பேய்கள், அமானுஷ்யங்கள் என்று யாராவது பேச ஆரம்பித்தால் சிலர் இதெல்லாம் அபத்தம் என்று விலகிப்போவார்கள்; சிலரோ அப்படியே நம்பி பயந்துகொள்வார்கள்! இங்கே தனது பால்ய வயது பேய் அனுபவம் மூலம் சத்குரு சொல்லும் உண்மை ஆழமானது. நம் அனுபவத்தில் இல்லாத ஒன்றை பிறர் சொல்லும்போது அதை நம்பலாமா? வேண்டாமா? என்பதும் இதில் தெளிவாகிறது.

சத்குரு:

தங்கள் ஆன்மீக ஈடுபாடு குறித்து என்னிடம் சிலர் சொல்கிறார்கள், "இதிலெல்லாம் ஈடுபட என் உயிர் மிகவும் விரும்புகிறது. ஆனால் என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது" என்று. உண்மையில் உயிருக்கு விருப்புமில்லை, வெறுப்புமில்லை. மனதுக்கும் உடலுக்கும்தான் அதெல்லாம் தெரியும். விருப்பம், வெறுப்பு ஆகிய உணர்வுகள் உடலையும் மனதையும் சார்ந்தவை. எனவே விருப்பு வெறுப்புகளைக் கடக்கும் விதமாக உடலையும் மனதையும்தான் நீங்கள் பழக்க வேண்டும்.

உங்களுக்கு உத்வேகம் தரும் எந்த நூலையும் நீங்கள் படிக்கலாம். ஆனால் உண்மையைத் தேட வேண்டுமென்றால் நீங்கள் உங்களுக்குள்தான் தேட வேண்டும்.

உயிருக்கு விருப்பமிருக்கிறது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. மனம் செய்யும் தந்திரம்தான் இந்த எண்ணம். உயிரின் இயல்பு உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நீங்கள் அமர்ந்து தியானம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எனவே மனதின் ஏமாற்று வேலைகளுக்கு மயங்காதீர்கள். உணவு சாப்பிட உயிர் விரும்புகிறது, ஆனால் உடம்பு விரும்புவதில்லை என்று யாராவது சொன்னால், அது எவ்வளவு அபத்தமானது! உணவு என்பது உடம்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதில் உயிருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல விருப்பம், வெறுப்பு என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். அதற்கும் உயிருக்கும் எந்தத் தொடர்புமில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உயிரின் தன்மையை உணர்வது என்பதெல்லாம் உங்கள் புரிதலின் எல்லைக்குள்ளேயே வராத விஷயங்கள். முதலில் உயிர் என்று ஒன்று உங்களுக்கு இருக்கிறதா என்பதே உறுதியாகத் தெரியுமா? அப்படி ஒன்று இல்லாமல் கூட இருக்கலாமில்லையா? நீங்கள் வெறும் உடம்பாகக் கூட இருக்கலாம். ஒன்று இருப்பதாகவோ இல்லையென்றோ நீங்களாக முடிவு கட்டி விட்டால் உண்மையிடமிருந்து வெகுதூரம் தள்ளிச் செல்கிறீர்கள் என்று பொருள். சாதகர் என்றாலே தேடலில் இருப்பவர் என்று பொருள். ஒன்றைப் பற்றிய அபிப்பிராயத்தை நீங்களாக ஏற்படுத்திக் கொண்டால், அந்த சாதனையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள் என்று பொருள். ஒன்று தெரியாதபோதுதான் அதைத் தேட முடியும். நீங்கள் ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டால் அங்கே தேடல் நின்று விடுகிறது. முன்முடிவுகளும் அபிப்பிராயங்களும் இல்லாத தேடலே உண்மையான தேடல்.

