கேள்வி: நமஸ்காரம் சத்குரு, கடந்த சில வாரங்களில், வீட்டை வாழ்வதற்கு ஒரு இனிமையான இடமாக மாற்றுவதைப் பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆனால், வீட்டிற்குள் நடக்கும் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும், வீடு இனிமையானதாக இருக்க வாய்ப்பே இல்லை. இவர்களால் எங்கேயும் தப்பிக்கவும் முடியாது.

சத்குரு: இப்படி வருத்தப்படுவது ஆணா, இல்லை பெண்ணா?

கேள்வி கேட்பவர்: மிமி - பெண்மாதிரிதான் தெரிகிறது. பெயரை பார்த்தால் பெண்ணின் பெயர் மாதிரிதான் இருக்கிறது.

லெபனானில் இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் இருந்ததைவிட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்த லாக்டவுனுக்கு பிறகு உலகம் முழுக்க இப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது? இந்த காலக்கட்டத்தில் அவர்கள் உயிர் பிழைப்பதற்கு என்ன செய்ய முடியும்?

சத்குரு: வீட்டில் நடக்கும் வன்முறை என்றால்... இந்த கேள்வியை ஒரு ஆண் கூட கேட்க வாய்ப்பிருக்கிறது என நாம் நினைத்தோம். ஏனென்றால், இப்போதெல்லாம் பெண்கள் ஆண்களைவிட திடகாத்திரமாக இருக்கிறார்கள். அதனால் வீட்டில் இருக்கும் ஆண் நம்மிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்பதாக முதலில் நினைத்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இதை ஒரு பெண்தான் கேட்டிருக்கிறார்.

பெண்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்…

இதைத்தான் நாம் மாற்றப் பார்க்கிறோம். இதைத்தான் உலகமும் மாற்றப் பார்க்கிறது. ஒரு பெண் அல்லது பெண்பாலை சேர்ந்த ஒரு மனிதர் உடலளவில் சில பொறுப்புகளை சுமப்பதால், நம் அனைவரையும் இங்கே கொண்டுவரும் பொறுப்பு அவருக்கு இருப்பதால், சமூக அளவில் அவர்களுக்கு சில தடைகள் இருந்தது. காலப்போக்கில் மெதுமெதுவாக அவை உருவானது. ஆனால் இந்த தடைகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சமுதாயங்களில் மிக மோசமாக இது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பக்கமுமே இது நடந்திருக்கிறது. எல்லோருமே இப்படி செய்யவில்லை. ஆனால் எல்லா பக்கமுமே இது நடந்திருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இது பெண்ணைப் பற்றி மட்டும் இல்லை. தனிமனிதர்களுக்கு அவர்களைவிட கொஞ்சம் பலவீனமாக இருக்கும் யாரையும் தாக்கி ஆட்கொள்ளும் ஒரு தன்மை எப்போதுமே இருக்கிறது.

சில இடங்களில் மதமும் இதை ஆதரிக்கிறது. சில இடங்களில் அவர்களாகவே இப்படி செய்துகொள்கிறார்கள். ஒரு பெண் மீது ஆதிக்கம் செலுத்தி அவரை தாக்குவதை தனிமனிதர்கள் எப்போதுமே செய்வார்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இது பெண்ணைப் பற்றி மட்டும் இல்லை. தனிமனிதர்களுக்கு அவர்களைவிட கொஞ்சம் பலவீனமாக இருக்கும் யாரையும் தாக்கி ஆட்கொள்ளும் ஒரு தன்மை எப்போதுமே இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் மக்களின் கண் முன்னே இது அதிகமாக நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இது இப்போது கணிசமான அளவு குறைந்திருக்கிறது.

குழந்தைகளை அடித்து வளர்க்கும் பெரியவர்களா நீங்கள்?!

