சத்குரு: பாண்டவர்கள் தங்களின் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவந்த பிறகு, திரௌபதியின் சுயம்வரத்தில் வெற்றி பெறுகிறான் அர்ஜுனன். சகோதரர்கள் ஐவருக்கும் இளவரசியுடன் திருமணம் நடக்கிறது. அதிர்ந்து போன கௌரவர்கள், அவமானமும் ஆவேசமும் அடைந்தார்கள். இறந்துவிட்டார்கள் என்று தாங்கள் நம்பிக்கொண்டிருந்த பாண்டவர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை அவர்களால் அனுமானிக்கவே முடியவில்லை. நெருப்பில் எரிந்த சடலங்களை வேறு அவர்கள் கண்டிருந்தார்கள் - ஆனால் இப்போது மீண்டும் பாண்டவர்கள் தங்கள் முன்‌னே உயிருடன் வந்து நிற்பது புரியாமல் திண்டாடினார்கள்.

அப்போது முதல், இதுவரை இல்லாத அளவுக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான மோதலில் பொறி பறக்கத் துவங்கியது‌, இப்போது அரண்மனைக்குள்ளேயே.

திரௌபதியை திருமணம் செய்ததால் துருபதனுடன் ஏற்பட்டிருந்த உறவு பாண்டவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வலிமையை சேர்த்திருந்தது. எல்லாவற்றையும்விட, அர்ஜுனனின் சுயம்வர வெற்றியை தங்களது பெருத்த அவமானமாக கௌரவர்கள் பார்த்தார்கள். தங்கள் நூறு பேரில் யாருக்குமே போட்டியை வெல்லும் தகுதி இல்லை என்பதும்‌, கர்ணனை பங்கேற்கவே தகுதியில்லாதவன் என்று போட்டியில் கலந்துகொள்ளவே விடாமல் தடை செய்ததும் அவர்களை பெரிதாக பாதித்திருந்தது‌.

தன் மனைவியுடனும், வேத விற்பன்னருடனும் அரண்மனை திரும்பிய யுதிஷ்டிரன், அரியணை மீது தனக்குள்ள உரிமையை கேட்டான். எதுவும் செய்ய முடியாமல் திருதராஷ்டிரன், அடுத்த அரசனாக யுதிஷ்டிரனுக்கு இளவரச பட்டம் சூட்டினான். அப்போது முதல், இதுவரை இல்லாத அளவுக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான மோதலில் பொறி பறக்கத் துவங்கியது‌, இப்போது அரண்மனைக்குள்ளேயே. வெளிப்படையாக உடலளவில் அவர்கள் மோதிக்கொள்ளவில்லை, ஆனால் இருதரப்பிலும் எதிர்தரப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தவே வேலை நடந்தது.

இந்த அதிகார மோதலால், சாம்ராஜ்ய நிர்வாகம் சீர்குலைந்து நாடே தவித்தது. ஒரு பிரதிநிதியாக, தான் இதற்கு ஒரு முடிவுகட்டி தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைத்தார் பீஷ்மர். "யுதிஷ்டிரனுக்கு நாம் முடிசூட்டுவோம். இளவரசனாகவே இவரை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை - இவரை நாம் பேரரசனாக்குவோம், இதனால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். துரியோதனனுக்கும், மற்றவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளை கொடுப்போம்" என்று முன்மொழிந்தார்.

துரியோதனனின் எதிர்ப்பு

இப்படி அறிவிக்கப்பட்டதும், துரியோதனன் ஆவேசமடைந்தான். நேராக தனது தந்தையிடம் சென்று, "வருங்கால அரசனாகவே என்னை வளர்த்தீர்கள். ஆனால் இப்போது நீங்களே காட்டிலிருந்து வந்து சேர்ந்திருக்கும் இந்த பயல்களிடம் அடிமையாக அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்கிறீர்கள். அதிலும், பீமனிடமிருந்து வரும் உத்தரவை நான் செயல்படுத்தும் கொடுமையை நீங்களே ஏற்படுத்துகிறீர்கள். அவனோ, என்னை குறிவைத்து தினமும் அவமானப்படுத்துவான். நான் என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்" என்றான்.