உங்கள் அனுபவத்துக்குள் இல்லாத ஒன்றை, யார் சொல்லியிருந்தாலும் அதை நீங்கள் நம்ப வேண்டிய தேவையில்லை. சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒருவர், கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை சமஸ்கிருதத்தில் சொல்லி. "இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டார். "மற்றவர்களின் எண்ணங்கள் என்ன என்று யோசிப்பதில் நான் என் நேரத்தை வீணடிப்பதில்லை" என்றேன். "இல்லையில்லை! இது பகவத்கீதை" என்றார். எதுவாயிருந்தால் என்ன? உங்கள் நாட்டம் வாழ்க்கையின் மீதா ஏடுகள் மீதா" என்று கேட்டேன். "இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார் அவர். "ஒரு சிறு குழந்தை கூட இதற்கு பதில் சொல்லுமே! உயிருள்ளது புத்தகமா? நீங்களா?" என்றேன். அதற்குள் பலரும் திரண்டுவிட்டனர். உடனே அவர், "உயிருள்ளவர் நான்தான்" என்றார்.

'இந்தப் பிரபஞ்சத்தை எந்த சக்தி படைத்ததோ, அது உங்களைப் படைத்தது. அப்படியானால், வாழ்க்கையை உணர நீங்கள் உங்களைப் பார்க்க வேண்டுமா, புத்தகங்களைப் பார்க்க வேண்டுமா?" என்று கேட்டேன். கீதையை கண்ணன் ஓரிடத்தில் அமர்ந்து எழுதவில்லை. அவர் சொன்னதைப் போர்க்களத்தில் யாரோ கேட்டு எழுதினார்கள். அதில் எந்த அளவுக்கு சரியாகக் கேட்டு எழுதினார்கள் என்று யாருக்குத் தெரியும்?

கண்ணன் சொன்னார், ஏசு சொன்னார் என்று பல விஷயங்களை நம்புகிறீர்கள். உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் பார்த்தால், உங்களிடமிருந்து இரண்டடி தள்ளி அமர்ந்திருப்பவரையே நீங்கள் நம்ப முடியவில்லை. அப்படி இருக்கும்போது, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எதைச் சொன்னார்கள் என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்றேன். நான் இப்படிக் கேட்டதையே அவரால் நம்ப முடியவில்லை. உங்களுக்கு உத்வேகம் தரும் எந்த நூலையும் நீங்கள் படிக்கலாம். ஆனால் உண்மையைத் தேட வேண்டுமென்றால் நீங்கள் உங்களுக்குள்தான் தேட வேண்டும்.

வாழ்க்கை பற்றிய உண்மைகள் உங்களுக்குத் தெரிய வேண்டுமானால், உங்களையே நீங்கள் பாருங்கள். உயிரின் விருப்பம், ஆவியின் ஆசை என்றெல்லாம் கற்பனை வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

எனக்கு 12-13 வயது இருக்கும் போதெல்லாம், விசித்திரமாக நடக்கும் விஷயங்களை விருப்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். பேய் பிடித்த வீடு என்று எந்த வீட்டையாவது சொன்னால் அங்கே சென்று படுத்துறங்க ஆசைப்படுவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரவு வேளைகளில் மயானத்திற்குச் சென்று வேடிக்கை பார்ப்பதும் உண்டு. ஒருவர் அப்போதெல்லாம் ஒவ்வொரு அமாவாசையிலும் பேய்களுடன் பேசுவதாகவும், தன்னுடைய ரத்தத்தை அதற்கு ஊட்டுவதாகவும் சொல்வார்.

பலமுறை வெட்டுப்பட்ட தன் கட்டை விரலை வேறு காட்டுவார். ஆனால் சில அமாவாசை இரவுகளில் நான் அவருடன் போய் இருக்கும்போது, "இன்று அந்தப் பேய் வரவில்லை" என்பார். அவர் போலி மாந்திரீகர் என்றல்ல. அவரால் சில விஷயங்களை செய்ய முடிந்தது.

ஏனோ நான் செல்லும் இரவுகளில் பேய்கள் வரவில்லை. அவற்றுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும். அவருக்குப் பிறகு அவருடைய மகன் இது போன்ற வேலைகளில் இறங்கத் தொடங்கினார். அவர் என்னைவிட சில வருடங்களே மூத்தவர். நான் அவருடன் சில சமயங்களில் சேர்ந்து சுற்றுவது உண்டு.

பேய் பிடித்த வீடு என்று சொன்னால் கறுப்புடை அணிந்து, கையில் புட்டிகளுடன் சென்று, பேய்களைப் பிடித்து, புட்டியில் அடைத்து தான் இருக்கும் இடத்திற்குக் கொண்டு வருவது அவருடைய பழக்கம். அந்தப் புட்டிகளில் ஒன்றைக் கொண்டுவர பல முறை முயன்றேன். அவர் விடவேயில்லை. நான் அவற்றை நம்பினேனா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் தெரிந்து கொள்கிற ஆர்வமிருந்தது.

எனக்கு 12-13 வயது இருக்கும் போதெல்லாம், விசித்திரமாக நடக்கும் விஷயங்களை விருப்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். பேய் பிடித்த வீடு என்று எந்த வீட்டையாவது சொன்னால் அங்கே சென்று படுத்துறங்க ஆசைப்படுவேன்.

ஒருமுறை அவருடன் சேர்ந்து பேய் பிடித்த வீடு ஒன்றில் நடந்த பூஜைக்குச் சென்றேன். ஐந்து முனைகள் கொண்ட கோலம் ஒன்றை வரைந்தார். ஐந்து முனைகளிலும் முட்டைகளை வைத்தார். இதையும் அதையும் சொல்லி, சில மந்திரங்களை முணுமுணுத்து, கைகளைத் தட்டியதும் அந்த ஐந்து முட்டைகளும் ஒரே நேரத்தில் உடைந்தன. உடனே அவசரம் அவசரமாக புட்டியைத் திறந்தவர் சில விநாடிகளிலேயே அதை வேகமாக மூடினார். புட்டிக்குள் பேய் அகப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அந்த வீட்டிலிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவரை அமர வைத்து இரவு உணவு பரிமாறினார்கள். உடன் போன எனக்கும்தான்....

இரவெல்லாம் எனக்கு உறக்கமில்லை. அவர் புட்டிக்குள் அடைத்ததை என்னால் ஏன் பார்க்க முடியவில்லை என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன். மறுநாள் காலை எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றேன். அங்கே பெரிய கொய்யா மரம் ஒன்றிருந்தது. அண்ணாந்து பார்த்தேன். நிறைய கொய்யாக் கனிகள் இருந்தன. ஏதோ உந்துதலால் கைகளைத் தட்டினேன். ஒரு கொய்யாக்கனி விழுந்தது. மீண்டும் கைகளைத் தட்டினேன். இன்னொன்று விழுந்தது. இதை சில நண்பர்களுக்கும் செய்து காட்டினேன். ஏனென்றால் ஊரிலுள்ளவர்களின் தோப்புகளில் மாங்காய் அடித்து வருவது எங்கள் பழக்கம்! இதை சில நாட்கள் செய்தேன். இனி செய்யக்கூடாது என்று உறுதியாகத் தோன்றியதால் நிறுத்திக் கொண்டேன்.

அவர் பேய்களை அடைக்க புட்டியை ஏன் பயன்படுத்தினார் என்று அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது. உங்கள் அனுபவ எல்லைக்குள் உணர முடிந்தவற்றை நம்புவது தவறில்லை. ஆனால் உங்கள் அனுபவ எல்லைக்குள் வராதவற்றையும் ஒன்று நீங்கள் நம்புகிறீர்கள். அல்லது, அப்படியெல்லாம் இருக்காது என்று முடிவு கட்டுகிறீர்கள். இதுதான் உங்கள் சிக்கல். திறந்த மனதுடன் பாருங்கள். தெரிந்துகொள்ள முயலுங்கள்.