நாங்கள் வளர்ந்து கொண்டு இருந்தபோது தினமும் பள்ளிக்கூடத்தில் எதோ ஒரு காரணத்திற்காக அடிப்பது என்பது வழக்கமாக இருந்தது. தினசரி தவறாமல் யாருக்காவது அடி விழும். நீங்கள் எதனால் ஒரு குழந்தையை அடிக்கிறீர்கள்? அவர்கள் உங்களைவிட சிறியவர்களாக இருக்கும் ஒரே காரணத்தினால்தான். அடித்து வளர்க்கவில்லையென்றால் குழந்தை பாழாக போய்விடுவார்கள், இப்படி எதோ பழமொழி வைத்திருந்தீர்கள். நீங்கள் அவர்களை அடிப்பது அவர்களை விட உங்களுக்கு எதோ ஒன்று நன்றாக தெரியும் என்பதனால் இல்லை. நீங்கள் அவர்களைவிட ரொம்ப வளர்ந்திருக்கிறீர்கள், அவர்கள் இன்னும் வளராமல் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் ஒரு குச்சியால் அவர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்த முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் உங்களைவிட சிறியதாக இருக்கிறார்கள், அதுதான் ஒரே காரணம்.

அவர்கள் வளர்ந்த பிறகு ஏன் அவர்களை அடிப்பதில்லை? ஏனென்றால், இப்போது உங்களுக்கு அதன் பின்விளைவு பற்றி தெரியும். இதேபோல, யாரோ ஒருவர் பெண்ணாக இருக்கும் காரணத்திற்காக மட்டும் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. அவர்களை ஏன் அடிக்கிறார்கள் என்றால், உடலளவில் பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். ஒரு ஆணோடு ஒப்பிடும்போது கொஞ்சம் சிறிதாக, கொஞ்சம் பலவீனமாக இருக்கிறார்கள். பொதுவாக இது இப்படித்தான் இருக்கிறது. இப்படி பலவீனமாக இருப்பவர்கள், உடலளவிலோ, பொருளாதார அளவிலோ, சமூக அளவிலோ, ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் கொஞ்சம் பலவீனமாக இருந்தால் நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறீர்கள்.

உங்களுக்கு பவர் இல்லையென்றால்…

பல ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஷிமோகா பக்கத்தில் மலைநாடு எனும் பகுதியில் ஒரு யோகா முகாம் நடந்தது. ஒரு நாள் வந்து அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நம்மை கேட்டிருந்தார்கள். அதனால் நாம் அங்கே சென்றோம். அப்போதெல்லாம் எனது பயணம் என்றாலே சாதாரணமாகவே மோட்டார் பைக்தான். அங்கும் அப்படித்தான் சென்றோம். அந்த நாட்களில், இந்த 250cc சிங்கிள் ஸ்ட்ரோக் மோட்டார் பைக் மிகப் பெரிய வண்டியாக கருதப்பட்டது.

இன்று இருக்கும் வண்டி பக்கத்தில் அதை நிறுத்தினால் சிரிப்புதான் வரும். ஆனால் அன்று அது மிகப் பெரிய பைக். அப்போதைய வேகமான வண்டி. அந்த இடத்தில் வேறு சிலரும் சேவை செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களிடம் 'லூனா' எனும் ஒரு சின்ன வண்டி இருந்தது, கைனட்டிக் வண்டி. இந்த லூனாவில் ஒருவர் தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு சென்று காய்கறி வாங்கி வருவார். ஏனென்றால், இது காட்டுக்குள் இருப்பதைப்போன்ற ஒரு இடம். அவர் காய்கறி வாங்கி வரும்போது, ஒரு லாரி அவரை சாலையில் இருந்து கொஞ்சம் தள்ளிவிட்டு சென்றுவிட்டது. அவர் கீழ விழுந்து லேசான காயம் ஏற்பட்டது, லேசாக தோல் எல்லாம் உரிந்திருந்தது. நல்லவேளையாக எலும்புகளுக்கு எந்த சேதமும் இல்லை.

அவர் திரும்பி வந்து என்ன நடந்தது என்பதை பற்றி விளக்கும்போது, "என்னுடைய வண்டியில் பவர் இல்லை, அதனால் அந்த லாரி என்னை தள்ளிவிட்டுவிட்டது. ரோட்டில் போகும்போது வண்டியில் கொஞ்சம் பவர் இருக்கவேண்டும்" என்றார். சாலையில் மட்டும் இல்லை, எங்கே இருந்தாலும், உங்களுக்கு 'பவர்' இல்லையென்றால், உங்களை கொஞ்சம் தள்ளி விட்டுவிடுவார்கள் என்றோம். துரதிருஷ்டவசமாக உலகம் இப்படி இருக்கிறது. இதனால்தான் ஒரு ஆன்மீகத்திற்கான தளம் முக்கியமானதாக இருக்கிறது. இங்கே மக்கள் அவர்களுடைய பலத்தின் அடிப்படையில் எடைப் போடப்பட மாட்டார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையல்ல…

