதும், அதன் பின்னணியில் வேறு ஏதோ நிகழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறார். இப்படி நிகழ்வதை நீங்கள் பார்த்திருக்க முடியும். மக்கள் அதிகமான துன்பத்திற்கு ஆட்படும்போது, யாரோ அவர்களைச் சுரண்டிவிடுவார்கள் என்று எப்போதும் அஞ்சுகின்றனர். தங்களை யாராவது தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற சந்தேகத்திலேயே எப்போதும் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கு பெரும்பாலான மக்களிடம் என்ன இருக்கிறது? எந்த நிலையிலும் பிரச்சனையாக இருக்கும் வகையில், அவர்கள் தங்களையே பிரச்சனைக்குரியவராக்கி உள்ளனர். அது தன்னையே சுரண்டிக் கொள்வதுதான், இல்லையா?

நீங்கள் துன்பப்படுபவராக இருந்தால், யாரும் உங்களைச் சுரண்டத் தேவையில்லை. உங்களுக்கு நிகழும் எல்லாமே சுரண்டல்தான். நீங்கள் ஆனந்தமானவர் என்றால், மற்றவர்கள் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டில்லை. எந்தச் சுரண்டலும் உங்களைத் தொட முடியாது. அவர்கள் முட்டாள்தனமாக உங்களுக்கு ஏதேனும் செய்தால், அவர்கள் தங்களது வாழ்க்கையைத்தான் தாழ்த்திக் கொள்கின்றனர். உங்களுடைய வாழ்க்கையை அல்ல. துன்பகரமான ஒரு நபரின் வாழ்க்கையைத்தான் அர்த்தமற்றதாக்க முடியும். ஆனந்தமான ஒரு நபருடைய வாழ்க்கையை எப்படி அர்த்தமற்றதாக்க முடியும்? அப்படிப்பட்டவரது வாழ்க்கை தன்னளவிலேயே அழகானது. அவர் எந்த அர்த்தத்தையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் துன்பகரமானவர்களாக இருக்கும் காரணத்தினால்தான், பூமியில் சுரண்டல் சாத்தியப்படுகிறது. இல்லையென்றால், இங்கே சுரண்டல் இருக்காது.

நீங்கள் துன்பப்படுபவராக இருந்தால்யாரும் உங்களைச் சுரண்டத் தேவையில்லை. உங்களுக்கு நிகழும் எல்லாமே சுரண்டல்தான்.
உதாரணத்திற்கு, இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஒரு மனிதருக்கு உடல்ரீதியாக நிகழக்கூடிய மிகக் கொடுமையான விஷயம் அது. உங்களுடைய உள்ளங்கைகளிலும், பாதங்களிலும் யாராவது ஆணியால் அறைந்தால், அந்த அளவுக்கு உடல்ரீதியான வலி உண்டாகும்போது, நீங்கள் கத்திக் கூக்குரலிட்டு உலகத்தையே சபிக்க வேண்டும். ஆனால் அவர், “அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கின்றனர், அவர்களை மன்னியுங்கள்” என்று கூறியதாக அறிகிறோம். துன்பம் அல்லது வேதனையில் இருந்திருந்தால் ஒரு மனிதரால் இப்படிக் கூற முடியுமா? கொடுமையான உடல் சித்திரவதையால் கூட பாதிக்காத உள்நிலை ஆனந்தம் இருந்த காரணத்தால்தான் அவரால் இப்படிக் கூற முடிந்தது. ஆகவேதான், சிலுவையில் அறைவது போன்ற கொடுமையான செயல் செய்தும், அவரைத் தங்கள் நோக்கத்துக்கு அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அவர் அப்போதும்கூட தனது தன்மையில் நிலைத்திருந்தார். ஆனந்தமான ஒரு நபரை யாராவது உடல் ரீதியாகத் துன்புறுத்தலாம் அல்லது உயிரையும் பறிக்கலாம். ஆனால் அவரைச் சுரண்ட முடியாது. சுரண்டல் என்றால் கையறு நிலைக்கு அவர் தள்ளப்பட வேண்டும். ஆனால் நீங்கள் உண்மையில் ஆனந்தமாக இருந்தால் யாராலும் உங்களுக்கு இதைச் செய்யவே முடியாது.

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1