பாலுறவு என்பது இன்பத்திற்காகவா பாதுகாப்பிற்காகவா?

பாலுறவை நாம் எதற்காக தேடுகிறோம் என்பதை சத்குரு இங்கு விளக்குகிறார்.
 

பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 4

பாலுறவை நாம் எதற்காக தேடுகிறோம் என்பதை சத்குரு இங்கு விளக்குகிறார்.

சத்குரு:

தத்துவவாதி மீன்...

தத்துவவாதியான ஒரு மீன் இருந்தது. மீனில் தத்துவவாதியா என்று கேட்கிறீர்களா? எல்லோருமே தத்துவவாதிகள்தான். எல்லோருமே தான் செய்யும் செயல்களுக்கு ஏதாவதொரு தத்துவத்தைச் சொல்வார்கள். ஒரு குடிகாரனைக் கேட்டால் தான் குடிப்பதற்கு ஒரு தத்துவத்தைச் சொல்லுவான். ஒரு திருடனிடம் அவனின் திருட்டுத்தனத்துக்கான தத்துவம் இருக்கும். ஒரு காமுகனைக் கேட்டாலும் அப்படியே. யாராயிருந்தாலும் தங்கள் முட்டாள்தனங்களை நியாயப்படுத்த ஏதாவதொரு தத்துவத்தைக் கொண்டிருப்பார்கள். தத்துவம் இல்லாமல் உங்கள் முட்டாள்தனங்களைத் தொடர, உங்கள் புத்திசாலித்தனம் உங்களை அனுமதிக்காது. ஒரு தத்துவத்தை மட்டும் உருவாக்கிக்கொண்டால் எதைப்பற்றியும் கவலைப் படாமல் உங்கள் செயலை தொடர்ந்துகொண்டே இருக்கலாம். அதுவும் உங்கள் தத்துவத்திற்கு ஒரு கடவுள் முத்திரையை குத்திக்கொள்வீர்களேயானால் கவலையே இல்லாமல் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம்.

தெய்வீகத்தை விழிப்புணர்வில்லாமல் தேடுகிறபோது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று பாலுறவு. அது விழிப்புணர்வுள்ள தேடலாகிறபோது ஆன்மீகமாகிறது. அதனை ஓர் அறிவியலாகக் காண்கிறபோது அது யோகா எனப்படுகிறது.

அதற்குப் பிறகு உங்கள் வாழ்வில் எது செய்தாலும் அது ஏன் என்று கூட நீங்கள் பார்க்க மாட்டீர்கள். அவ்வளவு தெளிவாக இருப்பீர்கள். தத்துவவாதியாய் இருந்த அந்த மீனும் அப்படித்தான். மிகுந்த சோகத்தோடு ஒரு மூலையில் ஆழமாக சிந்தித்துக்கொண்டிருந்தது. அருகில் வந்த இன்னொரு மீன், "ஐயா தத்துவ அறிஞரே, ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆனது?" என்று கேட்டது. அதற்கு தத்துவவாதியான மீன் சொன்னது, "நான் ஆழ்ந்த சிக்கலில் இருக்கிறேன், நான் எங்கே போனாலும் எல்லோரும் சமுத்திரத்தைப் பற்றியே பேசுகிறார்கள், நான் எல்லா வழிகளிலும் போய் பார்த்துவிட்டேன், என்னால் சமுத்திரத்தைப் பார்க்கவே முடியவில்லை" என்று சொன்னது. விஷயம் என்னவென்றால், அது சமுத்திரத்தில் தான் இருக்கிறது. சமுத்திரத்தில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. பலவகைகளில் அதுதானே சமுத்திரமாக இருக்கிறது. அதனால் அதை உணர முடியவில்லை.

தெய்வீகத்தை பிரிக்க முடியுமா?

இப்போது தெய்வீகத்தைப் பொறுத்தவரையிலும் அதே சூழ்நிலைதான் இருக்கிறது. ஒன்று தெய்வீகம், இன்னொன்று தெய்வீகமற்றது என்று உங்களால் ஒப்பிடவே முடியாது. தெய்வீகம் எல்லா இடத்திலும் இருக்கும்போது அதை எப்படி அடையாளம் காண்பது? அதை எப்படி உங்கள் அனுபவத்தில் கொண்டு வருவது? ஏனென்றால் இப்போது நீங்கள் ஐம்புலன்கள் வழியாகத்தான் வாழ்வை உணர்கிறீர்கள். எனவே இந்த ஐம்புலன்களின் குறுகிய எல்லையில் இருந்துகொண்டு எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகத்தை உணர வாய்ப்பில்லை.

