ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? - ஜென்கதையின் பொருள்!
“ஆன்மிகப் பயணத்தில், ஆண் என்றும் பெண் என்றும் எந்தப் பிரிவினையும் இல்லை. நீ தேடுவது பதவி உயர்வா, உன் ஆன்மாவுக்கு விடுதலையா? அந்தஸ்தில் உயர்வு என்றால், நீ எதுவும் உணராதவள் ஆகிறாய்.
ஜென்னல் பகுதி 17
குருவிடம் பெண் சீடர் கேட்டார்: “அடுத்த பிறவியிலாவது ஆண் சீடராகும் வாய்ப்பு எனக்கு இருக்கிறதா?”
குரு கேட்டார்: “இப்போது என்னவாக இருக்கிறாய்?”
“ஆன்மிகத்தை நாடும் பிரம்மச்சாரிணியாக!”
“அது யாருக்குத் தெரியும்?” என்றார் குரு.
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
இன்றைக்கு ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சரிசமமாக இருக்கிறார்கள் என்றால், அது யாருடைய பெருந்தன்மையினாலோ, சுதந்திரப் போக்கினாலோ நேர்ந்துவிடவில்லை. தொழில்நுட்பத்தின் உதவியால் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஜென் மடத்தில், இயல்பாகவே, உடல்ரீதியாக ஆண்கள் பெண்களை விட சற்று முன்னதாக இருப்பார்கள். அதனால், அந்தப் பிரம்மச்சாரிணி அடுத்த பிறவியிலாவது பிரம்மச்சாரி என்ற அந்தஸ்து தனக்குக் கிடைக்குமா என்று கேட்கிறார்.
“ஆன்மிகப் பயணத்தில், ஆண் என்றும் பெண் என்றும் எந்தப் பிரிவினையும் இல்லை. நீ தேடுவது பதவி உயர்வா, உன் ஆன்மாவுக்கு விடுதலையா? அந்தஸ்தில் உயர்வு என்றால், நீ எதுவும் உணராதவள் ஆகிறாய்.
பிரம்மச்சாரிணியாக இருப்பதாகச் சொல்வதே அபத்தம். பிரம்மச்சாரிணியாக இருப்பதாக நீயே உணரவில்லையே? வேறு யார் அப்படி அறியப்போகிறார்கள்?” என்ற விளக்கம் தான் குருவின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது.
அப்படியே அடுத்த பிறவியில் பிரம்மச்சாரி ஆனால், அடுத்தது சந்நியாசி ஆவேனா? அதற்கடுத்து சீனியர் சந்நியாசி ஆவேனா என்றுதான் கேட்கத் தோன்றும்.
“பிரம்மச்சாரிணிக்கான உடைகளை அணிந்து விட்டதாலேயே அதற்கான உணர்வு வந்துவிடாது. நீ நாட வேண்டியது உன் அந்தஸ்தில் ஒரு மாற்றம் அல்ல. நீ நாட வேண்டியது முக்தி” என்பதே குருவின் பதில்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418