பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 5

பாலுறவுக்கான தேவை எப்போது ஏற்படுகிறது என்பதை சத்குரு இதில் விளக்குகிறார்...

சத்குரு:

பாலுணர்வு அடிப்படையிலான பெரும்பாலான உறவுகள் நிகழ்வதற்குக் காரணமே, அது நிகழவில்லை என்றால் தங்களையே முற்றிலும் இழந்ததுபோல் உணர்வதனால்தான். தாங்கள் தாங்களாகவே எப்படி இருப்பதென்று தெரிவதில்லை. உலகின் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது மேலை நாடுகளில் எத்தனையோ வசதிகள் வந்தபிறகும்கூட இவர்கள் முகத்தில்தான், மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலான அச்சமும் பாதுகாப்பின்மையும் தெரிகிறது. பாரிஸ் போன்ற நகர வீதிகளில் நடமாடும் மனிதர்கள் முகத்தில் கீழைநாடுகளில் உள்ள பிச்சைக்காரர்கள் முகத்தில் தெரிவதைவிட அதிக அளவு பாதுகாப்பின்மை புலப்படுகிறது. இது ஏனென்றால் இந்த கலாச்சாரங்களில் உடல்சார்ந்த அடையாளங்கள் அளவுக்கதிகமாகப் போய்விட்டன. உடலோடு அடையாளம் கூடக்கூட பாதுகாப்பின்மை என்ற உணர்வும் கூடத்தான் செய்யும். ஏனென்றால், இந்த உடலே பாதுகாப்பற்ற ஒன்று எந்த விநாடியும் எதுவும் நேரலாம்.

ஆன்மீகத்தைத் தேடுவது என்று சொன்னால், உங்கள் தந்தை சொன்னதைக் கேட்பதோ, புரோகிதர் சொன்னதைக் கேட்பதோ, உங்கள் புனிதநூல்கள் சொல்வதைக் கேட்பதோ அல்ல.

உடல் என்ற எல்லையோடு உங்கள் அடையாளம் நின்றுவிடுமானால் பாதுகாப்பின்மை இயல்பாகும். பாதுகாப்பில்லாத நிலையை மனிதர்கள் உணர்கிறபோது பாலுறவுக்கான தேவை அதிகரிக்கும். ஆன்மீகத்தைத் தேடுவது என்று சொன்னால், உங்கள் தந்தை சொன்னதைக் கேட்பதோ, புரோகிதர் சொன்னதைக் கேட்பதோ, உங்கள் புனிதநூல்கள் சொல்வதைக் கேட்பதோ அல்ல. ஆன்மீகத்தைத் தேடுவதென்றால் ஐம்புலன்களின் எல்லையையும் அனுபவத்தையும் கடந்த ஒன்றைத் தேடுவதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலுக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும், வாழ்தலும் இனப்பெருக்கமும். எனவே உடல் சொல்லும் வழியில் போனால் சில இன்பங்கள் வரும், வராமல் போகாது. ஓர் எல்லையோடு இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதுவே எல்லாமும் இல்லை. உடல் என்கிற எல்லையோடு நிற்கிறபோது எத்தனைதான் வாழ்ந்தாலும் வாழ்ந்த நிறைவே வராது. குழந்தையாக இருந்தபோது மற்றவர்களின் உடல் உறுப்புகள் பற்றி நீங்கள் கவலைப்பட்டதில்லை. சுரப்பிகளின் விளையாட்டு தொடங்கிய பிறகு அந்த உறுப்புகளைக் கடந்த உலகத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நாளை சுரப்பிகள் ஓய்ந்த பிறகு உங்கள் பழைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால் நீங்கள்தான் இதையெல்லாம் செய்தீர்களா என்று உங்களுக்கே வியப்பாக இருக்கும்.

சிலர் என்னிடம், எப்போது பார்த்தாலும் எதிர்பாலினம் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். நாளையே நான் உங்களுக்கொரு வரம் தருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் உள்ள அத்தனை பெண்களும் உங்கள் பின்னால் வருகிறார்கள் என்றாலும் கூட உங்களுக்கு நிறைவு ஏற்படாது. எனவே, எல்லை கடந்த நிலையை இதன் மூலம் உங்களால் அடைய முடியாது. சிறிது மகிழ்ச்சி கிடைக்கலாம், சிறிது ஆனந்தம் கிடைக்கலாம், சிறிது வலி ஏற்படலாம். அவற்றில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உடலின் குறுகிய எல்லைக்குள் இருப்பீர்களேயானால், வாழ்வும் இனப்பெருக்கமும்தான் அதற்குத் தெரியும். நீங்கள் சிகரத்தில் ஏறுகிறீர்களா, சிகரத்திலிருந்து இறங்குகிறீர்களா என்றெல்லாம் உங்கள் உடம்புக்குத் தெரியாது. உங்கள் உடம்பைப் பொறுத்தவரை அது ஒவ்வொரு விநாடியும் மயானத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் எங்கெங்கோ போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் மயானத்தை நோக்கித் தானே தவிர வேறெங்குமில்லை. இளமையாய் இருக்கிறபோது இது உங்களுக்கு புரிபடாது. காலப்போக்கில் இது கண்கூடாகவே தெரிய ஆரம்பித்துவிடும். நாளாக நாளாக இன்னும் தெளிவாகத் தெரியும். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் உங்கள் உடல் மட்டும்தான் என்றால், அதை முற்றாக இழந்துவிடப்போகிறீர்கள் என்று தெரிகிறபோது அச்சம் மட்டுமே மிச்சப்படுகிறது.

