நமது சூட்சும உடலின் ரகசியங்கள்!

மனித உடல் குறித்து மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், அவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்ற திட உடலைப் பற்றியதுதான். ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் கண்ணுக்கு தெரியாத சூட்சும உடல் இருப்பது தெரியுமா? இங்கே நமது சூட்சும உடலின் ரகசியங்களை கூறுகிறார் சத்குரு.
 

மனித உடல் குறித்து மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் பலவித கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், அவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்ற திட உடலைப் பற்றியதுதான். ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் கண்ணுக்கு தெரியாத சூட்சும உடல் இருப்பது தெரியுமா? இங்கே நமது சூட்சும உடலின் ரகசியங்களை கூறுகிறார் சத்குரு.

சத்குரு:

நமது தேகத்தைக் கடந்து பரவெளியில் பயணம் செய்யும் அனுபவம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. கீழே படுத்துக்கொண்டு எங்கோ பறப்பது போல கற்பனை செய்துகொள்வது என்பது இத்தகைய பயணங்களாகாது. (உளவியல் நிபுணர்கள் நிகழ்த்தும் அகநிலை பின்னோக்கிய பயணம் (அ) கூடுவிட்டு கூடு பாயும் வித்தை உதாரணங்கள்) இதுபோன்ற அனுபவங்கள் வெறும் மனப் பிரமைகளே. பலவிதமான மனிதர்கள் சரியான புரிதலின்றி எல்லாவற்றையும் செய்து பார்க்க முற்படும்போது அது நகைப்பிற்கிடமான ஒன்றாகிவிடுகிறது.

உடலின் 5 கோசங்கள்

நமது உடல் ஐந்து விதமான மெல்லிய கோசங்களால் (அ) உறைகளால் ஆனது எனலாம். முதலாவது அன்னமய கோசம் என்பது நாம் உண்ணும் உணவாலானது. அது திட ரூபமாக இருக்கிறது. உணவு உட்கொள்வதால் உண்டாகிறது. இரண்டாவது மனோமய கோசம். இது மனதாலான ஒன்றாகும். இதுவும் ஒரு உறை போன்றதுதான். இன்றைய மருத்துவ உலகம் மனது பாதிக்கப்பட்டால் உடலில் ஏற்படும் நோய்கள் பற்றி விவாதிக்கிறது. மூளையில் ஏற்படும் அழுத்தம் வயிற்றில் புண்ணாக வெளிப்படுகிறது. இது மனதில் ஏற்படும் மாற்றம் உடலில் எதிரொலிப்பதைக் காட்டுகிறது. ஏனெனில் மனம் என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இல்லை. உடல் முழுக்கவும் பரவியிருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சுய அறிவு இருக்கிறது. எனவே மனோமய கோசம் என்பது மனதாலான இன்னொரு உடலாகும்.

தற்சமயம் நமது உடல், மனம், உணர்வுகள் இவைகள்தான் நம் அனுபவத்தில் இருக்கின்றன. இம்மூன்றும் இயங்க வேண்டுமெனில் அவற்றை இயக்க ஒரு சக்தி இருக்க வேண்டும்.

தற்சமயம் நமது உடல், மனம், உணர்வுகள் இவைகள்தான் நம் அனுபவத்தில் இருக்கின்றன. இம்மூன்றும் இயங்க வேண்டுமெனில் அவற்றை இயக்க ஒரு சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாமல் இவை இயங்க வாய்ப்பில்லை. மைக்ரோபோன் கருவி ஒலியை பெருக்குகிறது. ஒலிபெருக்கி என்ற கருவியின் அமைப்பு பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அது இயங்கும்போது அந்த செயல் நிகழ ஒரு சக்தி மூலம் இருப்பது விளங்கும். இதுவே உடலின் மூன்றாவது பரிமாணமான பிராணமய கோசம் எனப்படும் ஆற்றல் உடம்பாகும்.

நான்காவது விஞ்ஞானமய கோசம் எனப்படும் உருவமில்லாத உடம்பாகும். ஐந்தாவது ஆனந்தமயம் கோசம் என்று வர்ணிக்கப்படுகின்ற இது சூட்சும நிலையில் இருக்கின்ற, ஆனால் அனுபவப் பூர்வமாக உணரப்படுகின்ற ஒரு உயர்ந்த நிலை பரிமாணம் ஆகும். மேற்சொன்ன ஒவ்வொரு கோசத்தையும் "யோகத்தில்" நாம் (புலன் உணர்வுகளுக்குட்பட்ட) உடல் என்ற அடையாளத்துடனேயே வர்ணிக்கின்றோம்.

கடைசி இரண்டு பரிமாணங்களான விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் ஆகியவை திட உருவமில்லாத, பொருள் தன்மைக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையில் இருக்கின்றவைகளாக இருப்பினும் அதை உடல் என்றே குறிப்பிடுகிறோம். ஏனென்றால் 'யோகா' என்பது வழிமுறையே தவிர தத்துமல்ல. நாம் இந்த ஒவ்வொரு நிலையையும் எவ்வாறு உபயோகித்து எவை எவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கிறோம்.

உடல் தாண்டிய பயணம் என்றால்...

உடல் தாண்டிய பயணம் என்பது திட, மன, சக்தி மற்றும் ஆனந்தமய கோசங்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அரூபமான விஞ்ஞானமய கோசத்தை வெளியில் பயணிக்க விடுவதாகும். அதாவது திடமான உடம்பின் செயல்பாடுகளை நிறுத்தாமல் விஞ்ஞானமய கோசத்தை மட்டும் பயணிக்க அனுமதிப்பதாகும். இந்நிகழ்வில் திட, மன, சக்தி மற்றும் ஆனந்தமய கோசங்கள் எவ்வித மாற்றமுமின்றி இயல்பு நிலையில் இருக்கும். இச்செயல் ஒருவிதமான ஆளுமை நிறைந்த வித்தை. ஆனந்தமய கோசம் தவிர்த்த மற்ற மூன்று உடல்நிலைகள் பொருட்தன்மை சார்ந்தவை. ஆனந்தம் அனைத்தையும் கடந்த நிலை. விஞ்ஞானமயம் என்பது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. அதாவது திடநிலைக்கும் சூட்சும நிலைக்கும் இடைப்பட்ட ஒன்று. இந்த கோசத்தை தொட்டுணர முடியாது. ஆனால் தீவிர சாதனா (பயிற்சி முறை) முறைகளை தொடர்ந்து செய்தால் இது சாத்தியப்படும் இல்லையென்றால் அதற்குள் நுழைய இயலாது. ஆனால் இப்போது முச்சந்திகளில் சில கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை உடல் தாண்டிய பரவெளிப் பயணங்களல்ல, மாறாக வெறும் மனப்பிரமைகளேயாகும்.