வண்ண பட்டாடைகளோடு மயில்பீலி சூடிய மன்னவனாய் தோன்றிய கிருஷ்ணனுக்கும், துறவறம் பூண்டு தவவாழ்க்கை மேற்கொண்ட பதஞ்சலி முனிவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ன?! ஆம்! நிச்சயம் உண்டு! இருவேறு தன்மைகொண்ட யோகிகள் ஒருவரையொருவர் எப்படி அறிகிறார்கள் என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்!

Question: பதஞ்சலிக்கும், கிருஷ்ணனுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

சத்குரு:

கிருஷ்ணன், இந்த உலகுக்குத் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறான்? அவன் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகில் உயிர்த்து இருந்த விதம், அவன் கூறிய சில விஷயங்கள் - ஆகியவற்றின் மூலம் அவன் தன்னை இந்த உலகுக்கு ஒருவாறாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

பதஞ்சலியின் யோகாவானது சூத்திரங்களாக வெளிப்பட்டது. கிருஷ்ணனின் யோகாவோ அவனது வாழ்க்கையாகவே வெளிப்பட்டது.

பதஞ்சலி முனிவரின் கூற்றுகளும் வேறு ஒரு வித்தியாசமான கிருஷ்ணனை நமக்கு அறிமுகப்படுத்தி விடவில்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்று சொல்லலாம்! பதஞ்சலி முனிவர் யாவற்றையும் ஒரு விஞ்ஞானமாக வெளிப்படுத்தினார். அவ்வாறு அவர் விஞ்ஞானமாக வெளிப்படுத்தியதை கிருஷ்ணன் வாழ்ந்து காட்டினான்.

கிருஷ்ணன் அப்படி ஒன்றும் விஞ்ஞானபூர்வமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் உரைத்த கீதையில் வேண்டுமானால் அங்கங்கே விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இருப்பதைக் காணலாம். ஆனால் முற்றிலும் அல்ல!

பதஞ்சலி முனிவரோ கிருஷ்ணன் என்னும் தத்துவத்தை முழுக்க முழுக்க விஞ்ஞானமாகவே மாற்றிக் காட்டி உள்ளார்.

செழிப்பாக, வளமாக, ஆரோக்கியமாக வாழ்வதற்கு, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எவ்வாறு கையாள்வது என்பதை ஒரு விஞ்ஞானமாகவே உருவாக்கி இருக்கிறார்.

கிருஷ்ணன் வாழ்ந்தது போன்றதொரு வாழ்க்கையை பதஞ்சலி மேற்கொண்டதில்லை. அவர் ஒரு முனிவர். யாவற்றில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, துறவற வாழ்க்கையை மேற்கொண்டவர்.

அவர், சிறியதொரு மக்கள் குழுவை வைத்துக் கொண்டு, அதிலிருந்து சில உன்னதமான மனிதர்களை உருவாக்குவதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். அவர் உருவாக்கிய மனிதர்கள் அவரது வழி முறைகளுடன் உலக மக்களை அணுகினார்கள்.

பதஞ்சலி பாரம்பரிய வழியிலான ஒரு யோகி!

கிருஷ்ணனும் யோகிதான். ஆயினும் பாரம்பரிய முத்திரைகள் எதுவும் அற்ற சாதாரணமானதொரு யோகி!

யோகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத ஒரு யோகி. எந்தச் சூழ்நிலையிலும் அவன் யோகியாகவே இருந்தான்.

பதஞ்சலியின் யோகாவானது சூத்திரங்களாக வெளிப்பட்டது. கிருஷ்ணனின் யோகாவோ அவனது வாழ்க்கையாகவே வெளிப்பட்டது.

அவ்வாறெனில் பதஞ்சலி, கிருஷ்ணன் இவர்கள் இருவரும் யார்? இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்களா?

நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்! ஆனால் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்கள்!

சோம்பேறித்தனம் காரணமாக நான் இதுவரை கீதையைப் படித்ததில்லை. ஆனாலும் கிருஷ்ணனை மிக நன்றாக அறிவேன்.

நாம் கிருஷ்ணன் என்று அழைப்பது ஒரு தனிப்பட்ட மனிதனை அல்ல. கிருஷ்ணன் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விழிப்புணர்வு. விளையாடுவதை ஒரு போதும் நிறுத்தாத ஒரு விழிப்புணர்வு. அந்தக் கிருஷ்ணனை எனக்கு மிக நெருக்கமாகவே தெரியும்.

அப்படியானால் நான் கிருஷ்ணனை நேரடியாகச் சந்தித்து இருக்கிறேனா? எனக்கு கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அக்கறையும் இல்லை. நான் கிருஷ்ணன் என்று எதைக் குறிப்பிடுகிறேனோ அது எப்போதும் என்னுள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நான் அங்கே, இங்கே என்று எங்கேயாவது சென்று கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அது போலத்தான் பதஞ்சலியும்! அவர் கிருஷ்ணனை அறிவாரா? ஆம்! நிச்சயமாக அறிவார்! பதஞ்சலி எப்படி கிருஷ்ணனை அறியாது இருக்க இயலும்?

அப்படியெனில் அவர் கிருஷ்ணனை குருக்ஷேத்திரத்தில் சந்தித்து இருக்கிறாரா? இல்லவே இல்லை! பதஞ்சலி கிருஷ்ணனைச் சந்திக்க ஒரு போதும் முனைந்திருக்க மாட்டார். அவனைச் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கும் ஒரு போதும் நேர்ந்திராது. பதஞ்சலிக்கு, கிருஷ்ணன் என்பது ஒரு வெளிப்பாடு மட்டுமே..