உடலுக்கென்று ஓர் எல்லை உண்டு. அதற்குட்பட்டுதான் அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதன் எல்லைதாண்டி அதைப் பயன்படுத்த முற்பட்டால் அவதிக்கு ஆளாவீர்கள். அவதி பல வழிகளிலே வரும். தாங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தங்களுக்கு ஏதும் நிகழாதென்றும் எண்ணிக்கொண்டிருப்பவர்கள் உண்டு. சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்களுக்கு என்ன ஆகிறதென்று பாருங்கள். உங்களை வளைப்பதற்கும், உடைப்பதற்கும், ஆட்டுவிப்பதற்கும், வாழ்க்கையிடம் பல லட்சம் வழிகள் உண்டு. எதிர்பாராத வழிகளில் எல்லாம் அவை நிகழும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அது நிகழ்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.

எனவே சுரப்பிகளைப் பொறுத்தவரை ஒன்றும் தவறில்லை. ஆனால் அது உங்களை நிர்பந்தத்திற்கு ஆளாக்குகிறது. நிர்பந்தத்தின் எல்லைக்குள் வாழ்கிற வாழ்வு, அடிமை வாழ்வு. உங்களுக்குள் ஏதோ ஒன்று அடிமையாக வாழக்கூடாதென்று உங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏதோ ஒன்றுக்கோ அல்லது யாரோ ஒருவருக்கோ நீங்கள் அடிமைப்பட்டு இருக்கிறபோது உங்கள் முகம் செத்துப் போகிறது. குழந்தையாய் இருந்தபோது மகிழ்ச்சியாய் இருந்தீர்கள். ஏனென்றால், அப்பொழுது அவ்வளவாக அடிமைத்தனங்கள் இல்லை. மெல்ல மெல்ல நிர்பந்தங்கள் மேலெழுந்தன. எப்படி என்று தெரியாமலேயே உங்கள் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கிறது. உங்கள் வியாபாரம் நன்றாக நடக்கிறது. உங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது. நல்ல உறவுகள் உருவாகின்றன. நிறைய பணம் சம்பாதிக்கின்றீர்கள். ஆனால் உங்கள் முகம்தான் செத்துக்கொண்டே வருகிறது. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று படாதபாடுபட்டு முயற்சிக்கிறீர்கள். பணமும் வயதும் கூடக்கூட மகிழ்ச்சிக்கான முயற்சியும் கூடிக்கொண்டே போகிறது.

இது ஏனென்றால், வாழ்வின் மிகச் சிறிய ஒரு அம்சத்தை வாழ்வின் எல்லாமாகவும் பார்க்கத் தலைப்பட்டுவிட்டீர்கள். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உடம்புதான் எல்லாம் என்று போதிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் படுகிற அவதிகள் வெளிப்படுத்தப் படுவதில்லை. புறநிலையைப் பொறுத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே செய்யப்பட்டுவிட்டன. மருத்துவ பராமரிப்பு, காப்புறுதி, வாகனங்கள் என்று எல்லாம் இருந்தும் அவதிகள் தொடர்கின்றன. மனதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு நிறையப் பேர் மருந்து மாத்திரைகள் சாப்பிடவேண்டியிருக்கிறது. சமநிலையில் இருக்க வேண்டுமென்றால் மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது ஆனந்தம் எங்கிருந்து வரும்? எந்த விநாடியும் சிதறிப்போகக்கூடிய தன்மையில் வாழ்கிறீர்கள். வாழ்க்கை கணக்குகளை சரிசெய்கிறது. எனவே வாழ்வில் எவற்றுக்கு என்ன இடமோ அவற்றுக்கு அந்த இடத்தை மட்டுமே கொடுங்கள்.

அடுத்த வாரம்..

காதல் பற்றியும், எது உண்மையான அழகு என்பதைப் பற்றியும் விளக்குகிறார் சத்குரு...

'பாலுணர்வு... காதல்... கடவுள்!' தொடரின் பிற பதிவுகள்