வழிவழியாக வந்த வழக்கப்படி, தற்போதைய தலைமுறையில் மூத்த பிள்ளைக்கே - இப்போது யுதிஷ்டிரனுக்கே அரசாளும் உரிமை இருந்தது. எனவே யுதிஷ்டிரனை அரசனாக அறிவித்தார் பீஷ்மர்.

தற்கொலை செய்யப்போவதாக துரியோதனன் மிரட்டினாலும், பீஷ்மர், "யுதிஷ்டிரன் அரசனாக இருப்பான். இதை நிலைநிறுத்துவதுதான் தேசத்தின் நலனுக்கு நல்லது" என்பதில் உறுதியாக இருந்தார். இது திருதராஷ்டிரனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியும் இல்லாமல் போனது. ஏனெனில், பெயரளவுக்குதான் அரசனாக இருந்தான் திருதராஷ்டிரன். பார்வைத் திறன் குறைபாட்டால், எதை செய்து முடிக்க வேண்டுமென்றாலும் அவன் மற்றவர்களையே சார்ந்திருந்தான்.

அனைவரிலும் மூத்தவராக, அரச பிரதிநிதியாக, விவேகமுள்ளவராக, வீரம் பொருந்தியவரான பீஷ்மரே உண்மையில் அரசாட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் வலிமையும் கொண்டவராக இருந்தார். அடுத்ததாக முடிசூட்டப்பட வேண்டியது யுதிஷ்டிரனுக்கு என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் துரியோதனன் தொடர்ந்து தன் தந்தையிடம், "இதை ஏற்கவே முடியாது! நான் என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்" என்று தொடர்ந்து மிரட்டலாக நச்சரித்துக்கொண்டே இருந்தான். அவனது சகோதரர்கள், "நாங்கள் காந்தார‌ தேசம் சென்று அங்கே ஏதாவது மலைகளில் இருந்து கொள்கிறோம்" என்றார்கள். அவர்களின் தாய் பிறந்த மண் அது. திருதராஷ்டிரனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தனது மகன்கள் நாடாள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது அவனுக்கு தெரியவில்லை. வழிவழியாக வந்த வழக்கப்படி, தற்போதைய தலைமுறையில் மூத்த பிள்ளைக்கே - இப்போது யுதிஷ்டிரனுக்கே அரசாளும் உரிமை இருந்தது. எனவே யுதிஷ்டிரனை அரசனாக அறிவித்தார் பீஷ்மர்.

தர்மத்தின் மீது யுதிஷ்டிரனின் பக்தி

முடிசூட்டும் நாள் நெருங்கியது. இடைப்பட்ட காலத்தில், முனிவர்களுடன் நீண்ட பொழுதுகள் செலவிட்டு நீதி நூல்களை வாசித்து பெரும் ஞானத்தை சேர்த்திருந்த யுதிஷ்டிரனின்‌ எண்ணம் முழுவதும் தர்மா மற்றும் கர்மா - சரி மற்றும் தவறு எனும் அடிப்படைகளால் ஆளப்பட்டது. உண்மையாகவும், நேர்மையாகவும், இயல்பாகவும் இருக்க விரும்பினான் யுதிஷ்டிரன்.

கூடியிருந்த அரசவையில் யுதிஷ்டிரனை‌ அரசனாக அறிவித்தார் பீஷ்மர். அனைவரும் கொண்டாடி ஆரவாரம் செய்தார்கள். கைகூப்பி எழுந்த யுதிஷ்டிரன், "தேசத்திற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன். ஆனால், தன் காலத்திற்கு திருதராஷ்டிரனே அரசராக ஆட்சியில் இருக்கட்டும். நான் அவரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுக்கொள்கிறேன். கூடவே, அரசனாக துரியோதனனுக்கும் சமமான பங்கு இருக்கட்டும். அவனும் எனது சகோதரன்தானே" என்றார்.

