ஜென்னல் பகுதி 23

“புத்தர் என்றால் என்ன?” என்று சீடன் கேட்டான்.

குரு சொன்னார், “நெருப்பைத் தேடும் அக்னி தேவன்!”

சீடன் புரிந்துவிட்டதாகக் குதித்தான்.

“என்ன புரிந்துகொண்டாய்?”

“நீயே ஒரு புத்தர். புத்தரை எதற்காக வெளியே தேடுகிறாய்? என்பதுதானே விளக்கம்?”

“அடடா! தவறாகப் புரிந்துகொண்டாயே?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சீடன் குழம்பினான். “பின்பு இதற்கு என்னதான் விளக்கம் குருவே?”

“நெருப்பைத் தேடும் அக்னி தேவன் என்பதுதான் விளக்கம்!” என்றார் குரு.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

“ஆன்மீக வழி என்பதே இப்படி ஆகிவிட்டது. நமது உள்தன்மையை நாம் உணர்வதற்கு 10 புத்தகங்களைப் படிக்கிறோம்; 100 பேரைப் போய்க் கேட்கிறோம்; 1000, 2000 வருஷத்துக்கு முன்னால் யாரோ சொன்னதாகச் சொல்வதை எல்லாம் கேட்டு, ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் செத்துப்போனவர்களுடைய உயிர்களைப் பற்றிப் புரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது? இப்போது இருக்கும் உங்களுடைய உயிரைப் புரிந்துகொள்வது அல்லவா ஆன்மீகம்?

பகல் வெளிச்சத்தில், உங்களுக்கு முன்னால் நிழல் நீண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல முயன்றால், என்ன ஆகும்? உயிரைக் கொடுத்து எத்தனை வேகம் கூட்டி நீங்கள் முயன்றாலும், அது நிறைவேறப்போவது இல்லை. தத்துவங்கள், போதனைகள் இவற்றில் சிக்கி ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ளப் பார்ப்பது இப்படித்தான்.

“நான் இங்கே உயிராக உட்கார்ந்திருக்கிறேன். ஆனால், அதை முழுமையாக உணராமல் இருக்கிறேன். இதை எப்படி உணர்வது?” என்று கேட்டால், அதற்கு ஒரு குருவின் வழிகாட்டுதல் வேண்டுமானால் தேவைப்படலாம். தத்துவங்களோ, போதனைகளோ அல்ல.

உயிரைப் புரிந்துகொள்ள உயிரே ஆர்வப்படுவதைத்தான் அக்னி தேவன் நெருப்பைத் தேடுவது என்று குரு சொல்கிறார். ஆனால், அதைத் தத்துவமாக, வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது, உயிரைப் புரிந்துகொள்வது ஆகாது.

உயிர், உயிரைப் புரிந்துகொள்ள ஆர்வப்படுவதும், ஆன்மா, ஆன்மாவைப் புரிந்துகொள்ள ஆர்வப்படுவதும்தான் ஆன்மீகம்.

புரிந்துகொள்ள எவ்வளவு நேரம் தேவைப்படும்?

அற்ப நேரம்கூட அதிகம்தான். பின்னர், ஏன் அது சுலபமாக நிகழ்வது இல்லை?

பகல் வெளிச்சத்தில், உங்களுக்கு முன்னால் நிழல் நீண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல முயன்றால், என்ன ஆகும்? உயிரைக் கொடுத்து எத்தனை வேகம் கூட்டி நீங்கள் முயன்றாலும், அது நிறைவேறப்போவது இல்லை. தத்துவங்கள், போதனைகள் இவற்றில் சிக்கி ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ளப் பார்ப்பது இப்படித்தான்.

உபன்யாசகர், போதகர், மத குருமார்கள் இவர்களுடைய வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டால், ஆன்மீகம் புரிபடாது!”


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418