சத்குருவிடம் கேட்போம் வாருங்கள்... சில கேள்விகளும் அதற்கு சத்குருவின் பதில்களும் இங்கே...

Question: இன்றைய நவீன உலகின் முரண்பாடுகளையும், நவீன மனிதனின் துயரங்களையும் நீக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

‘நவீன மனிதன்’ என்று யாருமே இல்லை. ஆரம்பகால குகை மனிதன் கல்வியறிவைப் பெற்றிருப்பதைத் தான் நான் பார்க்கிறேன். எங்கே நவீன மனிதன் இருக்கிறான் சொல்லுங்கள்? ‘நவீன மனிதன்’ என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான வருடங்களாக நாகரீகம், கலாசாரம், பாரம்பரியம், கல்வி இவ்வளவு இருந்தும் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் குகை மனிதன் எப்படிக் கோபப்பட்டானோ, அதேவிதமாக இன்றைய மனிதனும் கோபம் கொள்கிறான் இல்லையா? எனவே, உங்கள் உணர்ச்சிகளும், மனமும் சிறிது கூட மாற்றம் அடைய வில்லை. இன்னமும் நீங்கள் ஒரு குகை மனிதனைப் போலத்தான் இருக்கிறீர்கள். ஆனால் நவநாகரிமாக உடை அணிந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்கள் ஆயுதங்கள், தொழில்நுட்பத்தால் மேம்பட்டிருக்கின்றன. குகை மனிதன் காலத்தில் ஒரு குச்சியைக் கொண்டுதான் அவன் போருக்கு சென்றிருந்தான். ஆனால் இன்று பலவிதமான போர்க்கருவிகளை உருவாக்கி இருக்கிறீர்கள். ஆனாலும் இன்னும் ஒரு குகை மனிதனைப் போலத்தான் இருக்கிறீர்கள். அதேவிதமான கோபம், அதேவிதமான பொறாமை, அதேவிதமான வெறுப்பு எல்லாமே அப்படியே இருக்கிறது. எனவே, நவீன மனிதன் என்று யாருமே இல்லை. அந்த குகை மனிதன் இன்னமும் உங்களுக்குள்தான் இருக்கிறான்.

Question: இன்றைய இளைஞர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

சத்குரு:

‘இளைஞர்கள்’ என்றால், ‘மனித குலத்தை உருவாக்குபவர்கள்’ என்று அர்த்தம். அவர்கள், வளர்ச்சியடைந்த மனிதகுலம் அல்ல. இன்னமும் அவர்களுக்கு வாய்ப்புக்கள், சாத்தியங்கள் உள்ளன. அவர்களால் உலகில் புதிய சாத்தியங்களை உருவாக்க முடியும். ஆனால் முதிய தலைமுறை தங்களுக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்கான விருப்பம் இல்லாமல் இருக்கும்போது, இளைஞர்கள் மட்டும் அற்புதமாக எதையேனும் செய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பது வெற்றுக்கனவுதான். ஏனென்றால், இளைஞர்கள் தன்மை என்னவென்றால், அவர்களுடைய சக்திநிலை மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட, இன்னமும் எதிர்செயல் ஆற்றும் நிலையில் தான் உள்ளது. எனவே, முதிய தலைமுறையினர் உற்சாகமாக ஊக்குவிக்கும் உணர்வு இல்லாமல் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்களேயானால், ‘இளைஞர்கள் மிகப் பெரும் அற்புதத்தை நிகழ்த்தி விடுவார்கள்’ என்று என்னால் நினைக்க முடியவில்லை. இளைஞர்கள், முதியவர்களை விட மிக மோசமான காரியங்களை செய்யக்கூடும். எனவே மிக முக்கியமானது உங்கள் வயது என்னவாக இருந்தாலும், உங்களாலும் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்பதை அவர்களிடம் நீங்கள் காண்பிக்க வேண்டும்.

Question: உலக தலைவர்களுக்கும், தொழில்துறை தலைவர்களுக்கும் உள்ள பொறுப்பை பற்றி சொல்ல முடியுமா?

சத்குரு:

எல்லா தலைவர்களும், அவர்கள் பொருளாதாரத்துறை தலைவராக இருந்தாலும் சரி, அரசியல்துறை அல்லது இராணுவத்துறை தலைவராக இருந்தாலும் சரி, எத்தகைய அமைப்புகளை மனித குலத்திற்காக செயல்பட நாம் அமைத்திருந்தாலும் சரி அதன் நோக்கம், மனித குல நலவாழ்வை உருவாக்கத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது மிக மிக முக்கியமானது. இதை மறந்து விடாமல் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்களேயானால், அது மிகவும் அற்புதமாக இருக்கும். ஆனால், அவர்கள் வகித்து வரும் பதவியின் மீதும், பணியாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்களின் மீதும் அவர்களுக்கு தீவிரமாக பிடிப்பு ஏற்பட்டு, பல நேரங்களில் இவையெல்லாம் மனித குல நலவாழ்வுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை மறந்து, அதற்கு எதிராக பணியாற்றும் சூழல் இங்கே நிலவுகிறது.