எளிய மனிதர்கள் சட்டென்று யாரையும் நம்பிவிடுகின்றனர். அதிகம் படிப்பவர்களோ, யாரை நம்புவது, எதை நம்புவது என்ற குழப்பத்தில் தொடர்ந்து உள்ளனர். உண்மையில், நம்பிக்கை என்பதன் தன்மை என்ன? நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் சம்பந்தமுள்ளதா? பதிலை அறிய நம்பிக்கையோடு தொடர்ந்து படியுங்கள்... இந்த ஆழமான வார்த்தைகளில் உள்ளது விடை!

சத்குரு:

நம்பிக்கை என்பது உருவாக்கப்படுவதல்ல. அது நிகழ்வது. உங்களுக்கு நிகழ்வதெனில், நிகழும். இல்லையேல் இல்லை. அப்படியானால் அது தானாக உங்களுக்கு நிகழ்ந்து உங்கள் தலைமேல் விழும்வரை காத்திருக்க வேண்டுமா? இல்லை. அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். இந்தப் படைத்தலில் வாழ்வதற்கான அடிப்படை அம்சங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோவொன்று நிகழ, அதற்கு உகந்த சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அனைத்துக்குமே இதுதான் அடிப்படை. சரியான சூழலை உருவாக்கினால் நிகழ வேண்டியது நிகழும். இல்லையென்றால் எவ்வளவு போராடினாலும் எதுவும் நிகழாது.

பருத்தி விளைய வேண்டுமென்றால், பருத்திச் செடிக்குப் பக்கத்தில் நீங்கள் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால் பருத்தி பூக்காது. ஆனால், பருத்தி விளைவதற்கான சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். மண் எப்படி இருக்க வேண்டும், உரம் எப்படி இருக்க வேண்டும், பருவநிலை எப்படி இருக்க வேண்டும், தண்ணீர் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து உரிய சூழலை உருவாக்கினால், பருத்தி வளரும்.

அனைத்துக்குமே இதுதான் அடிப்படை. சரியான சூழலை உருவாக்கினால் நிகழ வேண்டியது நிகழும். இல்லையென்றால் எவ்வளவு போராடினாலும் எதுவும் நிகழாது. எனவே, நம்பிக்கை உங்களுக்குள் அரும்ப வேண்டுமென்றால் அதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும்.

நம்பிக்கை அரும்புவதற்கான சூழலென்ன? “வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள்” என்றார் ஏசுநாதர். அதுதான் அவருடைய அடிப்படையான போதனை.

அவர் இதனைச் சொன்னபோது, அறிஞர்களோ, சிந்தனையாளர்களோ, நிரம்பப் படித்தவர்களோ அவரைப் பின்தொடரவில்லை. மீனவர்களும் எளிய மனிதர்களுமே அவர் பின்னால் வந்தார்கள். தர்க்க மனம் உள்ளவர்களால் யாரையும் பின்பற்ற முடியாது. எளிய மனங்களுக்கும் திறந்த மனங்களுக்குமே அது சாத்தியம்.

மிகவும் எளிய மனமுள்ள இந்த மீனவர்களில்கூட அவருக்குப் பின்னால் சில அடிகள் நடந்துவிட்டு ஒருவர் சொன்னார், “என் தந்தை இறந்து விட்டார், அவரைப் புதைத்துவிட்டு வருகிறேன்” என்று. அப்போது ஏசுநாதர் சொன்னார், “இறந்தவர்களை இறந்தவர்களிடம் விட்டுவிடு. நீ என் பின்னால் வா!” என்று. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் குரூரமாகத் தோன்றும். ஆனால், அவர் இதைத்தான் சொன்னார்.

நம்பிக்கை என்பது எளிய மனிதர்களுக்கானது. எப்போது உங்களுக்குள் நவீன கல்விமுறை புகுத்தப்பட்டு விட்டதோ, அப்போதே எல்லாவற்றையும் சந்தேகப்படுகிற, எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்கிற போக்கு உங்களில் ஏற்பட்டுவிட்டது. இதனால் உங்களுக்குள் நம்பிக்கை ஏற்படுவது சாத்தியமில்லை என்று பொருளல்ல. உங்களிடம் எது வலிமையாக இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்குங்கள். உங்களிடம் இல்லாததில் இருந்து தொடங்காதீர்கள்.

நீங்கள் பக்தியுள்ளவர்போல் இருக்க முயற்சி செய்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்கள். ஆனால், உங்களுக்குள் குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்டால் பக்தி உங்கள் தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும்.

நீங்கள் அதிகம் சிந்திக்கும் மனிதரென்றால் அதிலிருந்து தொடங்கலாம். நீங்கள் உடல் வலிமை மிக்கவர் என்றால் அதனைக் கொண்டு தொடங்கலாம். சக்திநிலை சார்ந்த புரிந்துணர்வு உங்களிடம் வலிமையாக இருக்குமென்றால், அதனை அடிப்படையாகக் கொண்டு தொடங்கலாம். உணர்வுநிலையில் நீங்கள் தீவிரமாக இருப்பவர் என்றால், அந்த அடிப்படையில் தொடங்கலாம். ஆனால், இந்த நான்கு அம்சங்களுமே உருவாக்கி பயன்படுத்தப்பட வேண்டியவைதான்.

நீங்கள் பக்தியுள்ளவர்போல் இருக்க முயற்சி செய்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்கள். ஆனால், உங்களுக்குள் குறிப்பிட்ட அளவு அனுபவம் ஏற்பட்டால் பக்தி உங்கள் தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். எனவே, நம்பிக்கை என்பது நீங்கள் நம்புவதல்ல. அது உங்கள் தன்மை. நீங்கள் எனும் தன்முனைப்பு விழுந்து இருந்தால், பெருங்கடலில் நீங்கள் ஒற்றை அலைபோல் இருக்கிறீர்கள்.

அலை ஒரு விநாடி எழும், மறு விநாடி விழும். இந்த உலகில் நீங்கள் குறுகிய காலம் மட்டுமே இருக்கப் போகிறீர்கள் என்பதை ஒரு தகவலாக இன்றி உணர்தலாக, உயிர்ப்புள்ள அனுபவமாக ஆக்கிக் கொள்கிறீர்கள். இந்த நிலையில் நீங்களே நம்பிக்கையின் வடிவமாகிறீர்கள். இந்தத் தன்மையை எட்டும் வரை நம்பிக்கையைப் பற்றி வெறுமனே பேசுவதில் பயனில்லை.

நம்பிக்கை என்பதற்கும் விசுவாசத்திற்கும் சம்பந்தமில்லை. விசுவாசம் என்பது சுயநல நோக்குடன் சிலர் உங்களிடம் ஏற்படுத்த விரும்பும் உணர்ச்சி. நம்பிக்கை என்பது உங்களைப் பிடித்து வைத்துக் கொள்வதல்ல. உங்களை விடுவிப்பது. விசுவாசம் என்பது ஏதோ ஒரு குழுவுடன் உங்களை அங்கமாக்கப் பார்ப்பது. ஆனால், நம்பிக்கை என்பது உங்களை இந்தப் பிரபஞ்சத்தின் அங்கமென உணரச் செய்வது. நம்பிக்கை என்பது நீங்கள் உருவாக்குவதல்ல, நம்பிக்கையாகவே ஆவது.