ஒருநாள் ஆனந்தம், இன்னொரு நாள் துயரம்... எதனால் இப்படி நடக்கிறது?
சில நாட்களில் நீங்கள் ஆனந்தமாக இருந்தபோது, சிரிப்பதற்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்... வெடித்துச் சிரித்து ஆனந்தப்பட்டீர்கள். வேறு சில நாட்களில் நீங்கள் கண்ணீர் சிந்தி அழவும், துயரத்தில் மூழ்கிப் போகவும் அற்பமான காரணங்களே போதுமானதாக இருந்தது!
சத்குரு:
நீங்கள் என்னோடு அமர்ந்து இருக்கும்போது ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்குகிறேன்.
என்னுடைய சக்தி நிலை உங்கள் உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும் குறிப்பிட்ட ஒருவிதத்தில் ஒருங்கிணைக்கிறது. அதனால் ஆனந்தமாக உணர்கிறீர்கள். ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனந்தம் உங்கள் உள்ளேதான் இருக்கிறது. புறச்சூழல் ஒரு தூண்டுதல் மட்டுமே.
சில கவிதைகளில் ‘ஆனந்த மழை பொழிகிறது’ என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படி நடக்காது. குறிப்பிட்ட விதத்தில் ஒரு புறச்சூழலை உருவாக்கினால், உங்களை ஆனந்தமாக உணரச் செய்ய முடியும். ஆனால் ஆனந்தம் எப்போதுமே ஓர் உள் அனுபவம்தான். வெளியில் இருந்து ஆனந்தத்தை ஏதோ பனிமழை மாதிரி உங்கள் மீது தூவ முடியாது. அப்படித் தூவினால் உங்கள் சருமம்தானே ஆனந்தத்தை முதலில் உணரமுடியும் (சிரிப்பு). உங்கள் உயிரின் ஆதாரமானது, அதனுடைய தன்மையை வெளிப்படுத்தும்போது அதை நாம் ஆனந்தம் என்று அழைக்கிறோம்.
இப்படியான வெளிச் சூழ்நிலைகள் எப்போதாவது கிடைக்கும் வெறும் வாய்ப்புகள்தான். ஆனந்தத்தின் ஊற்று உங்கள் உள்ளேதான் உள்ளது. நீங்கள் இதை கவனித்து இருக்கலாம். சில நாட்களில் நீங்கள் ஆனந்தமாக இருந்தபோது, சிரிப்பதற்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்... வெடித்துச் சிரித்து ஆனந்தப்பட்டீர்கள். வேறு சில நாட்களில் நீங்கள் கண்ணீர் சிந்தி அழவும், துயரத்தில் மூழ்கிப் போகவும் அற்பமான காரணங்களே போதுமானதாக இருந்தது!
என்ன நடந்தது என்றால் உங்கள் உடல், மனம், உணர்ச்சி இவை நன்றாக ஒருங்கிணைந்த நிலையில் சீராக இருந்தபோது, உயிரின் இயல்பான ஆனந்தத்தை உணர்ந்தீர்கள். ஆனால் வேறு சில நாட்களில் உங்கள் உடல், மனம், உணர்ச்சி இவை தாறுமாறாக ஒருங்கிணைப்பு தவறி இருக்கும்போது, உயிரின் இயல்பான ஆனந்தத்தை உங்களால் உணர முடியவில்லை.
தினசரி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை. ஒவ்வொரு நாளிலுமே நல்ல சூழ்நிலைகளும், நிகழ்வுகளும், எதிர்மறையான சூழ்நிலைகளும், நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி நீங்கள் வெளிப்படுத்தப்போகும் உணர்வு... சிரிப்பா அல்லது அழுகையா என்பதைத் தீர்மானிப்பது உங்கள் உள்நிலைதான்; வெளி நிகழ்வுகள் அல்ல. ஆக, உங்கள் ஆனந்தம் வெளிநிகழ்வுகளால் வருவது இல்லை. வெளி நிகழ்வுகள் வெறும் சந்தர்ப்பங்கள்தான். ஆனந்தத்தின் ஊற்று நீங்கள்தான்.
Subscribe