ஒழுக்கமா... மனிதநேயமா?
'இன்றைய காலத்தில் ஒழுக்க நெறிகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டது. பலர் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கான அவரது பதில் இங்கே...
 
 

'இன்றைய காலத்தில் ஒழுக்க நெறிகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டது. பலர் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கான அவரது பதில் இங்கே...

சத்குரு:

மனிதநேயத்தின் அடிப்படை இயல்பு ஒடுக்கப்பட்டு, பல வழிகளில் நெறிக்கப்பட்டு இருக்கிறது. அதை ஈடுகட்டி, வாழ்வில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கிக் கொள்வதற்கே உங்களுக்கு ஒழுக்கங்களும் நெறிமுறைகளும் தேவைப்படுகிறது! தற்சமயம் ஒழுக்கங்களையும், நெறிமுறைகளையும் நீக்கிவிட்டால், பலர் மிருகங்களைப் போல்தான் நடந்து கொள்வார்கள். உண்மைதானே? நம் மனிதநேயம் விழிப்போடும், உயிர்ப்போடும் இல்லாததினால் தான் இது நிகழ்ந்திருக்கிறது. ஒழுக்கக்கேடினால் இங்கு மனிதநேயம் அழியவில்லை. மாறாக மனிதநேயம் அழிந்துவிட்டதால் தான், அதற்கு ஒரு மாற்றாக, உங்களையும் உங்கள் சுற்றத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஒழுக்க நெறிகள் தேவைப்படுகின்றன. உங்கள் மனிதநேயம் முழுவீச்சில் செயல்படுகிறது என்றால், உங்களுக்கு நல்லொழுக்கங்கள் நிச்சயமாக தேவைப்படாது.

ஒழுக்கம் என்பது பண்பு, மனிதநேயம் என்பதோ உங்கள் இயல்பு.

உங்கள் அருகே ஒரு ஒழுக்கசீலர் இருக்கிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு ஒழுக்கம், ஒழுக்கம் என்று பின்பற்றுகிறாரோ அந்தளவிற்கு அவருடன் இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இதை கவனித்திருக்கிறீர்களா?

ஒழுக்கம் என்பது பண்பு, மனிதநேயம் என்பதோ உங்கள் இயல்பு. நீங்கள் ஒரு மனிதன் என்பது வெறும் எண்ணமா அல்லது யதார்த்தமா? நீங்கள் பிறவியில் மனிதன் தான் என்றால், உங்களுக்கே இயல்பாக இருக்கின்ற அந்த மனிதநேயத்தை சற்றே விழிக்கச் செய்து பாருங்கள். அவ்வாறு மக்கள் இருந்தாலே போதுமானது. அனைவரும் நன்றாகத்தான் இருப்பார்கள். தற்போது மனிதநேயத்தை புதைத்துவிட்டு, 'நானும் மனிதன்' தான் என்று சொல்லிக்கொள்ள ஒழுக்கங்களை ஒரு போர்வையாக பயன்படுத்தி வருகிறோம். நல்லவர்களாக இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் போலித்தனமும் வேஷமும் தான் வந்திருக்கிறது. எவருமே அற்புதமான மனிதராக பிரகாசிக்கவில்லை.

ஒரு வழியில் பார்த்தால் யோகா என்றால் சங்கமம் என்று பொருள். அதாவது உங்கள் அனுபவத்தில் எல்லாமே ஒன்றாகிவிட்டன. நீங்கள் இங்கு நிற்கும் இக்கணத்தில், உங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் நீங்களாகவோ அல்லது உங்களில் ஒரு பாகமாகவோ, ஒரே ஒரு நொடியேனும், நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்றால், அதன் பின் உங்களுக்கு ஒழுக்கநெறிகள் பற்றி நான் வகுப்பெடுக்க வேண்டுமா? இவரிடம் நல்லவராக இருங்கள், அவருக்கு கெடுதல் செய்யாதீர்கள், இவரை கொல்லாதீர்கள், அவரிடம் திருடாதீர்கள் என்றெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையிருக்குமா? ஒரே ஒரு நொடி, இதையும் உங்களில் ஒரு பாகமாக உணர்ந்துவிட்டால், அதற்குப் பிறகு உங்களுக்கு நன்னெறிகள் எதுவும் தேவையில்லை. அதனால் துடிப்பான, உயிர்ப்பான மனிதநேயம்தான் நமக்குத் தேவையே அன்றி, ஒழுக்கம் அல்ல.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1