உடல் பலமோ, பொருளாதார பலமோ, வேறு எதோ ஒன்றை வைத்து இங்கே எடைப் போடப்பட மாட்டார்கள். ஆனால் மக்கள் அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அதற்காக மதிக்கப்படுவார்கள். நாம் இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும். வீட்டுக்குள் நடக்கும் இந்த வன்முறை... நிறையப்பேர் இதை ஆணுக்கும் - பெண்ணுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனை என்பதைப்போல அணுகப் பார்க்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். இது ஆண், பெண் பிரச்சனை இல்லை. இது மனிதருக்கும், யார் ஒருவருக்கும் இடையே வரக்கூடிய பிரச்சனை. உங்களைவிட பலவீனமாக இருப்பது எதுவாக இருந்தாலும், அது மிகச் சிறியதாக இருந்தால் மிதித்து நசுக்குவீர்கள், கொஞ்சம் பெரிதாக இருந்தால் கற்களை வீசுவீர்கள், இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் கம்பால் அடிப்பீர்கள். எதுவாக இருந்தாலும் இதுதான் செய்வீர்கள்.

எதனால் மக்கள் வனவிலங்குகள் எல்லாவற்றையும் இப்படி சுட்டு தள்ளினார்கள்? எப்போதுமே உணவுக்காக அவர்கள் இப்படி செய்யவில்லை. உணவுக்காக, பிழைப்புக்காக அவர்கள் வேட்டையாடியிருந்தால் அது வேறு விஷயம். பெரும்பாலான விலங்குகளை சும்மா இன்பத்துக்காக சுட்டார்கள். ஏனென்றால் அந்த விலங்குகளால் உங்களை திருப்பி சுடமுடியாது. ஒரு எருமையை சுட்டுத் தள்ளினால் அதனால் உங்களை திருப்பி சுடமுடியாது. ஒரு குழந்தையை அடிக்கிறீர்கள், ஏனென்றால் அந்த குழந்தையால் உங்களை திருப்பி அடிக்க முடியாது. ஒரு பெண்ணை அடிக்கிறீர்கள், ஏனென்றால் அவரால் உங்களை திருப்பி அடிக்க முடியாது.

வல்லமை மிக்க பெண் குழந்தைகளை உருவாக்குவோம்

இது எல்லாப் பக்கமும் நடக்கிறது. ஆனால் இன்று பெண்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் உடனடியாக நம்மால் சரிசெய்ய முடியாது. ஆனால் உங்களில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு, உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கு வல்லமை வழங்குவதுதான் மிக முக்கியமானது. வல்லமை வழங்குவது என்றால், வெளியில் சென்று அவர்கள் வேறு யாரோ ஒருவரை துஷ்பிரயோகம் செய்வதைப்போல மாற்றுவது என்று அர்த்தம் இல்லை. வல்லமை வழங்குவது என்றால், யாரையும் துஷ்பிரயோகம் செய்வதற்கான எந்த அவசியமுமே உங்களுக்கு இல்லாமல் ஆவது. அதுதான் வல்லமை.

ஒரு மனிதர் உண்மையாகவே எப்போது வலிமையாக இருப்பார் என்றால், நான் இங்கே அமர்ந்திருந்தாலே மிக அற்புதமாக உணர்கிறேன். நான் எனக்குள் அற்புதமாக உணர, எனக்கு கீழே 10 பேர் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, இதுதான் வலிமை. இந்த வல்லமை வரவேண்டுமென்றால், நீங்கள் ஆன்மீக செயல்முறையை பார்த்தே ஆகவேண்டும். உலகம் முழுவதும் இதை நோக்கி திரும்பவேண்டும். ஆன்மீக செயல்முறை என்றால், மேலே பார்ப்பதோ, கீழே பார்ப்பதோ இல்லை. இது உள்முகமாக திரும்பி நாம் யாராக இருக்கிறோமோ அதனுடைய அடிப்படையான அம்சத்துடன் தொடர்பில் இருப்பது. நாம் அதைத் தொடவில்லை என்றால், நாம் மற்ற எல்லா விலங்குகளையும் போலவே இருப்போம்.

