பிறந்தநாள் - இறப்பிற்கான ஒரு நினைவூட்டல்!
தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்து 3 வருடங்கள் கழித்து, சத்குருவின் பிறந்தநாளன்று, (செப் 3, 2002) ஈஷா யோக மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இருந்து...
 
பிறந்தநாள் - இறப்பிற்கான ஒரு நினைவூட்டல்!, Piranthanal irappirkana oru ninaivoottal
 

தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்து 3 வருடங்கள் கழித்து, சத்குருவின் பிறந்தநாளன்று, (செப் 3, 2002) ஈஷா யோக மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இருந்து...

சத்குரு:

மூன்று வருடங்களுக்கு முன்பு தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்தபோது, இந்நாளைப் பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. பல பேரின் அன்பினால்தான் இத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறேன். நான் வாழ வேண்டும் என்று ஏனோ அவர்கள் அத்தனை உறுதியோடு இருந்தனர். ஆனால் வாழ்வை நான் என்றுமே அவ்வாறு அணுகியதில்லை. இன்று காலை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தேன், “இத்தனை ஆண்டுகள் முடிந்துவிட்டது என்று என்னால் நம்பவே முடியவில்லை!” என்று. ஏதோ நேற்று முன்தினம் பிறந்தது போலிருக்கிறது. இத்தனை வேகமாக காலம் கடந்து போயிருக்கிறது. ஒருவேளை நான் எதையுமே சீரியஸாகச் செய்ததில்லை என்பதாலோ என்னவோ! வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்று; அதோடு நான் விளையாடியே வந்திருக்கிறேன்.

டீலா? நோ-டீலா?

வாழ்க்கை என்பது மிக சுருக்கமானது. அதில் பேரம்செய்ய முயன்றுகொண்டிருந்தால், என்ன, ஏது என்று புரிவதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும். பிறந்தநாள் என்பது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.

ஆன்மீக சாத்தியம் இங்கு எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும், துரதிர்ஷ்டவசமாக வெகு சிலரே அதை தமக்குச் சாத்தியமாக்கிக் கொள்கின்றனர். மனிதகுலத்தின் இத்தனை ஆயிரமாண்டு வரலாற்றிலும் இதுதான் நடந்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும், வெகுசிலரே மலர்கின்றனர். ஆனால், 21ம் நூற்றாண்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் மலர்வார்கள் என்று எனக்கொரு கனவுண்டு.

பெருமளவில் மனிதர்கள் மலராமல் போவதற்கும், இது தங்களுக்கு நடக்காமல் அவர்களே தடுத்துக் கொள்வதற்கும் முக்கிய காரணம், அவர்கள் வாழ்வோடு பேரம் செய்ய நினைப்பதுதான். அதுவும் அதிகளவில் அவர்களுக்கு லாபம் தருவது போன்ற ஒப்பந்தம்தான் அவர்களுக்கு வேண்டும்.

ஒரு நாள் சங்கரன் பிள்ளை மீன் பிடிப்பதற்கு தன் படகில் சென்றார். சிறிது நேரம் கழித்து, அவர் தூண்டிலில் ஏதோ சிக்கியது. வேகமாகத் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தார். தங்க-வெள்ளி நிறத்தில் இறகு கொண்டிருந்த மீன் அது. மிக அழகாக இருந்தது. அதை படகில் போட்டுவிட்டு, மீண்டும் அடுத்த மீனைப் பிடிக்கத் தயாரானார்.
நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மீனோ தன் உயிருக்காகப் போராடித் தத்தளித்தது. திடீரென அது பேசத் துவங்கியது, “என்னைத் திரும்பவும் ஆற்றிலேயே விட்டுவிடு. தாமதிக்காமல் என்னை நீரில் இறக்கிவிடு. உனக்கு நான் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், ஆனால், இப்போது உடனே என்னை ஆற்றில் விடு,” என்றது. அதிர்ச்சியுற்ற சங்கரன் பிள்ளை, சுதாரித்துக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார். அந்த மீன் உயிருக்காகப் போராடி, பலவீனமாகிக்கொண்டே வந்தது.

சங்கரன் பிள்ளை சொன்னார், “சரி, அதை 5 வரமாக மாற்று, உன்னை விட்டுவிடுகிறேன்,” என்று. அந்த மீனோ, “இல்லை. மூன்றுதான்,” என்றது. அதன் குரல் ஏற்கெனவே கம்மிப் போயிருந்தது. இன்னும் சில நிமிடங்களுக்கு சங்கரன் பிள்ளை யோசித்தார். பின் சொன்னார், “சரி, 4.5 வரமாவது கொடு.” அந்த மீன் மிகமிக பலகீனமாக ஆகிவிட்டிருந்தது. அது சொன்னது, “இல்லை. மூன்றுதான். என்னால் மூன்றுதான் முடியும்,” என்று. சங்கரன் பிள்ளை சொன்னார், “சரி, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், 4 வரம். இதுதான் கடைசி,” என்று. ஆனால், அதற்கு அந்த மீன் ஒன்றுமே சொல்லவில்லை. அது இறந்து விட்டிருந்தது.

