முக்தி இங்கேயே...! - ஜென்குரு கூறியதன் அர்த்தம்?!
கோபம் என்ற அற்ப உணர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வந்தன, எவ்வளவு அசிங்கங்கள் நடந்தன, எத்தனை துன்பங்கள் நேர்ந்தன என்பதைக் கவனித்து வந்தும், அந்த சிறு உணர்ச்சியைத் தாண்டிப்போவது எப்படி என்றுகூட இன்னும் நமக்குப் புரியவில்லையே?
ஜென்னல் பகுதி 20
சீடன் குருவிடம் கேட்டான், “எல்லாப் பாதைகளும் புத்தரின் ராஜ்ஜியத்துக்குத்தான் போய்ச் சேரும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பாதை முக்தியின் வாசலுக்கே நேரடியாக அழைத்துச் செல்லும் என்று சொன்னீர்களே, அந்தப் பாதை எங்கே துவங்குகிறது?”
குரு, சீடன் நின்ற இடத்தைச் சுட்டிக்காட்டி, “இங்கே...” என்றார்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
Subscribe
நீங்கள் முக்திக்குப் போவதானாலும் சரி, மும்பைக்குப் போவதானாலும் சரி, பயணத்தை எங்கே தொடங்கமுடியும்? இப்போது எங்கே இருக்கிறீர்களோ, அங்கே இருந்துதானே புறப்பட முடியும்? அதை விடுத்து, முக்திக்கான பாதை வேறு எங்கோ துவங்குவதாகக் கற்பனை செய்தால், அதிலே சிக்கிப்போவீர்கள்.
இவ்வளவு யுகங்கள் இங்கே வாழ்ந்து இருந்தாலும், இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் மனிதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறான்.
கோபம் என்ற அற்ப உணர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வந்தன, எவ்வளவு அசிங்கங்கள் நடந்தன, எத்தனை துன்பங்கள் நேர்ந்தன என்பதைக் கவனித்து வந்தும், அந்த சிறு உணர்ச்சியைத் தாண்டிப்போவது எப்படி என்றுகூட இன்னும் நமக்குப் புரியவில்லையே?
கற்கால மனிதனுக்கு எப்படி கோபம் வந்ததோ, அப்படித்தானே இன்றைய மனிதனுக்கும் வருகிறது? வெளியேதானே சூழ்நிலைகள் மாறின? ஆயுதங்கள்தானே மாறி இருக்கின்றன? அடிப்படை மாறவே இல்லையே?
ஏன் இந்த நிலை? இப்போது இருக்கும் இடத்தை விட்டு நாம் புறப்படத் தயாராக இல்லை. முதல் அடி எடுத்துவைத்தால்தான், அடுத்த அடி. அதற்கடுத்த அடி என்று ஒரு பயணம் நிகழும். இருக்கும் இடத்தைவிட்டு ஓரடிகூட நகரத் தயாராக இல்லாதவருக்கு, ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல, அடுத்த தெருவுக்கான பயணம்கூட நேராது.
இதைத்தான் ஜென் குரு சீடனுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418