விலங்கு குணத்திலிருந்து மனித தன்மைக்கு...

ஒரு நாள் இப்படி நடந்தது. ஒரு சிங்கம் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டுக்குள் வன்முறை செய்யும் ஆண் போல அது மிக அஹங்காரத்தோடு தன்னை உணர்ந்தது. ஒரு செருக்கோடு அது நடமாடியது. வழியில் ஒரு குள்ளநரியை பார்த்தது, அதை பிடித்து, "ஏய் இந்த காட்டோட ராஜா யாரு?" என்றது. குள்ளநரியை பற்றிதான் உங்களுக்கு நன்றாக தெரியுமே. அந்த குள்ளநரி உடனே, "சிங்கராஜா, நீங்கள் இந்த காட்டிற்கு மட்டும் ராஜா இல்லை, நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கே ராஜா" என்றது. உடனே சிங்கத்துக்கு செருக்கு இன்னும் அதிகமானது. இன்னும் நன்றாக நெஞ்சை நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு ஒரு சிறுத்தையை பார்த்தது. அந்த சிறுத்தையை பிடித்து, "இந்த காட்டிற்கு ராஜா யாரு?" என்றது. அந்த சிறுத்தை நடுங்க ஆரம்பித்தது. பலத்தில், சிறுத்தையால் சிங்கத்துக்கு பக்கத்தில்கூட வரமுடியாது. எனவே அந்த சிறுத்தை, "நிச்சயமா நீங்கள்தான் காட்டிற்கு ராஜா, இதைப் பற்றி எந்த சந்தேகத்திற்கும் இடம் இல்லை" என்றபடி கிளம்பியது. கூடுதலாக ஒருவேளை இரண்டு வாய்ப்புகள் இருக்க முடியுமென்றால், இரண்டுமே நீங்கள்தான் என்றும் அது சொன்னது.

உடல் பலமோ, பொருளாதார பலமோ, வேறு எதோ ஒன்றை வைத்து இங்கே எடைப் போடப்பட மாட்டார்கள். ஆனால் மக்கள் அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அதற்காக மதிக்கப்படுவார்கள். நாம் இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும்

இப்போது அந்த சிங்கம் இன்னும் வானத்தில் மிதக்க ஆரம்பித்தது. ஒரு சிறுத்தை தன் முன் நடுங்குகிறதே என பெருமிதமானது. அப்படியே ஒரு சிறிய வெட்ட வெளி பகுதிக்கு வந்தது. அங்கே பெரிய தந்தங்கள் கொண்ட ஒரு ஆண் யானையை பார்த்தது. அந்த யானையை பார்த்து பலத்த கர்ஜனையுடன், "இந்த காட்டிற்கு ராஜா யாரு?" என கேட்டது. அந்த ஆண் யானை ஒரு வார்த்தை சொல்லாமல், அதனுடைய தந்தத்தால் இந்த சிங்கத்தை மேலே தூக்கி ஒரு சுழற்று சுழற்றி தரையில் விசிறி அடித்தது. சிங்கத்திற்கு முதுகில் சொல்லமுடியாத அளவுக்கு வலித்தது. அந்த வலியோடு யானையை பார்த்து, "நீ சும்மா வாயால் சொல்லியிருக்கலாமே" என்றது. அதற்கு அந்த யானை, "ஆனால் நான் உண்மையை உனக்கு உணர்த்த வேண்டியதாக இருந்தது," என்றது.

அதனால் இந்த பிரச்சனை எங்கேயெல்லாம் உங்களைவிட உடலளவிலோ, பொருளாதார அளவிலோ, சமூக அளவிலோ, அரசியல் அளவிலோ உங்களைவிட கொஞ்சம் பலவீனமான யாரோ ஒருவரை பார்த்தால், அவர்களை கொஞ்சம் தள்ளிவிடப் பார்ப்பது என்பது விலங்கு குணம். விலங்குகள் அப்படியிருந்தால் அது பரவாயில்லை, ஆனால் மனிதர்களுக்கு இது சரியில்லை.