சாந்தனுவுக்கு பிறகு முதன்முறையாக சுயமாக ஆட்சி செலுத்தக்கூடிய ஒருவனை குரு வம்சத்தின் அரியணையில் அமர்த்தி வைக்க முயற்சி செய்ததால், தேவையில்லாமல் மீண்டும் அந்த சூழ்நிலை திருகிக் கொண்டு நின்றது

துரியோதனனுக்கும், அவனது சகோதரர்களுக்கும் கண்கள் தெறித்து விழுந்தது. "என்ன? நமது காதுகள் சரியாகத்தான் கேட்கிறதா?" என்று தங்களுக்குள் பார்த்துக்கொண்டார்கள்‌. இவ்வளவு போராட்டங்களை கடந்து, அரச பதவி கையில் கிடைத்ததும், அதை சரிசமமாக பங்கிட்டுக்கொள்கிறேன் என்கிறானே யுதிஷ்டிரன். நம்பமுடியாமல் தவித்தார்கள் கௌரவர்கள். இதுவே தர்மம் என்றும், நீதி என்றும் நினைத்தான் யுதிஷ்டிரன்.

"நீண்ட காலமாக இந்த தேசத்தை நான் சுமந்துவிட்டேன்" என்று கைகளை விரக்தியுடன் வீசினார் பீஷ்மர். அரசனாக பதவியில் இல்லாமலேயே மூன்று தலைமுறைகளாக தேசத்தை வழிநடத்தி வந்திருந்தார் பீஷ்மர். ஒரு பிரம்மச்சாரியாக இருந்தாலும், தன் வம்சத்தை வழிநடத்தும் எல்லா வலிகளும் அவருக்கிருந்தது, ஆனால் ஒரு குடும்பஸ்தனுக்கான இன்பங்கள் மட்டும் அவருக்கில்லை. மற்ற யாரைவிடவும் அதிக தியாகம் செய்திருந்தார் பீஷ்மர். சாந்தனுவுக்கு பிறகு முதன்முறையாக சுயமாக ஆட்சி செலுத்தக்கூடிய ஒருவனை குரு வம்சத்தின் அரியணையில் அமர்த்தி வைக்க முயற்சி செய்ததால், தேவையில்லாமல் மீண்டும் அந்த சூழ்நிலை திருகிக் கொண்டு நின்றது.

நான்கு பாண்டவ சகோதரர்களுக்குள்ளும் கோபம் கொப்பளித்தது. ஆனால் தங்களின் தகப்பனாரின் மரணப்படுக்கையில் அவர்கள் ஒரு சபதம் ஏற்றிருந்தார்கள். அந்த கணம் முதல், தங்கள் மூத்த சகோதரனான யுதிஷ்டிரன் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவோம் என்பதுதான் அது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

இந்த தேசத்தில் இதுவே சட்டமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தந்தை வாழும் காலம்வரை, அவர் என்ன சொன்னாலும் மகன்கள் அதன் வழி நடந்தார்கள். பொதுவாக மூத்த தலைமுறையினர் தங்கள் அதிகாரத்தை இளைய தலைமுறை மீது செலுத்துவதாகவே இது இருந்தது. புரு, சாந்தனு என வழிவழியாக இப்படியே தொடர்ந்திருந்தாலும், துரியோதனன் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாக இருந்தது. பாண்டவ சகோதரர்கள் நால்வரும் யுதிஷ்டிரனை தங்களின் தந்தையின் உருவாகவே பார்த்தார்கள். எப்போதும் அவரது வார்த்தையை மதித்து நடந்தார்கள்.

ஆனால் இதை பீமனால் பொறுக்கவே முடியவில்லை. இவ்வளவு சிரமங்களை குடும்பமே சந்தித்து, கடைசியாக அரச பதவி கிடைத்து, தங்களுக்கு எல்லா அதிகாரமும் கிடைக்கவிருந்த நிலையில், மூத்தவர் இப்படி துரியோதனனுடனும் கௌரவர்களுடனும் தாமாக முன்வந்து அரசுரிமையை பங்கிட்டுக் கொள்கிறேன் என்கிறார். ஆனால் தனது மூத்த சகோதரனை எதிர்த்து சண்டையிடுவது எங்கே, எதிர்த்து பேசவே முடியவில்லை பீமனால். அதிர்ந்தவனாக அரசவையை விட்டு வெளியேறினான் பீமன்.

பீமனின் அபாய ஆட்டம்

இதற்கிடையே, பீமன் வழக்கம்போல நன்றாக உணவு உண்டு, யாரையாவது வம்பிழுத்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தான். அதுதான் அவனுக்கு தேவைப்பட்டதும்கூட - வயிறு நிறையும் வரை உணவு, தொடர்ந்து அந்த உணவுக்கேற்ற சண்டை. உடல் வலிமை, பலம், ஆற்றல் என எதுவுமே இவனுக்கு குறையவே குறையாதோ எனும்படி எப்போதும் தீவிரம் பொங்கியது பீமனிடம். பீமன் ஒரு பெண் மீது காதலில் விழுந்தான். ஹரியானா பகுதிகளில் ஜலந்தரா என்றும், உத்திரப்பிரதேசத்தில் வலந்தரா என்றும், வங்காளத்தில் பலந்தரா என்றும் இந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படுகிறது

துரியோதனனின் மனைவியான பானுமதியின் சகோதரிதான் ஜலந்தரா. பீமனுக்கும் ஜலந்தராவுக்கும் இடையேயான இந்த உறவு நிச்சயம் சிக்கலைக் கொண்டு வருவதாக இருந்தது.

இதுதான் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலை - இங்கே பல மொழிகளும் பேச்சு வழக்குகளும் இருப்பதால் ஒருவேளை நீங்கள் புதுதில்லியில் இருந்து கொல்கத்தா வழியாக தமிழகம் வரை பயணம் செய்தால், உங்கள் பெயர் வாசுதேவ் என்பதாக இருந்தால், நீங்கள் கொல்கத்தாவை அடையும்போது அது பாசுதேவ் ஆகியிருக்கும். தமிழகம் வந்து சேர்கையில் அதுவே வாசுதேவன் ஆகிவிடும். இப்படியே அந்த பெண்ணின் பெயரும் ஜலந்தரா, வலந்தரா அல்லது பலந்தரா என்று நீங்கள் தேசத்தில் வாழும் பகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டது.

துரியோதனனின் மனைவியான பானுமதியின் சகோதரிதான் ஜலந்தரா. பீமனுக்கும் ஜலந்தராவுக்கும் இடையேயான இந்த உறவு நிச்சயம் சிக்கலைக் கொண்டு வருவதாக இருந்தது. மிக விரிவாகவே இந்த இருவரின் காதல் பற்றிய கதை சொல்லப்படுகிறது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழும்போது பீமன் ஜலந்தராவை பார்க்க விரும்புகிறான், அது அரண்மனையில் சாத்தியமில்லை. எனவே உடற்பயிற்சி கூடத்தில் சந்திக்க விரும்புவதாக குறிப்பு அனுப்புகிறான் பீமன். அங்கேதான் தன் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்தான் பீமன். ஒவ்வொரு நாளும் தன் தசைகளுக்கு வலுவேற்றிக் கொள்வதும், தண்டாயுத பயிற்சியில் ஈடுபடுவதும் பீமனின் வழக்கமாக இருந்தது.

ரகசியமாக இரவு நேரத்தில் பீமனை பாலையாவின் உடற்பயிற்சி கூடத்தில் வந்து சந்திக்கிறாள் ஜலந்தரா. பெரும் மல்யுத்த வீரரான பாலையா நூறு வயதைக் கடந்தவர். ஒட்டுமொத்த அரச வம்சத்தினருக்கும் மல்யுத்த பயிற்சியளிக்கும் பொறுப்பிலிருந்த சோமேஸ்வரின் தந்தையுமாவார்‌.

பிறகு மீண்டும் அரண்மனை திரும்பும் ஜலந்தராவுக்கு துணையாக பீமனும் சென்றான். அப்போது ஒரு உளவாளி தன்னை தொடர்வதை கவனித்தான் பீமன். லாவகமாக உளவாளியை மடக்கிய பீமன், அவன் தலையை நசுக்கிட முனைந்தான்‌. பீமனிடம் கருணை காட்ட இறைஞ்சினான் உளவாளி. "என்னை உயிருடன் மட்டும் விட்டுவிடுங்கள், உங்களுக்கு ஆர்வம் தரும் ஒரு செய்தியை நான் சொல்கிறேன்" என்றான்‌. அவனது கழுத்தை பிடித்து தூக்கிய பீமன், "அப்படியென்ன சொல்லப்போகிறாய் என்னிடம்?" என்றபடியே உளவாளியை அந்தரத்தில் நிறுத்தி உலுக்கினான். திணறலுடன் உளவாளி, "அவர்கள் உங்களுக்கு எதிராக ஏதோ செய்கிறார்கள், இன்னும் ஒரு மாத காலத்தில் நீங்கள் இறந்துவிடுவது நிச்சயம் " என்றான். "என்ன பேசுகிறாய் நீ? நான் என்ன ஒரு மாதத்தில் சாகப் போவது? இன்னும் ஒரு நிமிடத்திற்குள் நீதான் சாகப்போகிறாய்" என்றபடியே தன் பிடியை இறுக்கினான் பீமன். "நதியின் மறுகரையில் இருக்கும் அகோரி மூலமாக நீங்கள் சாகவேண்டும் என்று யாகம் நடத்துகிறார்கள். துச்சாதனனும், சகுனியும் இப்போது அங்கேதான் யாகத்தில் இருக்கிறார்கள்‌. நான் வேண்டுமானால் அந்த இடத்தை உங்களுக்கு காட்டுகிறேன்" என்று கதறினான் உளவாளி.

விசித்திரமான அகோரி

பீமனும் உளவாளியும் சத்தமின்றி ஒரு படகில் ஏறி நதியைக் கடந்தார்கள். அங்கே ஒரு குடிசை இருந்தது. அகோரியின் குடிசைதான் அது. அகோரிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மறைஞானிகள். இன்றும் அவர்கள் நம் தேசத்தில் இருக்கிறார்கள் - நீங்கள் பார்க்கக்கூடிய யோகிகளிலேயே மிக ஆக்ரோஷமான, அதேசமயம் விசித்திரமானவர்கள் இவர்கள். இன்றும், சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் இயல்பு என கருதும் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவே அகோரிகள் வாழ்கிறார்கள். அவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பது யாராலும் புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கிறது.

அவர் மிக விசித்திரமான உயிராக இருந்தார் - பீமன்கூட பயந்திருந்தான். நடப்பதைப் பார்த்து மிரண்டு போயிருந்த துச்சாதனனும் சகுனியும் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்திருந்தார்கள்.

