மரம் நடுவதால் நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றம்?!

மரம் நடுவதை ஒரு சமூகத் தொண்டாக நினைத்துக்கொள்வது இன்று சகஜமான ஒன்றுதான்! ஆனால், ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதாலும், அதன் வளர்ச்சியை கவனிப்பதாலும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து சத்குரு சொல்வது, ஒரு புதிய தரிசனத்தை நமக்கு வழங்குகிறது!
மரம் நடுவதால் நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றம்?!, Maram naduvathal nam ulnilaiyil yerpadum matram
 

மரம் நடுவதை ஒரு சமூகத் தொண்டாக நினைத்துக்கொள்வது இன்று சகஜமான ஒன்றுதான்! ஆனால், ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதாலும், அதன் வளர்ச்சியை கவனிப்பதாலும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து சத்குரு சொல்வது, ஒரு புதிய தரிசனத்தை நமக்கு வழங்குகிறது!

சத்குரு:

இந்த வாழ்க்கையில், ஒருவர், தன்னைவிட பெரிதான ஏதோ ஒன்றை உருவாக்க முடிகிறபோது, அவர் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. இன்று நீங்கள் உங்களைவிட மிகச்சிறிதான ஒரு மரக்கன்றை நடுகிறீர்கள், சில மாதங்களிலேயே உங்கள் கண்ணெதிரிலேயே அது உங்களைவிட மிகப்பெரிதாக வளரும்போது அளவற்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைவீர்கள்.

மரம் இல்லையேல் நமக்கு சுவாசம் இல்லை. மரம் நடுவது நமது உடல்நலனை மட்டுமல்ல, இந்த பூமியின் நலனையே பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட்டு தினமும் நீர் ஊற்றி வாருங்கள். மரம் நட்டு வளர்ப்பதை ஏதோ ஒரு வேலையாகவோ அல்லது இந்த சமூகத்திற்கு செய்யக்கூடிய ஒரு தொண்டாகவோ அல்லது அந்த மரத்திற்கே செய்யக் கூடிய தொண்டாகவோ நினைத்து செய்யக்கூடாது. மேலும் வெறுமனே ‘மரம் நடுகிறேன், நீர் ஊற்றுகிறேன்’ என்றில்லாமல் அதன் வளர்ச்சியை, ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு இலையும் அது துளிர்த்து வளர்வதிலிருந்து, மிகவும் ஈடுபாட்டுடன், நீங்கள் கவனிக்க வேண்டும். தினமும் 5 நிமிடம் செலவழித்து மரத்தைப் பாருங்கள், இலைகள் துளிர்த்திருப்பதை ஈடுபாட்டுடன் இரசியுங்கள்.

பிறகு இதே ஈடுபாட்டை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துங்கள். நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் எவ்வளவு ஆழமான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அந்த செயலிலிருந்து நமக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கையை மிகவும் மனநிறைவுடன் வாழ்பவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் ஈடுபாட்டோடு செய்வதை நீங்கள் கவனிக்க முடியும். எனவே நீங்கள் ஒவ்வொருவருமே எந்த ஒரு செயலையும் மிகவும் ஈடுபாட்டோடு செய்து வாழ்க்கையை மன நிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1