எனவே தெய்வீகத்தைத் தேடுவதென்பது நீங்கள் புதிதாக தொடங்கவேண்டிய செயல்திட்டம் அல்ல. நீங்கள் பிறந்த விநாடியிலிருந்தே இந்தத் தேடல் தொடங்கிவிட்டது, ஆனால் விழிப்புணர்வில்லாமல் நிகழ்கிறது. அதை விழிப்புணர்வோடு தேடப் போகிறீர்களா? விழிப்புணர்வில்லாமல் தேடப் போகிறீர்களா? என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தெய்வீகத்தை விழிப்புணர்வில்லாமல் தேடுகிறபோது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று பாலுறவு. அது விழிப்புணர்வுள்ள தேடலாகிறபோது ஆன்மீகமாகிறது. அதனை ஓர் அறிவியலாகக் காண்கிறபோது அது யோகா எனப்படுகிறது. யோகா என்றால் உடனே உங்கள் மனதில், உங்கள் உடலை விசித்திரமான கோணங்களில் வளைத்துக்கொள்வது என்றுதான் நினைவிற்கு வரும். ஆனால், யோகா என்றால் 'ஒன்றாதல்' என்று பொருள். காதல் என்றாலும் அதுதான் பொருள், பாலுறவு என்றாலும் அதுதான் பொருள்.

உங்கள் உடல், மனம், எண்ணம் ஆகியவற்றின் எல்லைகள் கடந்து நீங்கள் தேடும்போது அதனை யோகா என்கிறோம். இந்த ஒருமையை நீங்கள் உடல் அளவில் தேடும்போது நீங்கள் என்ன செய்தாலும் அது இரண்டாகத்தான் தெரியும். பாலுறவு என்கிற பெயரில் மக்கள் செய்யும் அத்தனை விசித்திரங்களுமே ஏதாவதொரு விதத்தில் ஒன்றுபட்டுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான். ஆனால் அது நிகழவே நிகழாது. சில விநாடிகளுக்கு போலியானதோர் ஒருமை நிகழும். பிறகு இருவரும் பிரிந்துவிடுவார்கள். தனித்த இரு உடல்கள் என்னதான் முயன்றாலும் ஒன்று ஆகவே முடியாது. உடல் என்ற எல்லையைக் கடக்கிற வரையில் ஒருமைநிலைக்கு வாய்ப்பே இல்லை. இப்போது நீங்கள் எனக்கு ஒருமை தேவையில்லை, நான் இன்பத்தைத்தான் தேடுகிறேன் என்று சொன்னாலும் சரி, ஆனால் அதுவும் போதாது என்பதை ஒரு காலத்தில் உணர்வீர்கள். அது தவறென்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு மனிதரால் அதிலேயே நிறைவடைந்துவிடமுடியாது. உடல் சார்ந்த இன்பத்தைத்தாண்டி வெறெதையோ தேடுகிறீர்கள். இந்த சிறிய மனிதர் என்கிற எல்லையைத் தாண்டிய ஒன்றைத் தேடுகிறீர்கள். உடல் என்பது ஒரு பிணைப்பு. ஏனெனில், இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் அது ஒரு தனித்த அடையாளம். உங்கள் அடையாளம் அந்த உடலுடனே நின்றுவிடுமானால் ஒருவிதமான பாதுகாப்பின்மையை உணர்கிறீர்கள். எதையோ இழந்ததுபோல் தோன்றுகிறது. உலகின் 60% உடலுறவுகள் பாதுகாப்பின்மையின் காரணமாகவே நிகழ்கின்றன. அன்பின் காரணமாகவோ வேறு காரணங்களினாலோ இல்லை. இன்பத்திற்காகக் கூட இல்லை. இரண்டு உடல்கள் இணைகிறபோது சில விநாடிகளுக்கு ஒருவிதமான பாதுகாப்புணர்வு கிடைக்கும், அவ்வளவுதான்.


அடுத்த வாரம்...

பாதுகாப்பின்மையும், நிர்பந்தங்களும் நம் வாழ்க்கையில் எந்தளவு வேறூன்றியுள்ளன, அவைகளின் வெளிப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்வோம்...

'பாலுணர்வு... காதல்... கடவுள்!' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1