முதுமை மோசமானதா?
குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என பாடிப் பழகியவர்கள் நாம். நான் குழந்தை மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி நமக்கு. ஆனால் இங்கு சத்குருவோ முதுமையே சிறப்பு என்கிறார். அத்தனை பேரும் ஆசைப்படும் இளமை இருக்க, முதுமையைப் பற்றி சத்குரு அப்படி என்ன சொல்கிறார்? படித்து மகிழுங்கள்!
 
 

சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 9

குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என பாடிப் பழகியவர்கள் நாம். நான் குழந்தை மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி நமக்கு. ஆனால் இங்கு சத்குருவோ முதுமையே சிறப்பு என்கிறார். அத்தனை பேரும் ஆசைப்படும் இளமை இருக்க, முதுமையைப் பற்றி சத்குரு அப்படி என்ன சொல்கிறார்? படித்து மகிழுங்கள்!

சத்குரு: நான் 6ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஜனாதிபதி இறந்து விட்டார். எங்களுக்கு 2 நாள் விடுமுறை கிடைத்தது. உடனே மாணவர்கள் கூடினோம், ஓ! ஜனாபதிக்கு 2 நாள் என்றால், பிரதம மந்திரி இறந்தால் எவ்வளவு நாள் விடுமுறை?

தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் எல்லாத் தகவல்களையும் நீங்கள் உங்கள் தலைக்குள் வைத்துக் கொள்வது அவசியமில்லை.

மந்திரி இறந்தால்... என்று கணக்குப் போட ஆரம்பித்தோம். ஒவ்வொருவரையும் அன்று எங்களுக்குள் கொன்று கொண்டிருந்தோம். பள்ளிக்கு செல்வது மாணவர்களுக்கு ஏன் இவ்வளவு கசப்பாக இருக்கிறது? உண்மையில் கல்வி என்பது மகழ்ச்சியைத்தானே தரவேண்டும்?

சேகர்: நிச்சயமாக!

சத்குரு: எதையாவது புதிதாகத் தெரிந்து கொள்ளும்போது உங்களுக்குள் உற்சாகம் துள்ளிக் குதிக்கும், இல்லையா? ஆனால் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் விதம் அப்படியில்லை. அதனால்தான் நாம் ஈஷா ஹோம் ஸ்கூலை ஆரம்பித்தோம். நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். இரவு 11, 11.30 மணிக்குக் கூட சில மாணவர்கள் பள்ளி நூலகத்தைத் திறக்குமாறு கெஞ்சுவார்கள்.

ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை பார்த்து விடுகிறேன், 5 நிமிடம் மட்டும் திறந்து விடுங்கள் என்று கெஞ்சுவார்கள். விடை தெரிந்து கொள்ளாமல் அவர்களால் படுக்கச் செல்ல முடியவில்லை. குழந்தைகளின் இந்த இயல்பான ஆர்வத்தையும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தையும் அதிகப்படுத்துவதுதான் இங்குள்ள ஆசிரியர்களின் பணி. ஆசிரியர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.

சேகர்: நீங்கள் இங்கு ஏதாவது புதிய முறையில் கற்றுத் தருகிறீர்களா?

சத்குரு: இங்கு நாங்கள் புதிய விதங்களில் பாடங்களைக் கற்றுத்தருவதில்லை. கல்வி என்பது தகவல் என்றுதான் நான் பார்க்கிறேன். ஒரு முறை இப்படி தூண்டிவிடப்பட்டு, விழிப்புடன் இருக்கும்போது, மாணவர்களுக்கு தகவல் சேகரிப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. எப்படியும் எந்த நேரத்திலும் தகவல்களை சேகரித்துக் கொள்ளலாம்.

மேலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் எல்லாத் தகவல்களையும் நீங்கள் உங்கள் தலைக்குள் வைத்துக் கொள்வதும் தேவையில்லை. எல்லாமே இணையதளத்தில் இருக்கிறது. மனத்தை விழிப்புணர்வாக மட்டும் வைத்துக் கொண்டால் வேண்டும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சேகர்: சரி

சத்குரு: மார்க் வாங்குவது என்று பார்த்தாலும் அவர்கள் நன்றாகவே செய்கிறார்கள். (முதல் முறையாக இந்தப் பள்ளியிலிருந்து 10ம் வகுப்புத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு முதல் மாணவர் ஐசிஎஸ்இ போர்டில், 93% மார்க்குகளும் பெற்றிருந்தார்).

சேகர்: இதேபோன்ற பள்ளிகளை மேலும் எங்காவது ஆரம்பிக்கப் போகிறீர்களா?

