Question: சத்குரு, ஒரு தம்பதி குழந்தையில்லாமல் இருப்பதற்கு மருத்துவரீதியாக இல்லாமல் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். (எல்லோரும் சிரிக்கிறார்கள்) ஏன் எல்லோரும் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்? ஒரு காரணம் என்னவென்றால், உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு இயற்கையிலேயே ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஆழமான ஈடுபாடு வேண்டும் என்ற ஏக்கம் இருப்பதால்தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு வாழ்க்கையில் உள்ள ஈடுபாடு இந்த உயிரியல் தன்மையுடையது மட்டுமே. வேறு மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது இப்படியிருக்கத் தேவையில்லை. ஆனால் நிறைய மனிதர்களுக்கு இது இப்படித்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் தேடுவது ஈடுபாட்டைத்தான்.

உங்களுக்கு உண்மையிலேயே குழந்தை வளர்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால் நிறைய குழந்தைகள் தங்களை வளர்ப்பதற்கு யாருமில்லாமல் இருக்கிறார்கள். நாம் அதற்கு ஏதாவது செய்வோம்.

உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு தடவை ஒரு பிராம்மாண்டமான ஈடுபாடு இருந்துவிட்டால் குழந்தை வேண்டும் என்கிற ஆசை மறைந்துவிடும். பொதுவாக நீங்கள் இந்த சமூக அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது. அது தேவையில்லை. அல்லது உங்களுக்கு உண்மையிலேயே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது மிகவும் நல்லது. இந்த உலகத்தில் நிறைய குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் எதுவுமே இல்லை. தற்பொழுது மனிதகுலம் அழிந்துவிடும் என்ற அபாயமும் இல்லை.

அந்த மாதிரி ஏதாவது அபாயம் இருந்தால் எப்படி இனப்பெருக்கம் செய்வது என்பதற்கு ஒரு யோகா சொல்லித் தருவேன். (அனைவரும் சிரிக்கிறார்கள்) ஆமாம் (சிரிக்கிறார்) இப்பொழுது அந்த மாதிரி அபாயம் எதுவுமில்லை. மக்கள் தொகை பெருகும் என்ற அபாயம்தான் இருக்கிறது. அதனால் நாம் அந்த வழிகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டாம். அந்த திசைகளில் செல்வது பொறுப்பற்ற செயல் ஆகும்.

ஏன் எனக்கு குழந்தை இல்லை என்று காரணங்களை ஆராயாதீர்கள். உண்மை என்னவென்றால், உங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்த துன்பமும் இல்லை. நீங்கள் புதிதாகத் திருமணமானவர் போல் எப்போதும் இருக்கலாம். (எல்லோரும் சிரிக்கிறார்கள்) தினமும் நீங்கள் இது ஒரு தேன்நிலவு என்று நினைத்து உங்களது இஷ்டப்படி வாழலாம். ஆனால் நீங்கள் அந்த ஈடுபாட்டை இழந்து விடுகிறீர்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவர் மேல் உங்களது ஈடுபாடு குறைந்துவிடுகிறது. எனவே உங்களுடன் விளையாட ஒரு புதிய பொம்மை வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அதனால் நீங்கள் ஒரு குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். எப்போதும் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்காக நீங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. இது குழந்தையை இந்த உலகிற்குக் கொண்டு வர இது ஒரு நல்ல வழியல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக 99% குழந்தைகள் உலகில் இந்த மாதிரி தான் பிறக்கிறார்கள். உங்களது தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக நடக்கிறது. இது இந்த மாதிரி நடக்கக் கூடாது.

இவ்வுலகின் புராதன ஆன்மீகக் கலாச்சாரத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்வது முழுதும் வித்தியாசமான வழியில் கையாளப்பட்டது. குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பு, சமூகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு மட்டும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வுடனும், வாய்ப்புடனும் இருந்தால் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த மாதிரி விஷயங்கள் தற்பொழுது நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் குழந்தை இல்லை என்பதை ஒரு பெரிய விஷயமாக்காதீர்கள். இந்த உயிர் (தன்னைச் சுட்டிக்காட்டி) முழுமையானது. இது இனப்பெருக்கம் செய்வதால் மட்டுமே முழுமையாகும் என்று சொல்ல முடியாது. சிலர் ஒரு டஜன் குழந்தைகளைக் கூட பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த வகையிலாவது முழுமையானவர்கள் என்று கூற முடியுமா? இல்லவே இல்லை.

நீங்கள் எப்படியாவது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இயற்கை உங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களுக்கெல்லாம் அடிபணியாதீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே குழந்தை வளர்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால் நிறைய குழந்தைகள் தங்களை வளர்ப்பதற்கு யாருமில்லாமல் இருக்கிறார்கள். நாம் அதற்கு ஏதாவது செய்வோம். எல்லா வகையான மருந்துகளையும் மற்றும் உடலைக் கையாள்வதற்கான வழிகளையும் பயன்படுத்தி உங்களுக்கு தீங்கை வருவித்துக் கொள்ளாதீர்கள். அதற்கும் தாண்டி உங்களுக்கு குழந்தை பிறந்தால், அதற்கு ஏதாவது கோளாறு இருந்தால் அதையும் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் தேவையற்றவை.