குழந்தைகள் எந்த அளவு சுதந்திரமாக இருக்கலாம்?

"குழந்தைகளுக்கு பெற்றோர் எவ்வளவு தூரம் சுதந்திரம் வழங்குவது?" என சத்குருவிடம் வி.வி.எஸ்.லக்ஷ்மண் கேட்கிறார்.
 

வி.வி.எஸ்.லக்ஷ்மண்: பெற்றோராக குழந்தைகளை வளர்ப்பது பற்றிய உண்மையறிய விரும்புகிறேன். ஒரு குழந்தையாக, இளைஞனாக, நான் சுதந்திரமாக இருக்க விரும்பினேன், எனது நியமங்களின்படியே வாழ்க்கையை வாழ விரும்பினேன். எல்லா தலைமுறையினரும் இது பொருந்தும் என நான் நினைக்கிறேன். நம் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து, அவர்களை சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதிப்பது சரியா? சரியென்றால் எவ்வளவு தூரம் அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது? சரியாக குழந்தைகளை வளர்க்க பெற்றோர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சத்குரு:

குழந்தைகளை நீங்கள் வளர்க்க வேண்டியதில்லை, அவர்கள் வளர அனுமதித்தால் போதும்.

நமஸ்காரம் லக்ஷ்மண். கிரிக்கெட் களத்தில் உங்கள் கைகளில் ஒளிந்திருக்கும் திறமைகளை நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம். குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை, நம் குழந்தைகளை நாம் வளர்க்கவேண்டும் என்ற இந்த கருத்து, மேற்கிலிருந்து நமக்கு தொற்றிக்கொண்டது. கால்நடைகளைத்தான் நீங்கள் வளர்க்க வேண்டும், மனிதர்களை நீங்கள் வளர்க்கத் தேவையில்லை. குழந்தைகளை நீங்கள் வளர்க்க வேண்டியதில்லை, அவர்கள் வளர அனுமதித்தால் போதும்.

அன்பு, ஆனந்தம், மற்றும் பொறுப்புணர்வு நிறைந்த ஒரு சூழ்நிலையை மட்டுமே நீங்கள் உருவாக்கவேண்டும். உங்கள் கேள்வியில் சுதந்திரம் என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தினீர்கள். சுதந்திரம் என்பது கெட்ட வார்த்தை, அதை நீங்கள் உச்சரிக்கூடாது. உங்கள் குழந்தைகளும் அந்தச் சொல்லை பயன்படுத்தப் பழகக்கூடாது. நீங்கள் எப்போதும் ஒரு பொறுப்புணர்வை அவர்கள் வாழ்க்கைக்குள் உருவாக்க வேண்டும். அவர்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம், வளர்ச்சி, வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களுக்கும் பதில்கொடுக்கும் திறமை இவற்றுக்கான பொறுப்புணர்வை எடுத்துவரவேண்டும். தேவையான பொறுப்புணர்வுடன் அவர்கள் வாழ்ந்தால், சுதந்திரம் என்பது அதன் விளைவாக வருவது.

நமக்கு விளைவுகள் மீதுதான் ஆர்வம், அதை அடைவதற்கான வழிமுறைமேல் ஆர்வமில்லாமல் போய்விட்டது.

உலகில் நம்மிடம் இருக்கும் அடிப்படையான பிரச்சனையே, நம் கவனம் கிடைக்கும் பலன்கள் மீது இருப்பதுதான். நமக்கு விளைவுகள் மீதுதான் ஆர்வம், அதை அடைவதற்கான வழிமுறைமேல் ஆர்வமில்லாமல் போய்விட்டது. தோட்டத்தில் பூக்கள் வேண்டுமென்றால், நீங்கள் பூக்கள் பற்றி பேசவேண்டாம். நீங்கள் நல்ல தோட்டக்காரராக இருந்தால் பூக்கள் பற்றி ஒருபோதும் பேசமாட்டீர்கள். மண், உரம், தண்ணீர், சூரிய ஒளி பற்றி பேசுவீர்கள். இவற்றை சரியாக நிர்வகித்தால், அழகிய மலர்கள் கிடைக்கும்.

அதேபோல ஒரு குழந்தைகள் அழகாக மலரத் தேவையான சூழ்நிலைகளை நீங்கள் நிர்வகித்தால், குழந்தைகள் மலர்வார்கள். ஆனால் அவரவர் மனதிலிருக்கும் அச்சுக்கேர்ப்ப அவர்களை வார்த்து வளர்த்தெடுக்கப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் எதிர்க்கத்தான் செய்யும், ஏனென்றால் மனதில் நீங்கள் உருவாக்கும் அச்சினுள் எந்தவொரு உயிரும் பொருந்தமுடியாது. உயிரால் மனதின் அச்சுக்குள் பொருந்தமுடியாது, மனம் என்பது உயிருக்குள் பொருந்தவேண்டும்.

அதனால் குழந்தை வளர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை ஓரமாக வைத்துவிட்டு, அன்பு, ஆனந்தம் மற்றும் பொறுப்புணர்வு நிறைந்த ஒரு சூழலை உருவாக்கினால் போதும். எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகள் தங்கள் வீட்டில் மனக்காழ்ப்பு, பொறாமை, எரிச்சல், மனச்சோர்வு, கோபம், ஆகியவற்றை எள்ளளவும் பார்க்காதிருக்கட்டும். அப்போது உங்கள் குழந்தைகள் முற்றிலும் அற்புதமாக மலர்வதைக் காண்பீர்கள். நீங்கள் பலன்கள் மேல் மட்டுமே கவனம் வைத்து வழிமுறையை கவனிக்கத் தவறினால், நீங்கள் விரும்பும் விஷயங்கள் வெறும் கனவாகவே இருக்கும். ஆனால் அதற்கான வழிமுறையை கவனித்துவந்தால், பலன்கள் தன்னால் வரும்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!