ஒவ்வொரு தலைமுறையிலும், வெகுசிலரே மலர்கின்றனர். ஆனால், 21ம் நூற்றாண்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் மலர்வார்கள் என்று எனக்கொரு கனவுண்டு.

வாழ்க்கை என்பது மிக சுருக்கமானது. அதில் பேரம்செய்ய முயன்றுகொண்டிருந்தால், என்ன, ஏது என்று புரிவதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும். பிறந்தநாள் என்பது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நினைவூட்டல். இது ஓட்டையுள்ள மூட்டைப் போன்றது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள், மூட்டை காலியாகி சரிந்துவிடும். வாழ்க்கையும் அதேபோல் ஒவ்வொரு கணமும் நழுவிக்கொண்டே போகிறது. ஒருவர் விழித்தெழுந்து தன் உள்நலனில் முழுமையாக கவனம் செலுத்தாவிட்டால், மரணம் நிகழும் தருவாயில் வருத்தம்தான் மிஞ்சும். அதோடு நீங்கள் எத்தனைப் பிறந்தநாட்களைப் பார்க்கப் போகிறீர்கள் என்றுவேறு உங்களுக்குத் தெரியாது... தெரியாது தானே?

இன்னும் எத்தனை பிறந்தநாட்களைப் பார்க்க வேண்டும் என்று நான் இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால், அந்த முடிவு என் கையில் உள்ளது. அதை நான் தீர்மானிக்க முடியும். ஆனால், உங்களால் அது முடியாது. உங்கள் மீது எத்தனையோ சக்திகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எந்த நொடியிலும் உங்களுக்கு மரணம் நிகழலாம். அதனால் இது என் பிறந்தநாளோ, உங்களுடையதோ, அல்லது வேறு யாருடையதோ... எப்படியும் ஒவ்வொரு நாளும் யாருக்கோ பிறந்தநாள் தானே... அதை “மூட்டை ஒழுகிக் கொண்டிருக்கிறது” என்பதற்கான நினைவூட்டலாய் கொள்ளுங்கள். ஒருநாள் வாழ்க்கை மீதமின்றி அந்த மூட்டை தீர்ந்தே போயிருக்கும். அதற்குமுன், வேறொன்று நிகழவேண்டும்.

100% முழுமையான கவனம்

ஆன்மீக செயல்முறையில் 100% கவனம் செலுத்துவது என்றால், நீங்கள் வேறெதுவுமே செய்யமுடியாது என்றல்ல. வெளிசூழ்நிலையின் தேவை என்னவோ, அதற்கு ஏற்றார்போல் செயல் செய்யுங்கள். ஆனால், வெளியே நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும், நீங்கள் நடந்தாலும், சமைத்தாலும், உண்டாலும், பேசினாலும், வேறேதோ வேலை செய்தாலும், உங்கள் உள்நிலையில் ஆன்மீகச் செயல்முறை எப்போதும் நடந்துகொண்டே இருக்கவேண்டும். “காலை யோகா, மாலை யோகா, மற்ற நேரமெல்லாம் எப்போதும் போல் என் வாழ்வை முட்டாள்த்தனமாக வாழ்வேன்,” என்பது வேலைக்கு ஆகாது. ஒவ்வொரு நொடியும் உங்களுக்குள் ஆன்மீக செயல்முறை நடக்கவேண்டும். இல்லாவிட்டால் உயர்வான எதுவும் உங்களுக்கு நடக்காது.

ஆன்மீக ஏக்கம் உங்களுக்கு தோன்றி விட்டால், அதை முழு தீவிரத்திற்கு கூரேற்றினால் மட்டுமே, “மலர்தல்” நிகழும். இது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தல்ல, எத்தனை தீவிரமாய் அதைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

ஒருமுறை சிலர் இயேசுவிடம், வாழ்வின் ஏதோவொரு அம்சம் பற்றிக் கேட்டபோது, “அந்த அல்லி மலர்களைப் பாருங்கள். அவை சுழல்வதில்லை, நெய்வதில்லை, பிரயத்தனப்படுவதில்லை, ஆனால் எத்தனை அழகாக ஆகிவிட்டன என்று பாருங்கள்,” என்றாராம். வாழ்வின் தீவிரம்தான் அவற்றை அழகாக்குகிறது. நீங்கள் செய்யும் ஏதோ ஒன்றால் நீங்கள் அழகாவதில்லை. நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும், நீங்கள் நின்றாலும், நடந்தாலும், உண்டாலும், பரிமாறினாலும், தரை பெருக்கினாலும், பிராணாயாமம் செய்தாலும், தியானம் செய்தாலும், அது எதுவாக இருந்தாலும், அதை எத்தனை தீவிரமாக செய்கிறீர்கள் என்பதுதான் உங்களை அழகாக மாற்றும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1