இந்த அகோரி மிக வினோதமான காரியங்களை செய்து கொண்டிருந்தார். துச்சாதனனும் சகுனியும் நெருப்பு வளர்க்கப்பட்டிருந்த யாகத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள்; ஆக்ரோஷமான உச்சரிப்பில் மந்திரங்களை அகோரி உச்சரித்துக் கொண்டிருந்தார். குடிசைக்கு பின்னால் மறைந்திருந்து பீமனும் உளவாளியும் நடப்பதை கவனித்தார்கள். பல்வேறு மந்திர முழக்கங்களுக்கு பிறகு மிக ஆக்ரோஷமான வடிவில் தேவி தோன்றினாள். மோன நிலையிலிருந்த அகோரி, வேண்டியதை கேளுங்கள் என்று சகுனியிடமும் துச்சாதனனிடமும் சைகையில் காட்டினார்.

துச்சாதனன், "எங்களுக்கு பீஷ்மர் இறந்துவிட வேண்டும்" என்றான். தேவி, "அது சாத்தியமில்லை. தன் மரணத்தை நிர்ணயிக்கும் வரம் பெற்றவர் அவர். வேறு யார்?" என்றாள். இருவரும்‌ ஒரே குரலில், "அப்படியானால் கிருஷ்ணர் இறக்கட்டும்" என்றார்கள். மீண்டும் தேவி‌, "சாத்தியமில்லை, அவர் ஒரு அவதாரம்; அவரது சொந்த விருப்பத்தில்தான் அவருக்கு மரணம் நிகழும்" என்றாள். இவர்கள் இருவரும்தான் முக்கியப்புள்ளிகளாக இருந்தார்கள் - இவர்கள் இருவரும் இறந்துவிட்டால், எல்லாமே தங்கள் கையில் வந்து விழுந்துவிடும் என்று நம்பினார்கள். "வேறு யார்?" சீறினாள் தேவி. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒரே நேரத்தில், ஒருமித்த குரலில், "பீமன், அவன் இறக்கவேண்டும்" என்றார்கள்.

ஆனால், தேவையான‌ வேலைகளை செய்து யாகத்தை பூர்த்தி செய்யும் முன்பாக குடிசையின் கூரையை பீமன் ஓங்கி அடித்து வீழ்த்தவே, அது யாக குண்டத்தில் விழுந்து வெடித்தெழுந்து எல்லா பக்கமும் நெருப்பு பரவியது. மொத்த யாகமும் சீர்குலைந்தது, எதிர்பாராதவிதமாக அகோரி அந்த நெருப்பிற்குள் தள்ளப்பட்டார்.

தன்னில் நெருப்பு பற்றிக்கொண்டதும் அப்படியே கால்களை மடித்து அமர்ந்த நிலையில், கண்கள் திறந்திருக்க, சிறு சப்தமும் குரல்வளையில் இருந்து எழாமல் அகோரியின் உடல் சாம்பலாக எரிந்து முடிந்தது. அவர் மிக விசித்திரமான உயிராக இருந்தார் - பீமன்கூட பயந்திருந்தான். நடப்பதைப் பார்த்து மிரண்டு போயிருந்த துச்சாதனனும் சகுனியும் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்திருந்தார்கள்.

மீண்டும் படகுக்கு திரும்பியதும், உளவாளியை கழுத்தோடு பிடித்து நதியில் மூழ்கடித்தான் பீமன். நடந்ததைப் பற்றி வேறு யாரிடமும் அவன் பேசுவதை பீமன் விரும்பவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு, ஹஸ்தினாபுரத்தின் சூழ்நிலை இதற்குமுன் இல்லாத அளவுக்கு நிலையற்றதாக தடுமாறத் துவங்கியது. அரசனாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தாலும், திருதராஷ்டிரனிடம் இருந்து உத்தரவு பெற்றுக் கொண்டதுடன், தனது அதிகாரத்தை துரியோதனனுடனும் யுதிஷ்டிரன் பகிர்ந்து கொண்டதால், முடிவுகள் ஒரு முடிவுக்கு வராமல் எதுவுமே முன்னே நகரமுடியாமல் நின்றது.

தொடரும்...

IYO-Blog-Mid-Banner