Question: நானும் என் மனைவியும் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். திருமணம் செய்துகொண்டோம். எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்த ஆனந்தக் கிளர்ச்சி இப்போது இல்லை. ஒருவரைப் பார்த்து மற்றவருக்கு எழும் உற்சாகம் தோய்ந்துவிட்டது. எங்களுக்குள் அன்பு குறையவில்லை. ஆனால் இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. திருமணம் செய்துகொண்ட ஒரே கட்டாயத்துக்காகக் கடைசிவரை சலிப்புடன் சேர்ந்தே இருக்க வேண்டுமா? பரஸ்பரம் அன்புடன் இருக்கும்போதே விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடலாமா? என்ன செய்வது சத்குரு?

சத்குரு:

உங்களுக்காவது எட்டு வருடங்களில் இதைப் பற்றிய கவனம் வந்துவிட்டது. இதுபற்றிய பிரக்ஞை இன்றி 40, 50 வருடங்கள் கட்டாயத்தின் பேரில் சேர்ந்து இருந்தே மரத்துப்போன வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்க்கிறேன்.

கணவனோ, மனைவியோ அடுத்தவரை வெறும் கிளர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக்கொண்டு இருந்தால், இந்தப் பிரச்சினை வரத்தான் செய்யும். உங்கள் மனைவியை வெறும் கேளிக்கைக்காக மட்டுமே சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இந்த உறவில் இருந்து அவரை விடுவிப்பது அவருக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

காதல் என்பது திருமணத்திற்கு முந்தின கட்டம் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள். ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது அவளிடம் காட்டிய அதே நெருக்கமான, அர்ப்பணிப்பான உணர்வை, மனைவியாக அவளை ஆக்கிக்கொண்டபின் காட்டத்தேவை இல்லை என்று நீங்களாக முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது, உங்கள் காதலில் லயிப்பு இல்லை. கடமை உணர்வுதான் இருக்கிறது. அதனால்தான், காதல் உலர்ந்துவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காதலித்த காலம் வேறு. திருமண வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் காலம் வேறு. நல்லதோ கெட்டதோ இருவரிடமும் சில மாற்றங்கள் நேர்ந்திருக்கும். அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளத் தவறியதால், இப்போது சலிப்பு, கட்டாயம் என்ற வார்த்தைகள் முளைத்துவிட்டன.

உங்கள் காதலில் லயிப்பு இல்லை. கடமை உணர்வுதான் இருக்கிறது. அதனால்தான், காதல் உலர்ந்துவிட்டது.

சங்கரன்பிள்ளை அடிக்கடி சோர்ந்து சோர்ந்து விழுந்தார். அவருடைய மனைவி டாக்டரிடம் அழைத்துப் போனாள். சங்கரன்பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர், அவர் மனைவியைத் தனியே அழைத்தார்.

'உங்கள் கணவர் மனஅழுத்தம் காரணமாக, மிக வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாகி இருக்கிறார். காலையில் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவு, மதியத்தில் நிறைய பச்சைக் காய்கறிகள் சேர்த்த உணவு என்று தினமும் கொடுத்து வாருங்கள். குடிப்பதற்குக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே கொடுங்கள். கடினமான வீட்டுவேலைகள் எதையும் அவரைச் செய்யவிடாதீர்கள். அவரிடம் கோபமே காட்டாமல், இன்முகத்துடன் பேசுங்கள். உங்கள் பிரச்சினைகளைச் சொல்லி, அவர் மனதில் பாரத்தை ஏற்றாதீர்கள். அது அவர் இதயத்தைப் பலவீனமாக்கிவிடும். எப்போதும் காதலுடன் நடந்துகொள்ளுங்கள். குழந்தையைப்போல் அவரை பார்த்துக்கொண்டால், நோய் பூரண குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதையெல்லாம் செய்யத்தவறினால், அவர் உயிரை யாராலும் காப்பாற்றமுடியாது'.

டாக்டர் சொன்னதை சங்கரன்பிள்ளையின் மனைவி மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டாள். வீட்டுக்குத் திரும்பும் வழியில் சங்கரன்பிள்ளை கேட்டார். உன்னைத் தனியே அழைத்துப்போய் டாக்டர் என்ன சொன்னார்?

மனைவி அவரைத் திரும்பி பார்த்தாள், 'உங்களை வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய் தாக்கியிருக்கிறது என்று ஆரம்பித்து, உங்களை யாராலும் காப்பாற்றமுடியாது என்று சொல்லி முடித்தார்' என்றாள் அவள். எப்பேர்ப்பட்ட மனைவி, எப்பேர்ப்பட்ட உறவு.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். காதல் தானாகச் சாகாது. நீங்கள் வலியக் கொன்றால்தான் அது உயிர்விடும். உடல்ரீதியாக அணுகாமல், உணர்வுரீதியாக அணுகி, முறையான பராமரிப்பைக் காதலுக்கு அளித்துப் பாருங்கள். அது உயிர்ப்போடு மீண்டும் உங்களுக்குள் பூத்துக் குலுங்கும்.

