மரண ஊர்வலத்தில் கொண்டாட்டம் சரியா?

நெருக்கமான ஒருவரின் மரணம் என்பது ஓர் இழப்பு அல்லவா? அப்படி இருக்கையில், மரண ஊர்வலத்தில் அமைதியாகச் செல்வதை விடுத்து, சாவைக் கொண்டாடுவதுபோல், ஆடிப்பாடிக் கொண்டு செல்லும் மோசமான வழக்கம் இங்கு ஏன் வந்தது? துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதைக் கொண்டாடலாமா?" இதற்கு சத்குருவின் பதிலென்ன?! அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
 

நெருக்கமான ஒருவரின் மரணம் என்பது ஓர் இழப்பு அல்லவா? அப்படி இருக்கையில், மரண ஊர்வலத்தில் அமைதியாகச் செல்வதை விடுத்து, சாவைக் கொண்டாடுவதுபோல், ஆடிப்பாடிக் கொண்டு செல்லும் மோசமான வழக்கம் இங்கு ஏன் வந்தது? துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதைக் கொண்டாடலாமா?" இதற்கு சத்குருவின் பதிலென்ன?! அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

சத்குரு:

"ஒருவருடைய மரணத்தால், நீங்கள் மிகவும் சோகமாகி துன்பப்பட்டு நின்றால், அவரைப்பற்றி நினைத்துப் பார்க்க நல்ல விஷயங்கள் இல்லையோ என்று தோன்றுகிறது. அவர் உங்கள் வாழ்க்கையில் துக்கமும் துன்பமும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர் உங்கள் வாழ்க்கைக்கு வளம் ஊட்டியிருந்தால், அதை நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் அது.

ஒரு மரணத்திற்கு நீங்கள் காரணமாக இல்லாதவரை, அதைக் கொண்டாடுவது தவறே அல்ல. ஏனென்றால், சிறைப்பட்டு இருந்த உயிருக்குக் கிடைத்த விடுதலை அது. கொண்டாட விருப்பம் இல்லாதபட்சத்தில், மரணத்தை நளினமாகக் கையாளவாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதைப்பெரிய துக்கமாக அனுஷ்டிக்காமல், இறந்தவர் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியது எப்படி என்று யோசியுங்கள்.

அவர் உங்கள் வாழ்க்கைக்கு வளம் ஊட்டியிருந்தால், அதை நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் அது. அவர் உங்களை மேம்படுத்தியதை உலகுக்கு மேம்பட்டவராக நடந்துகொள்ளாமல் வேறு எப்படித் தெரிவிப்பீர்கள்?

ஆனந்தமாக வாழ்ந்தவர்களே வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் சாவையும் ஆனந்தமாகவே ஏற்றுக்கொள்வார்கள்.

பள்ளிக்கூடத்தைவிட்டு விலகும்போது, பழைய நண்பர்களை விட்டு விலகுகிறீர்கள். கண்களில் நீர் நிறைந்து இருந்தாலும், அந்தப் பிரிதலைச் சந்தோஷமாக அடுத்தக்கட்டத்துக்குப் போகிற மனநிறைவுடன்தானே கொண்டாடுகிறீர்கள்? கல்லூரிப் படிப்பை முடிக்கும்போதும், பணியில் பதவி உயர்வு பெற்று மாற்றலாகிப் போகும்போதும், அதைக் கொண்டாடத் தயாராகத்தானே இருக்கிறீர்கள்? அதுபோல்தான் இது.

மரணம் என்பது வாழ்வின் அடுத்த பரிமாணம். ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறவே விரும்புவார்கள். அதை ஓர் இழப்பாகக் கருதி, முனகிக்கொண்டே இருக்கமாட்டார்கள்.

அந்தச் சாது ஒரு கிராமத்திற்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து இருந்தார். அவரிடம் ஒரு கிழிந்த துணிப்பை மட்டும் இருந்தது. அவரைத் தேடிக்கொண்டு, கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஓடிவந்தார்.

'நேற்று என் கனவில் ஒரு தேவதை வந்தாள். மரத்தடியில் ஒரு சாது அமர்ந்திருப்பார். அவரிடம் விலைமதிப்பற்ற ஒரு வைரக்கல் இருக்கிறது. அதைப்பெற்று உன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள் என்று அந்தத் தேவதை சொன்னாள். அந்த வைரம் எங்கே ஐயா?' என்று ரகசியமான குரலில் கேட்டார்.

'ஓ, அந்த வைரத்தைக் கேட்கிறாயா?' சாது தன் கிழிசல் பையில் கைவிட்டு ஒரு வைரக்கல்லை எடுத்தார். அது கிட்டத்தட்ட ஒரு தேங்காய் அளவு பெரிதாக இருந்தது. மாலை வெளிச்சத்தில் தகதகவென்று ஜொலித்தது. அதைவிடப் பெரிய வைரக்கல் உலகில் வேறு எதுவும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதைக் கையில் வாங்கிய விவசாயிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. யார் கண்ணிலாவது பட்டால், அவன் உயிரைப் பறித்தாவது அந்த வைரத்தைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவனுக்குத் திடீரென்று பயம் வந்தது. அதைத் தன்னிடம் இருந்த பையில் ஒளித்து மார்போடு அணைத்தபடி, தன் ஊரை நோக்கி நடந்தான்.

இந்த அதிர்ஷ்டம் பற்றி அவனுடன் சேர்ந்து குடிக்கும் நண்பர்களிடம் சொன்னால், அதில் யாராவது பேராசைப்பட்டுத் துரோகம் செய்துவிடக்கூடும். மனைவி ஓட்டைவாய். அவளிடம் ரகசியங்கள் தங்காது. உறவினர்களிடம் சொன்னால், அவர்கள் வயிற்றெரிச்சல் கொண்டு எதையாவது செய்துவிடுவார்கள்.

யோசிக்க... யோசிக்க... குழப்பம் மிகுந்தது. அந்த வைரத்தை எங்கே, யாரிடம், எப்படிக் கொண்டுபோய் விற்பது என்பதும் புரியவில்லை. தலையணைக்கு அடியில் அதை வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டான். தூக்கம் வரவில்லை. வைரம் விற்ற பணம் அவனுடைய சமூக அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று கற்பனை செய்தான். அரசனுடைய அரண்மனையை விலை பேசலாமா என்றெல்லாம் யோசனை தறிகெட்டு ஓடியது.

அடுத்தசில நாட்களுக்கு என்னென்னவோ எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன. ஒரு கட்டத்தில் தூக்கம் தொலைந்துபோய், நிம்மதியற்று பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அந்த வைரத்தை எடுத்துக்கொண்டு, அந்தச் சாதுவிடம் ஓடினான்.

அவர் அதே மரத்தடியில் நிச்சலனமாக அமர்ந்திருந்தார்...

'ஐயா, அன்றைக்கு நான் கேட்டவுடன் இந்த வைரக்கல்லை ஒரு கணம்கூட யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியென்றால், இதைவிட விலைமதிப்பற்ற ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அது என்ன ஐயா?' என்று கேட்டான்.

சாது புன்னகைத்தார். 'அதைப் பற்றிப் பேச வந்திருக்கிறாயா? நல்லது முதலில் அந்தக் கல்லைத் தூர எறிந்துவிட்டு வா' என்றார்.

இப்படி பொருள் தன்மை உடைய எதையும் விலைமதிப்பற்றது என்று இந்தக் கலாச்சாரத்தில் பார்க்கவில்லை.

நமக்கு முன்பு இந்தப் பூமிக்கு வந்த எந்தத் தலைமுறையினரும் இத்தனை வசதிகளையும், விஞ்ஞான, மருத்துவ முன்னேற்றங்களையும் கண்டிருக்கவில்லை. ஆனாலும்கூட இதை ஆனந்தமான தலைமுறை என்றோ, அமைதியான தலைமுறை என்றோ, அன்பான தலைமுறை என்றோ நம்மால் சொல்லிக்கொள்ள முடிகிறதா? இல்லை, ஏன்? நம் கவனம் எல்லாம் புற வளர்ச்சிகளில் ஆழ்ந்து இருக்கிறதே தவிர, உள்வளர்ச்சி பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்துவிட்டோம்.

வெளிச்சூழ்நிலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள்தான் இந்த உடல்மீது அதிக பற்றுக்கொண்டு இருப்பார்கள். நிரந்தரமாக இங்கே வாழமுடியுமா என்று பேராசைப்படுவார்கள்.

அதைத் தகர்ப்பதுபோல், பிறப்பை எப்படிக் கொண்டாடுகிறோமோ, இறப்பையும் அப்படிக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும் என்றே இந்தக் கலாச்சாரம் சொல்லிவந்திருக்கிறது. உலகின் முன்னணியில் இருக்கும் வேறு எந்தக் கலாச்சாரத்திலும் மரணத்தைக் கொண்டாடும் வழக்கம் இல்லை.

இறந்தவருடைய பிரிவை நீங்கள் கொண்டாடுவதாக அமையக்கூடாது. அதேசமயம், அவருடைய பங்களிப்பு, உங்கள் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொடுத்தது என்ற நினைப்பு உங்களுக்கு ஆனந்தம் தரவேண்டும். உங்களைச் சிறைப்படுத்தாத உறவாக அது அமைந்து, அவர் மூலம் நீங்கள் பெற்றது உயர்வாக இருந்து, அப்படிப் பெற்றதை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க நேர்ந்து இருந்தால், அவருடைய நினைவு உங்களிடம் துக்கம் கொண்டு வராது. நெகிழ்ச்சியும், ஆனந்தமும், கொண்டாட்டமும்தான் கொண்டுவரும். அப்படிப்பட்ட கொண்டாட்டத்தை ஆதரித்த அற்புதக் கலாச்சாரம் இது.

இப்போது உண்மையான கொண்டாட்டம் வறண்டுபோய், அதன் ஆழமான நோக்கம் தேய்ந்துபோய், சடங்கின் மிச்சமே இருக்கிறது. கொண்டாட்டம் என்றால் மூச்சுமுட்டக் குடித்துவிட்டு, இரைச்சலான மேளத்துக்கு இஷ்டப்படி நடனம் ஆடுவது என்று நோக்கம் குறுகிவிட்டது வருத்தத்திற்கு உரியது.

நாம் எல்லோரும் ஒரு தற்காலிகப் பயணத்தில் சக பயணிகள்தாம். இங்கு ஒருவருக்கு மற்றவர் துணையாக இருந்து, அடுத்தவர் வாழ்க்கைக்கு மேன்மையான, அற்புதமான பங்களிப்பைத் தரவேண்டும். இதை உணர்த்தும் வெளிப்பாடாக, மரணத்தைக் கொண்டாடுவது என்பது ஓர் உண்மை உணர்தலாக இங்கு பேணப்பட்டது. மறுபடியும் அதே நோக்கத்துடன் மரணத்தைக் கொண்டாடும் வழக்கத்தை இங்கு கொண்டுவந்தால், அது பாராட்டப்பட வேண்டியதாகும்".

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1