சத்குரு: மக்கள் மிகவும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தோம். தென் இந்தியாவில் இப்பள்ளி இருப்பதுபோல் நாட்டின் மற்ற 3 திசைகளிலும் 3 பள்ளிகள் அமைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் வெறும் கட்டிடங்களால் இதுபோன்ற பள்ளியை நிறுவிவிட முடியாது. இந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட மக்கள் கிடைக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. அதுதான் பெரிய சவால்.

ஏனெனில் ஈஷாவில் அப்படிப்பட்ட மக்கள் அதிகமாக இருந்தாலும், அர்ப்பணிப்பு என்பது உலகில் ஒரு அரிதான விஷயமாகி வருகிறது. 'சரி, எனக்கென்ன கிடைக்கும்?' என்ற ரீதியில்தான் மக்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள். 'இப்படிச் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது' என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மக்கள் அர்ப்பணிப்புடன் ஒரு விஷயத்தில் இறங்குவதில்லை. அப்படிப்பட்ட மக்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

AnandaAlai-education3

சேகர்: சரி, குழந்தைப்பருவம் என்பது கள்ளம் கபடமற்ற தன்மை மற்றும்......

சத்குரு: ஒரு குழந்தை கள்ளம் கபடமற்ற தன்மை கொண்டது என்று நான் நினைக்கவில்லை. நான் அதைப்பற்றி பேசவுமில்லை. தனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால், ஒரு குழந்தை கள்ளம் கபடம் கொண்டதாகவும் மாறமுடியும்.

சேகர்: ஆமாம் (சிரிக்கிறார்).

சத்குரு: ஒரு குழந்தையின் அழகு அவன் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவன் என்பதுதான். மற்றபடி அவன் கள்ளம் கபடமற்றவன், அறியாமையில் இருப்பவன் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அவன் வளைந்து கொடுக்கும் தன்மையில் இருக்கிறான். குழந்தையின் முக்கியமான அம்சமே அவனுடைய வளைந்துக் கொடுக்கும் தன்மைதான். இதே தன்மை பெரியவர்களுக்கும வந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

அவர் ஒரு குழந்தைபோல், இவர் ஒரு குழந்தைபோல் என்று சொல்வது, மக்களுக்கு பேஷனாகிவிட்டது. எங்கோ மக்களுக்கு, குழந்தைப் பருவம் என்பது நல்ல விஷயம், வயது முதிர்ந்த பருவம் என்பது கேடான விஷயம் என்பதுபோல் மனதிற்குள் பதிந்துவிட்டது.

பலரும் 'நான் ஒரு குழந்தை போல' என்று சொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் அதை நான் ஒரு நல்ல விஷயமாக நினைக்கவில்லை. உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வெளிவருவதுதானே உங்களுக்கு அழகு? உங்களுடைய வயோதிகத்தை நீங்கள் மிகவும் குழப்பமாகக் கையாள்கிறீர்கள், அதனால்தான் குழந்தைப் பருவத்தை ஆசையுடன் நினைத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் வயது முதிர்ந்த பருவம்தான் சிறந்தது என நான் நினைக்கிறேன்.

சேகர்: ஆனால் வயது முதிர்வதற்குள், கற்றுக் கொள்கிறோம் என்ற பெயரில் ஏராளமான விஷயங்களை நமக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறோம். அப்படி நமக்குள் ஏற்றிக் கொண்டதை எல்லாம் கழற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்த நவீன கல்விமுறையானது நாம் சிறந்த மனிதர்களாக மாறுவதை ஓரளவாவது தடுக்கிறதா...

சத்குரு: சேகர், அதிகமாகத் தெரிந்து கொள்வது பிரச்சனை இல்லை. உங்களுக்குத் தெரிந்தவற்றுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள், அதுதான் உண்மையில் பிரச்சனை. நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் அடையாளம்தான் உங்கள் பிரச்சனை.

சேகர்: சத்குரு, அப்படியென்றால் நாம் அடையாளத்தைப் பற்றி இன்னும் பேசலாம். உண்மையில் நான் யார்? நான் என்று சொல்லும்போது எதனுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன்?


அடுத்த வாரம்...

'நான்' என்று சொல்லும்போது எவை எவைகளோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்? நாம் கொண்டிருக்கும் இந்த அடையாளங்கள் அவசியமா? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதாய் அமைகிறது அடுத்த வாரப் பதிவு.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Good questions by Sekar and enlightening replies by Sathguru. Eager to read the next posting about the old age and the views of Sathguru.