நடுத்தர வயது பிரச்சனையை சமாளிக்க என்ன வழி?
சமீபத்தில் நான் எனது வாழ்க்கையில் ஆழமான வெறுமையை அனுபவித்து கொண்டிருக்கிறேன். இது என் நடுத்தர வயது பிரச்சினையா?
 
 

Question:சமீபத்தில் நான் எனது வாழ்க்கையில் ஆழமான வெறுமையை அனுபவித்து கொண்டிருக்கிறேன். இது என் நடுத்தர வயது பிரச்சினையா?

சத்குரு:

இளமையில் இருந்த வலிமை உங்களுக்கு இப்போது இல்லை, இதை நடுத்தர வயது நெருக்கடி என்று நினைக்கிறீர்கள். இளமையில், ஒருவேளை நீங்கள், ஆரவாரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்போது, உங்களுடைய ஆற்றல் குறைந்துகொண்டே வருகிறது, நள்ளிரவு தாண்டி ஒரு பார்ட்டியில் இப்போது இருக்க முடியவில்லை. எனவே இதை இப்போது ஒரு பிரச்சனையாக நினைக்கிறீர்கள். நடுத்தர வயதில் சமநிலையுடன் இருக்கவேண்டும் தானே? இளமை பருவத்தின் பிரச்சினைகள் முடிந்துவிட்டது, முதுமையின் சிக்கல் இனிமேல்தான் வரும். உங்கள் வாழ்க்கையில் நடுத்தர வயது ஒரு சிறப்பான பகுதியாக இருக்கவேண்டும், ஆனால் அதை ஒரு பிரச்சினையாக சொல்கிறீர்கள். நடுத்தர வயது ஒரு பிரச்சினை இல்லை - நீங்கள் தான் பிரச்சினை.

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை என்று எதுவும் இல்லை. சூழ்நிலைகள் தான் உள்ளது.

நீங்கள் பிரச்சினை என்று சொல்லும் இது, ஒருமாற்றம் மட்டுமே. இந்த மாற்றத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியவில்லை, அதனால், இதை பிரச்சினையாக கூறி வருகிறீர்கள். நீங்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்றால், நீங்கள் கருவறைக்கு செல்லவேண்டும் அல்லது, முக்தி அடையவேண்டும். பொருள் தன்மை உடைய இந்த வாழ்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கும் வரையில், மாற்றம் இல்லாத ஒன்று என்று எதுவும் இல்லை. இந்த கணம் மூச்சை உள்வாங்குகிறீர்கள், அடுத்த கணம் விடுகிறீர்கள் - இது மாற்றம். மாற்றத்தை எதிர்த்தால், வாழ்க்கையின் அடிப்படை செயல்முறையையும் எதிர்க்கிறீர்கள், இதனால், அனைத்து வகையான வேதனைகளையும் வரவழைத்துக் கொள்வதை தவிர்க்கமுடியாது.

வாழ்க்கை என்பது வெறும் சூழ்நிலைகள்தான். சிலசூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி என்று நமக்கு தெரியும், சில சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி என்று நமக்கு தெரியாது. உங்கள் வாழ்க்கையில், இனிமேல் வரப்போகிற சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்று முன்பே தெரிந்திருந்தால், வாழ்க்கையே மிகவும் சலிப்பாகி, அதிலேயே இறந்து போவீர்கள். அடுத்து வரப்போகும் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாதபோது, அது உங்கள் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், ஆனால், பிரச்சினையாக நினைக்கிறீர்கள். பதினெட்டு வயதில் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அப்படியே நாற்பதிலும் வேண்டும் என்றால், நாற்பதை ஒரு பிரச்சனையாகத்தான் உணர்வீர்கள். பிரச்சனை என்று எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் உள்ளது. வாழ்க்கை எப்படியும் மாறும். நீங்கள் விரும்பும்படி மாறுகிறதா அல்லது தற்செயலாக மாறுகிறதா? அதுமட்டும் தான் கேள்வி.

எப்படி மாறினாலும், அது தேக்கத்தைவிட சிறந்தது, ஏனெனில், மனிதனின் வாழ்வு, தேக்கம் என்பதை பொறுத்துக் கொள்ளாது. "மிட்லைஃப் க்ரைஸிஸ்" (midlife crisis) என்றால், என் வாழ்க்கை ஒரு தேக்கநிலையில் இருக்கிறது என்று அர்த்தம். எல்லாமே அதேதான் - அதேவீடு, அதே பாத்திரம் கழுவுதல், அதே கணவர் - எல்லாமே அதேதான். இந்த "எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது” என்பது நீங்கள் செய்த முடிவு மட்டுமே. மற்றபடி, வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் உங்களது உடலில் நடக்கிறது, உங்கள் மனதில் நடக்கிறது, மாற்றம் அனைத்திலும் நடக்கிறது, அதை கவனிக்க தவறுவது நீங்கள்தான்.

உங்களை சுற்றி உள்ள ஒவ்வொரு இலையையும் கவனித்து பார்த்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், வாழ்க்கையில் மாற்றம் என்பது ஒரு நிலையான செயல்பாடு என்று அறிவீர்கள். எதுவும் எப்போதும் தேங்கி நிற்காது. உள்ளும், வெளியும், அனைத்தும் எப்போதும் சக்திவாய்ந்த ஒரு மாறும் செயல்பாட்டில் உள்ளது. நீங்கள், வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருந்தால் அதை ஒரு பிரச்சனையாக எப்போதும் உணரமாட்டீர்கள். நீங்கள் உங்கள் எண்ணத்துடனும், உணர்ச்சியுடனும் மட்டும் ஈடுபாட்டுடன் இருப்பதால், அது ஒரு பிரச்சினையாக இப்போது இருக்கிறது. அது பிரச்சினையாக இருப்பது நல்லது, இல்லையென்றால், பிறகு போலித்தனத்திலிருந்து எப்படி வெளியேவருவது என்று பார்க்க மாட்டீர்கள். அந்த போலித்தனத்திலேயே நிலை கொள்வீர்கள்.

தற்போது, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, இந்த பிரச்சினை 100% உங்கள் மனம் உருவாக்கியது, உங்கள் உணர்வு உருவாக்கியது - இயற்கையோ, வாழ்க்கையோ, படைப்போ அல்ல - நீங்கள் மட்டுமே உருவாக்கியது. இதை நீங்கள் உணரவில்லை என்றால், பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை உருவாக்கிக் கொண்டே போவீர்கள். நீங்கள் உருவாக்கியது என்று உணர்ந்தால், அதை தடுக்கத் தேவை இல்லை - தானாகவே மறைந்துபோகும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1