உங்கள் வாழ்க்கைத் துணையைச் சிறு இன்பங்களுக்காகவோ, கேளிக்கைக்காகவோ வந்தவர் என்று பார்க்காமல், உண்மையான அன்புடன் உங்களின் ஒரு பகுதியாக நீங்கள் சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால், இன்றைக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது. வாழ்க்கையின் ஆழங்களுக்குச் செல்லாமல், மேலோட்டமாக நழுவிச் செல்லப் பார்க்கையில்தான், இது பூதாகாரமான பிரச்சினையாகத் தெரியும். விவாகரத்து இதற்குத் தீர்வு இல்லை. இருக்கும் உறவை உடைப்பதிலோ, புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வதிலோ, வாழ்க்கை மேம்பட்டுவிடாது.

உடல்ரீதியான ஈர்ப்பு, உணர்ச்சிகளைத் தூண்டும் கிளர்ச்சி, இவற்றைத் தாண்டிப் பார்க்கவேண்டியது காதல்!

சுவீடன் தேசத்தில் ஃபக்கின் (Fahkin) என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அங்கே சுரங்க வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள் பூமிக்குள் புதைந்துகிடந்த ஓர் உடலைக் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு நேர்ந்த ஒரு நிலச்சரிவில் பூமிக்கு அடியில் சிக்கிக்கொண்ட இளைஞனுடைய உடல் அது. அங்கிருந்த குளிர்ந்த தன்மை காரணமாக அந்த உடல் அழுகிப்போகாமல், அதே இளமையுடன் இருந்தது. அடையாளம் காண்பதற்காக, அந்த உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கூடிய மக்களில் 70 வயதுக் கிழவி ஒருத்தி இருந்தாள். தன் ஊன்றுகோல்களைப் போட்டுவிட்டு, அவள் அந்த இளைஞனின் உடல்மீது விழுந்தாள். அணைத்துக்கொண்டு அழுதாள். இளமை மாறாமல் சிலையாகிப் போயிருந்த ஒருவனும், சுருக்கங்கள் விழுந்த சருமத்துடன் இருந்த கிழவியும் அரவணைத்துக் கிடந்தது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. நிலச்சரிவில் சிக்கி மறைந்த தன் காதலனை 50 வருடங்களுக்குப் பின்பு பார்த்து, அவள் உணர்ச்சிவசப்பட்டு இருந்த நிலை, இதல்லவா உண்மையான அன்பு... இதல்லவா உண்மையான காதல்

வாழ்க்கை என்பது பல கட்டங்களைக் கொண்டது. குழந்தையாக இருந்தபோது எது உற்சாகம் தந்ததோ, அது இளமையில் தொடர்வது இல்லை. இளமையில் எது கிளர்ச்சி தந்ததோ, அது அடுத்தகட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்துவது இல்லை. உங்கள் உறவில் அதே பழைய கிளர்ச்சியையும், பரபரப்பையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், வாழ்க்கையில் நீங்கள் பயணப்படாமல் தேங்கி நின்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை அனுபவித்து உணர, ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு ஆனந்தமாக, நேர்த்தியாக, விருப்பத்துடன் பயணம் செய்யவேண்டும். அதில்தான் சந்தோஷத்தின் சூட்சுமம் இருக்கிறது.

வாழ்க்கையை ரசிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் காதல் சாகசங்களைவிட வேறு பல அம்சங்கள் இருக்கின்றன. இருவருக்குள்ளும் அன்பு விலகவில்லை என்கிறீர்கள். பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் இருக்கிறீர்கள். அப்புறம் என்ன? உடல், மனம், உணர்ச்சி இவற்றைத் தாண்டிய ஒரு முக்கியமான பரிமாணம் வாழ்க்கைக்கு இருக்கிறது. வாழ்க்கையின் அந்த மூலத்தை உய்த்து உணர்வதையே நோக்கமாகக் கொண்டு, இருவரும் ஒன்றாக இணைந்தே பயணப்படலாம்.

உங்களுக்குள் இருக்கும் அந்த அடிப்படைச் சக்தியுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டால், உயிர் உடலைப் பிரியும் கடைசித் தருணம்வரை, ஒவ்வொரு கணமும் ஆனந்தம்தான்... கொண்டாட்டம்தான்... உற்சாகம்தான். சலிப்பான தருணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை".