முற்பிறவியைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா?
முன்பிறவிகள் பற்றி அறிந்து கொள்வதில் பயன் உள்ளதா? விழிப்புணர்வுடன் அதைத் தெரிந்து கொள்ள வழிகள் உள்ளதா?
 
 

Question:முன்பிறவிகள் பற்றி அறிந்து கொள்வதில் பயன் உள்ளதா? விழிப்புணர்வுடன் அதைத் தெரிந்து கொள்ள வழிகள் உள்ளதா?

சத்குரு:

நீங்கள் உண்மையில் முற்பிறவி சம்பவங்களை அறிய ஆசைப்பட்டால், உச்சநிலை விழிப்புணர்வுக்கு உங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். அப்போது அது உங்கள் நினைவலைகளை திறக்க வைக்கும். ஆனால் அதில் என்ன பயன் இருக்கிறது? இந்தப் பிறவியில் நடந்த சம்பவங்களின் நினைவுகளையே உங்களால் சமாளிக்க முடியவில்லை. 10 வருடங்கள் முன்பு நடந்த ஒரு செயலுக்கு இப்போது வருத்தப்படுகிறீர்கள். நீங்கள் இந்த நிலையில் இருக்கும்போது 10 பிறவிகள் முன் நடந்தது, தற்போது உங்கள் நினைவிற்கு வந்தால் அது உங்களைப் பைத்தியத்தில் தள்ளிவிடும், இல்லையா? எனவே அதற்கு முயற்சிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் முன் பிறவி என்றழைப்பதெல்லாம் மனதின் ஆழ்மன அடுக்குகளாக உள்ளது. விழிப்புணர்வின் உச்ச நிலைகளுக்கு நீங்கள் உங்களை எடுத்து வந்தால், உள்ளிருந்து ஆட்சி செய்யும் இந்த மனதின் அடுக்குகளை உடைக்க முடியும், கரைக்க முடியும்.

ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரரின் நாய்தான் முந்தைய பிறவியில் உங்கள் கணவராக இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் நாயின் மீது கல்லெறிய ஆரம்பிப்பீர்கள்.

ஈஷாவில் நடக்கும் சம்யமா பயிற்சியென்பது 8 நாள் நடக்கக்கூடிய தீவிர தியான நிகழ்ச்சியாகும். சம்யமாவில் என்ன நடக்கிறது என்பதை நான் கூறினால் ஒன்று பயம் வரும் அல்லது நம்பிக்கையின்மை வரும். உதாரணமாக நீங்கள் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருப்பீர்கள், அப்போது நீங்கள் முழு விழிப்புநிலையில் இருக்கும்போதே, உங்கள் உடல் பாம்பு போல் ஊர்ந்து செல்ல ஆரம்பிப்பதைக் காண்பீர்கள். அந்த செயல் நடப்பது உங்கள் விழிப்பில் இருக்கிறது, அதை நிறுத்தவும் விரும்புகிறீர்கள், ஆனால் உடலானது பாம்பு போல் ஊர்ந்து கொண்டிருக்கும். தியானத்திலிருந்து வெளிவந்து விட்டால் மிகவும் சாதாரண நிலைக்கு வந்துவிடுவீர்கள். தியானத்தில் உட்கார்ந்தால் உடல் மீண்டும் ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கும். சிலருடைய உடல், பறவை தத்தித்தத்தி நடப்பது போலவும், சிலருடைய உடல் நாயைப் போலவோ புலியைப் போலவோ அல்லது ஏதோ ஒரு விலங்கைப் போலவோ சுற்றிவரும். உடல் இப்படி பல வடிவங்கள் எடுக்கின்றது.

ஏன் இப்படி நடக்கிறதென்றால் ஆழமான அடுக்குகளில் பல பரிமாணங்கள் உள்ளன. அவை உங்கள் ஆளுமையில் இருக்காது, ஆனால் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் அவற்றின் தாக்கம் இருக்கும். எனவே சம்யமா போன்ற பயிற்சிகளில் நீங்கள் உச்சநிலை விழிப்புணர்வுகளில் இருக்கும்போது ஆழ்மன அடுக்குகளை விழிப்புணர்வுக்குக் கொண்டு வருகிறீர்கள். அது சக்தி நிலையிலும் உணர்வு நிலையிலும் நடக்கிறது, நினைவு நிலையில் அல்ல. அப்படிச் செய்வதன் மூலம் உங்களுக்குள் பெரிய அளவில் விடுதலையாகிறீர்கள். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது முற்பிறவி பதிவுகளோடு பணிபுரிவது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் முற்பிறவிச் சம்பவங்களை தற்போது நினைவிற்குள் கொண்டுவருவது எந்தப் பயனையும் தராது. அது உங்கள் வாழ்வில் மேலும் சிக்கலைத்தான் கொண்டுவரும்.

ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரரின் நாய்தான் முந்தைய பிறவியில் உங்கள் கணவராக இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் நாயின் மீது கல்லெறிய ஆரம்பிப்பீர்கள். நீங்கள் அந்த நாயை முத்தமிடுவீர்களா அல்லது அதன்மேல் கல்லெறிவீர்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இரண்டுமே ஆபத்தானதுதான். ஏனெனில் அந்த நாய்க்கு தற்போது எதுவும் நினைவில் இருக்காது. கல்லெறிந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்சினைக்கு ஆளாவீர்கள். முத்தம் கொடுத்தாலோ நாயிடம் பிரச்சினைக்கு ஆளாவீர்கள். இரண்டுமே உங்களுக்கு பாதுகாப்பானதல்ல. அது உங்களுக்கு தேவையுமல்ல. ஆனால் நினைவுபடுத்திக் கொள்ளும் செயல்களில் இறங்காமல் அதை உங்கள் அனுபவத்தில் மட்டும் வைத்துக் கொண்டீர்களானால், அது உங்களை விடுதலைக்கு இட்டுச் செல்லும்.

சம்யமா நிகழ்ச்சியில் பல வகை உண்டு. நாம் நடத்துவது கர்ம சம்யமா. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்ட தீவிர விழிப்புணர்வில் இருக்கும்போது அவருடைய விழிப்புணர்வற்ற மனதில் அடுக்குகளாகப் பதிந்திருக்கும் நினைவுகள் மேலெழும்பி கரைந்துவிடுகின்றன. அப்படிச் செய்வதற்கென்று உங்களுக்கு குறிப்புகளோ வழிகாட்டுதல்களோ ஏதும் கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் அதிக விழிப்புணர்வில் வெறுமனே இருக்கும்போதே திடீரென உங்கள் உடல் அந்தச் செயல் முறையில் இருப்பதைக் காண்பீர்கள். மனதில் நடக்கும் விஷயங்கள் எப்போதுமே நம்பத் தகுந்ததல்ல. அது உங்களை ஆயிரம் வழிகளில் ஏமாற்றும். உடலளவில் எது நடக்கிறதோ அது உண்மை, இல்லையா? உங்கள் உடல் எப்போதாவது உங்களிடம் பொய் பேசியிருக்கிறதா? ஆனால் உங்கள் மனம் உங்களிடம் ஆயிரக்கணக்கான பொய் பேசியிருக்கிறது, இல்லையா? எனவேதான் இந்த விஷயங்கள் உடலளவில், சக்திநிலை அளவில் நடக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம், மனதளவில் அல்ல. ஏனெனில் மனம் எப்போதும் உங்களை சொல்ல முடியாத பிரம்மையில் ஆழ்த்தக் கூடியது.

இது போன்ற விஷயங்கள் முறையற்ற வழிகளில் கையாளப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட தம்பதியினர் அந்த ஆண்டில் அனைவரையும் விட அதிகமாக சம்பாதித்திருந்தனர். எனவே நீங்கள் யூகித்துக் கொள்ளலாம், அவர்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்று. அந்த அம்மையார் முற்பிறவி போன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு, ஒரு உளவியல் நிபுணரிடம் சிக்கிக் கொண்டார். அவர் தொலைபேசியில் ஆலோசனை சொல்வதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 90 டாலர் வாங்குபவர். நேரில் ஆலோசனை சொல்வதற்கு இன்னமும் அதிகமாக வாங்குவார்.

அந்த உளவியல் நிபுணர் சொல்வதை இந்த அம்மையார் உறுதியாக நம்புவார். அந்த நிபுணர் இந்த அம்மையாரிடம் `உங்கள் முற்பிறவியில் டாம் குரூய்ஸ் உங்கள் கணவராகவும், ரிச்சர்டு கெரே உங்கள் தந்தையாகவும் இருந்தனர், எனவே நீங்கள் அவர்கள் கண்ணில் படும்படி பார்த்துக்கொண்டால் அவர்களும் உங்களை காலப்போக்கில் அடையாளம் காணலாம்` என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்த அம்மையாரும் ஹாலிவுட் விஷயங்களில் தீவிரமாகி, பெவர்லி ஹில்சில் சில வீடுகளும், அக்கம்பக்கத்தில் சில வீடுகளும் வாங்கி அந்தப்பக்கமே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். டாம் க்ரூய்ஸின் கண்களில் படுவதற்காக பார்ட்டிகள் ஏற்பாடு செய்வதும், வீடுகள் வாங்குவதுமாக அந்த அம்மையார் இருந்ததைக் கண்டு அந்த அம்மையாரின் கணவர் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டார். பிறகு இந்த விஷயம் என் கவனத்திற்கு வந்தது. அந்த அம்மையாரும் எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்தார். முந்தைய பிறவியில் டாம் க்ரூய்ஸ் தனது கணவராக இருந்திருக்கிறார் என்பதில் அந்த அம்மையார் 100% உறுதியாக இருந்தார். எனவே நான் கூறினேன், `ஆமாம், அப்படித்தான், ஆனால் முந்தைய பிறவியில் எனக்கும் டாம் குரூய்ஸைத் தெரியும். அவர் முந்தைய பிறவியில் சகிக்க முடியாத அளவிற்கு அருவருப்பான தோற்றத்துடன் இருந்தார், உங்களுக்கு நினைவிருக்கிறதா?` என்று. அந்த அம்மையார் ஸ்தம்பித்துப் போய்விட்டார். முன்பிறவி விஷயங்கள் இப்படித்தான் மக்களை பைத்தியத்தில் தள்ளுகிறது.

 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

excellent very true

4 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

wow..!